Friday 8 March 2019

ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ

   உலக மகளிர் தினத்தில் உலகறிந்த பெருமைசால் பெண்மணிகள் குறித்து எழுதிக் கொண்டிருந்த நான் இவ்வாண்டு அவ்வளவாக அறிமுகம் இல்லாத அதே சமயம் சாதித்துக்காட்டிய ஒரு பெண்மணியைப் பற்றி எழுத விரும்பினேன்.

  வலைப்பூ வாசகர்கள் இக்கட்டுரையைப் படித்து முடித்ததும், “ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ” என்று பாடத் தொடங்குவார்கள் என்பது மட்டும் உறுதி.

   இந்தச் சாதனைப் பெண்மணிக்கு வந்த சோதனைகள்தாம் எத்தனை எத்தனை! மூளை வளர்ச்சியில்லாத குழந்தை பிறப்பு, எதிர்பாராத வகையில் கணவர் இறப்பு, வாழ வேண்டிய வயதில் மகளின் மறைவு, தொடர்ந்து மருமகன் மறைவு,  பேரக் குழந்தைகளைப் படிக்கவைத்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு, மகனின் கல்லூரிக் கட்டணச் சுமை

    இன்று விருதுகளோடு வலம் வரும் இவர், அன்று பட்டபாடு தறிபடாத பாடு என்றால் அது மிகையாகாது. கணவர் இருக்கும் வரை வீடு உண்டு தான் உண்டு என்று இருந்தவர், கணவர் இறந்து காரியங்கள் முடிந்ததும் ஒரு முடிவு எடுத்தார்.

  வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதே அவர் எடுத்த முடிவு.

 கணவர் விட்டுச் சென்ற சொற்ப விளைநிலத்தில் தானே இறங்கி உழுதார்; சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத அவர் துணிந்து ட்ராக்டர் ஓட்டினார்; பாத்தி கட்டினார்; பயிர் நட்டார்; அமோக விளைச்சல் கண்டு மகிழ்ந்தார். ஆனால் அடுத்த ஆண்டே எல்லாம் தலை கீழானது. வானம் பொய்த்தது. விளை நிலம் பாளம் பாளமாய் வெடித்தது. ஆழ்துளைக் கிணறுகள் வறண்டன; இந்நிலை தொடரவே ஏதேனும் உருப்படியாக செய்தாக வேண்டும் என எண்ணிச் செயலில் இறங்கினார்.

   ஊர்ப் பஞ்சாயத்தில் முறையிட்டார்; பயனில்லை. மாவட்ட ஆட்சியரைப் பார்த்தார்; பயனில்லை. தன் சொந்த செலவில் வீராணம் ஏரியிலிருந்து பாசன நீரை சுமந்து வரும் ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள இராதா வாய்க்காலைத் தூர் வாரினார். 1800 ஏக்கர் நிலம் மீண்டும் பாசன வசதி பெற்றது. “ராதா வாய்க்காலை மீட்ட ரங்கநாயகி” என்னும் தலைப்பில் செய்திக் கட்டுரையை எழுதி வெளியீட்டன அன்றைய  நாளேடுகள். இதைக் கண்டுகொண்ட Jamshetji Tata National Virtual Academy  என்னும் அகில இந்திய நிறுவனம் அவரை மும்பைக்கு அழைத்து ஆன்றோர் முன்னிலையில் தேசிய விருதளித்துச் சிறப்பித்தது. தன் சாதனையை அழகு தமிழில் இயல்பாக அவர் எடுத்துச் சொல்ல, அதை ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல  அரங்கம் எழுந்து நின்று நீண்ட கரவொலி எழுப்பியது.

    தொடர்ந்து வேளாண் மக்களுக்காகக் குரல் கொடுத்தார்; தனி ஒருத்தியாகத் தெருவில் இறங்கிப் போராடினார். “பெட்டைக் கோழி கூவி பொழுது விடியுமா?” என்று இவர் காதில் விழுமாறு பேசியவர்கள் பின்னாளில் இவர் பின்னால் அணிவகுத்தார்கள் என்பதை வரலாறு சில பக்கங்களை ஒதுக்கி இந்த ரங்கநாயகிக்காகப் பதிவு செய்தது.

    ரங்கநாயகியின் மதிப்பு நாளும் வளர்ந்தது. மாவட்ட ஆட்சியரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கவும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளவும் இவருக்கு  விசேட அனுமதி இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால் இவ்வாய்ப்பை இவர் ஒருபோதும் தன்னலம் கருதி பயன்படுத்தியதில்லை.

    நாளடைவில் நம்மாழ்வாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஊரில் மற்ற விவசாயிகளுக்கும் கற்றுத் தந்தார். இன்று முன்னணி இயற்கை விவசாயி என்னும் பெயருடன் திகழ்கிறார்.  நான் கனடா நாட்டுக்குச் சென்றபோது அந்நாட்டு வேளாண்பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடத்தில் பேசியபோது இந்த அம்மையாரின் வேளாண் பங்களிப்பைக் குறிப்பிட்டேன்.


  திருமதி ரங்கநாயகி அவர்கள் சென்ற ஆண்டு புதிய தலைமுறை இதழ் அளித்த தமிழன் விருதினைப் பெற்றார்.
  “சொந்த செலவில் சாலைகள் அமைத்து, ராதா வாய்க்காலை மீட்டு 1800 ஏக்கர் பரப்புள்ள நிலத்துக்குப் பாசன வசதியை ஏற்படுத்தி, பயிர் செய்வோரின் உரிமைகளைக் காக்கத் தொடர் போராட்டம் நடத்தி, வேளாண் மக்களின் பாதுகாவலராகப் பணிபுரியும் திருமதி ரங்கநாயகி அவர்களுக்குச் சமூகப் பணிக்கான புதிய தலைமுறை தமிழன் விருதை வழங்குவதில் பெருமை கொள்கிறது நமது புதிய தலைமுறை.” எனப் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பெற்றத் தாமிரப் பட்டயத்தை அம்மையாருக்கு வழங்கிப் பெருமை சேர்த்துக்கொண்டார்கள்.


  இவரது தொடர் முயற்சியால் ஆண்டு தோறும் அரசுச் செலவில் வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. அணுகுச் சாலைகள், கூட்டுறவு அங்காடி உள்ளிட்ட வசதிகள் ஏற்பட்டுள்ளன.

  இவருடைய வழிகாட்டுதலில் வளம்பெற்ற காட்டுமன்னார்குடி வட்டம் வடமூர் கிராமம் இன்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

   வேளாண் கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றுதல், மகளிர் அமைப்புகளை உருவாக்கிப் புத்துணர்வு பயிற்சி அளித்தல் என மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

    இவருக்கு உள்ள செல்வாக்கைப் பார்த்தால், வரும் தேர்தலில் சுயேச்சையாக நின்றால் கூட எளிதில் வெற்றி பெறுவார் என்று தோன்றுகிறது. அண்மையில் அம்மையார் என் மகளின் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தார். “எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஆனால் அரசியலாரையும் ஆட்சியாளர்களையும் தட்டிக் கேட்க ஆர்வம் உண்டு” என்று ஒரே போடாகப் போட்டார்.

    நக்கீரத் துணிச்சலுடன் நாட்டுக்கு நலம் பயக்கும் நற்பணிகளை முன்னின்று செய்கிறார். அவர்தம் சமூகப் பணிகள் தொடர வாழ்த்துவோம்.
அவருக்கு உலக  மகளிர் தின வாழ்த்துகளை உரித்தாக்குவோம்.


குறிப்பு{  பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இவரது  நேர்முகக் காணொளிக்காட்சியைப் காண்பதற்குப் பின்வரும் இணைப்பில் சொடுக்குக.fighting cock

11 comments:

 1. போற்றுதலுக்கு உரியவர்

  ReplyDelete
 2. அம்மா வடவூர் ரங்கநாயகி க்கு....தலை வணங்குகிறோம்

  ReplyDelete
 3. இன்றைய தினத்திற்கேற்ப சிறப்பான பதிவு ஐயா... அருமை...

  நன்றி...

  ReplyDelete
 4. உரிய நாளில் பொருத்தமான பதிவு. அம்மையாரைப் பாராட்டுவோம்.

  ReplyDelete
 5. அருமையான பதிவு.எனது வாழ்த்துக்கள் திருமதி.ரங்கநாயகி அவர்களுக்கு. முயற்சி பயிற்சி தொடர்ச்சி அதுவே வளர்ச்சியின் வாயில்.
  வாழ்க வளர்க வெல்க
  Dr.R.Lakshmanasingh

  ReplyDelete
 6. இன்றைக்கு நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் நீர் மேலாண்மை. இதனைக் கையிலெடுத்து தன் சொந்த முயற்சியில் சாதனை புரிந்துள்ள ... புரிந்து கொண்டிருக்கும் அம்மையார் பற்றிய வலைப்பதிவு சாலச்சிறந்தது. வாழ்த்துக்கள் அண்ணா!

  ReplyDelete
 7. சிறந்த பெண்மணி பற்றிய சிறப்பான பதிவினை மகளிர் தினத்தன்று வெளயிட்டுப் பெருமை சேர்த்ததற்கு மனங்கனிந்த பாராட்டுகள்..

  ReplyDelete
 8. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ!! தலைப்பு அருமை!!

  விவசாயத்தில் சாதனை படைத்த பெண்மணி!! புகழ்ந்திட வார்த்தைகள் இல்லை ஐயா. மனம் சிலிர்த்தது. சிற்ப்பான பெண்மணி பற்றி அருமையான ஒரு பதிவு இத்தினத்திற்கு!! மிக்க நன்றி ஐயா.

  கீதா

  ReplyDelete
 9. symbol of women emancipation ! Man-woman equality in iron-Will,strong determination & hard working ! Hats off to her !

  ReplyDelete
 10. Handsome salute, I am really appreciate your achievements.

  ReplyDelete