சிலம்பொலி செல்லப்பனார்
இன்று(6.4.2019) காலமானதையொட்டி
இயற்றப்பட்ட இரங்கற் பா
புலன்கள் அனைத்தும் பொழியும் தமிழில்
நலன்கள் அனைத்தும் நனிமிகத் தோன்றும்
நலம்சேர் பனுவல் நயம்பட யாத்த
சிலம்பொலி சென்றது விண்.
சிலம்பின் சிறப்பைச் சிறப்புடன் சொல்லி
உலக அளவில் உயர்த்திப் பிடித்தார்;
வலம்புரிச் சங்கென வாழ்ந்து மறைந்தார்
சிலம்பொலி சென்றது விண்.
அணியாய்ப் பணிவை அணிந்தவர் வாழ்ந்தார்
துணிவை விரும்பித் துணையெனக் கொண்டார்
இலமென என்றும் இயம்பினார் அல்லர்
சிலம்பொலி சென்றது விண்.
செல்லப்பன் எம்முடை இல்லப்பன் என்றுதான்
சொல்லப் படுவார்;ஓர் நல்லப்பன் என்றே
உலகுளார் ஏற்பர்; உறுபுகழ் பெற்ற
சிலம்பொலி சென்றது விண்.
சிக்கலே இல்லாத சிந்தனைப் பேச்சாளர்
எக்காலும் சோரா எழுத்தாளர் – மக்கள்
புலம்பொலி தோற்கும் புயலொலி முன்னே
சிலம்பொலி சென்றது விண்.
6.4.2019 -கவிஞர் இனியன், கரூர்
வருத்தமாக இருக்கிறது... ஆழ்ந்த இரங்கல்கள்...
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteமிகச்சிறந்த தமிழறிஞரான அவர் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் பணியில் சேர்ந்தபோது நேரில் பார்த்துள்ளேன். அருகே அவர் அமர்ந்து சொல்லச்சொல்ல அவர் வேகத்திற்கு இணையாக நான் தமிழில் தட்டச்சு செய்வேன். தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார், அனைவரிடமும் நன்கு பழகுவார். நான் பணியில் சேர்ந்த முதல் வாரத்தில் வட மாநிலத்திலிருந்து வந்த ஒரு கடிதத்திற்கு ஆங்கிலத்தில் மறுமொழி தயாரிக்கும்படி கூறினார். அக்கடிதம் என் நினைவிலிருந்து "We acknowledge with thanks the receipt of your letter and wish to state the quarterly English research journal of Tamil University, Tamil Civilization which is in print now would be sent to you as soon as it is published....." தொடர்ந்து மேலும் நான்கு வரிகள் இருந்தன. வரைவு தட்டச்சிடாமல், நேரடியாகவே கையொப்பமிடும் அளவு இருந்ததாகக் கூறி என்னை பாராட்டியதோடு, பிற சக பணியாளர்களை அழைத்து, இவ்வாறு கடிதம் தட்டச்சிடப்படவேண்டும் என்றார். என்னைப்போன்றோருக்கெல்லாம் தனிப்பட்ட இழப்பே.
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteதமிழ் கூறும் நல்லுலகம் மீண்டும் ஒரு நன்முத்தை இழந்தது. அண்ணா ஜம்புலிங்கம் அவர்களின் நினைவு கூர்தல் சிலம்பொலியாரின் அரவணைக்கும் பண்பினைக் காட்டுகிறது.
ReplyDeleteதங்களது இறங்கற்பா சிலம்பொலியாரின் சிறப்பினைக் கூறுவதுடன் தங்களது வெண்பா நூற்கும் நுண்திறனையும் வெளிக்காட்டுகிறது.
தமிழுடன்
தங்கப்பாண்டியன்
செல்:+91-9626008160
ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteகீதா