Tuesday 19 March 2019

செட்டியாரும் செயற்கை நுண்ணறிவும்


    நான் மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது சென்னிமலைச் செட்டியாரைக் கண்டு வியந்து நிற்பேன். அவரது நெற்றி நாமத்தைக் கண்டா அல்லது  நாள் முழுவதும் உட்கார்ந்தே கிடந்ததால் உண்டான அவரது தொப்பையைக் கண்டா இல்லை இல்லை அவரது நுண்ணறிவைக் கண்டு. எவ்வளவு பெரிய பெருக்கல் வகுத்தலாக இருந்தாலும் மனக்கணக்காகச் சொல்லுவார்; நொடிப்பொழுதில் சொல்லுவார்.

    கடைப்பையன் பொட்டலம் கட்டி முடித்ததும் உரக்கச் சொல்லுவான். செட்டியார் ஒரு முழம் நீளத் தாளில் எழுதி உரிய தொகையைக் குறிப்பிட்டு நொடியில் கூட்டி இவ்வளவு என்று சொல்லி விடுவார். இல்லம் சேர்ந்து ஓய்வாக அதைச் சரிபார்ப்பேன். ஒரு போதும் அவர் கணக்குத் தவறியதில்லை.

   அவர் காலம் முடிந்தது. அவர் பையன் பரந்தாமன் கடைப் பொறுப்பேற்றான். அவன் தன் நுண்ணறிவை நம்பாமல் (இருந்தால்தானே நம்புவதற்கு) ஒரு கணினியை வைத்துக்கொண்டான். கணினி ஆளுநரையும் வைத்துக்கொண்டான். அவனுக்கு வேலை மிகவும் எளிதானது.

 இப்படி உதவிக்கு வந்த இயந்திரங்களை காலப்போக்கில் மனிதன் தன் தேவைக்கேற்ப செயற்கை நுண்ணறிவுடன் செயல்பட வைத்துவிட்டான்.

    இன்று பரவலாகக் காதில் விழும் செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) என்பது வேறொன்றுமில்லை. மனிதனைப் போன்று ஓர் இயந்திரம் நுண்ணறிவுடன் செயல்படுவதைச் செயற்கை நுண்ணறிவு எனலாம். ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் என்றால் Artificial intelligence is the intelligence displayed by machines, in contrast with the natural intelligence displayed by humans எனச் சொல்லலாம்.

   ஒரு கார் நிறுவனம், “எங்கள் கார் செயற்கை நுண்ணறிவு கொண்டது” என விளம்பரப் படுத்தியது. நேரில் சென்று விளக்கம் கேட்டேன்.

   “இந்தக் காரில் உள்ள கையகலக் கணினி காரின் உரிமையாளரை மட்டும்தான் கார் ஓட்ட அனுமதிக்கும். மேலும் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் கார் ஓட்டினால் இந்தக் கணினி பெரும் ஒலி எழுப்பிக் கூச்சலிடும். இருக்கையில் அமர்ந்து உடனே இருக்கைப் பட்டையைப் போடாவிட்டால் கார் இம்மியளவும் நகராமல் முரண்டு பிடிக்கும். இங்கே பாருங்கள். இது ஓர் உணரி(sensor). இது ஓட்டுநர் மது அருந்திய நிலையில்  காரை இயக்க அனுமதிக்காது.” என்று சொல்லச் சொல்ல எனக்கு வியப்பில் மயக்கமே வந்துவிட்டது.

    அலிபாபா என்றொரு குழுமம் ஒரு செயற்கை நுண்ணறிவுத் திறன் மிகுந்த படிக்கும் இயந்திரத்தை உருவாக்கியது. அமெரிக்காவிலுள்ள ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகம் உரைநடைப் பகுதியை உரக்கப்படிக்கும் தேர்வை நடத்தியது. அதில் பங்கேற்ற மாணவர்களைவிட இந்த இயந்திரம் அதிக பதிப்பெண் பெற்று அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது! அது மட்டுமா? அதனிடம் கேட்கப்பட்ட ஒரு இலட்சம் விநாடி வினாக்களுக்கு சரியான விடைகளைச் சொல்லி அசத்தியதை நாளேடுகள் கதை கதையாய் எழுதின.

   மனிதன் உருவாக்கிய இயந்திரம் மனிதனைப் புறமுதுகு காட்டி ஓடச்செய்கிறது!

    வெளிநாடுகளில்  உணவு, மருந்து மற்றும் தபால் போன்றவற்றை வீட்டு வாயிலில் போட்டுச் செல்லும் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மும்பையில் உள்ள சில விடுதிகளில் இயந்திர மனிதர்கள் விருந்தினரை வரவேற்று வேண்டியதைச் செய்கின்றன.

   இன்னும் சில நாடுகளில் ஓட்டுநர் இல்லா வாடகைக் கார்கள் புழக்கத்தில் உள்ளன. அதன் காரணமாக வேலையிழந்த ஓட்டுநர்கள் வேறு வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

    இப்போது கழிப்பறைகளில் நாம் சிறுநீர் கழித்து முடித்ததும் தானே தண்ணீர்க்குழாய் திறந்து நீரைப்பாய்ச்சித் தூய்மை செய்கிறது. கழுவுவதற்குக் கையை நீட்டினால் குழாயிலிருந்து தண்ணீர் வருகிறது; கையை விலக்கினால் நின்று விடுகிறது. தெரு விளக்குகள் கதிரவன் உதிக்கையில் அணைந்து விடுகின்றன; மறையும்போது ஒளிர்கின்றன. Blue tooth எனப்படும் நீலப்பல் தொழில் நுட்பத்தால் இன்று தகவல் பரிமாற்றம் கண நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது. இவை எல்லாம் செயற்கை நுண்ணறிவின் விந்தைகளே.

     இவ்வளவு ஏன்? நம் கையின் ஆறாம் விரலாக மாறிவிட்ட திறன்பேசி நமது நினைவாற்றலை மழுங்கச் செய்துவிட்டது. மனைவியின் அலைபேசி எண்ணைக்கூட அதைக்கேட்டுதானே சொல்ல வேண்டியிருக்கிறது? மெல்ல மெல்ல நம்மை மதி ஊனம் (Cognitive impairment)உடையவர்களாக மாற்றுகிறதோ  என ஐயுற வேண்டியுள்ளது.

    நெசவும் உழவும் இயந்திரம் மயமாவதை காந்தியடிகள் ஏன் எதிர்த்தார் என்பது இப்போதுதான் புரிகிறது.

  அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சே என்பது இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கும் பொருந்துமா?

    செயற்கை நுண்ணறிவின் வருகை ஒரு வரமா அல்லது சாபமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முனைவர் .கோவிந்தராஜூ,
மனநல ஆலோசகர், கரூர்


7 comments:

 1. அருமையான கட்டுரை ஐயா.

  கண்டிப்பாக அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே!..வரம் என்றால் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே மற்றபடி சாபம். எனவே நாமும் கத்தியை நாம் எதற்குப் பயபடுத்துகிறோமோ அப்படித்தான் இதையும் பயன்படுத்த வேண்டும்.

  இதைப் பற்றி ஒரு கதை நான் எழுதியிருந்தேன். இயற்கை வலியது என்று...

  கீதா

  ReplyDelete
 2. சாபத்தின் வரம் ஐயா... நன்றி...

  ReplyDelete
 3. சிறப்பான கட்டுரை. எல்லாம் இங்கே இயந்திர மயம்.

  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கொள்வது எப்போது...

  ReplyDelete
 4. திண்டுக்கல்லாரை வழிமொழிகின்றேன்

  ReplyDelete
 5. செயற்கை நுண்ணறிவு சாபமய்யா. என்ன செய்வது. அறிவியல் யுகத்தில் இவற்றையெல்லாம் வேறுவழியின்றி எதிர்கொண்டே ஆகவேண்டியுள்ளது. அதிலுள்ள சாதகமானவற்றை மற்றும் எடுத்துக்கொள்வோம்.

  ReplyDelete
 6. "உணரி, நீலப்பல், திறன்பேசி, மதி ஊனம்" அப்பப்பா..... நல்ல தமிழ்ச் சொல்லாடல். உடன் ஒரு மெல்லிய நகைச்சுவை. ஒரு பட்டிமன்ற நடுவரின் இறுதி உரை போல தீர்ப்பை நோக்கி கட்டுரையை நகர்த்திச் சென்ற லயம் அருமை அண்ணா..!
  உங்களது வலைப்பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுவதற்கு எங்களையே தயார் படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.

  ReplyDelete
 7. திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பதிவு தொடர்பான முகநூல் பதிவில் திரு மணி.மாறன் உடன் உங்களைக் கண்டேன். மகிழ்ச்சி ஐயா.

  ReplyDelete