Sunday, 19 May 2019

பாங்குடன் விளங்கும் பூங்கா


    பூங்கா சிறியதோ பெரியதோ அதைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும் பாங்கினை அமெரிக்காவிலும் கனடாவிலும் பார்த்து வியந்துள்ளேன். இந்தியாவிலும் அத்தகைய பூங்கா ஒன்றினைக் காணும் வாய்ப்பு எனக்குச் சென்றமாதம் கிடைத்தது.

      பெங்களூரு நகரில் மில்க் காலனி என்பது அனைவருக்கும் தெரிந்த இடமாகும். ஒரு காலத்தில் மேய்ச்சல் காடாக இருந்தது அப்பகுதி.  மாடுகளை வளர்த்துப் பால் விற்கும் மக்கள் பெரிய எண்ணிக்கையில் வாழ்ந்த இடம் அது. இன்றைக்கு அப்பகுதி மால்களும், மாளிகைகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் நிறைந்த கான்கிரீட் காடாக மாறிவிட்டது. இருப்பினும் சாலை நெடுக பெரிய பெரிய நிழல்தரும் மரங்கள் இருப்பதைப் பார்க்கும்போது சற்று ஆறுதலாக உள்ளது.

      நிலத்தை மனைப் பிரிவுகளாகப் பிரித்து விற்கும்போது குறிப்பிட்ட அளவு நிலப்பரப்பை பூங்கா உருவாக்கத்திற்காக ஒதுக்க வேண்டும் என்பது விதி. நம் மாநிலத்தில் இது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இவ்விதி நடைமுறையில் உள்ளது.

     மில்க் காலனி பகுதியில் உள்ள உறவினர் இல்லத்தில் தங்கியிருந்தபோது அருகிலிருந்த பூங்காவிற்குக் காலை வேளையில் நடைப்பயிற்சிச் செய்ய நான் செல்வதுண்டு.

     சுற்றிலும் குடியிருப்புகள். அவற்றின் நடுவே அந்தப் பூங்கா அமைந்துள்ளது. நன்கு விவரம் தெரிந்த பொறியாளர் பூங்காவை வடிவமைத்திருக்க வேண்டும். இதுவரை நான் பார்த்திராத வடிவத்தில் மேற்கூரை கொண்ட யோகா பயிற்சிக்கூடம் உள்ளது.

      திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. அங்கே பலவிதமான உடற்பயிற்சிக் கருவிகள் அனைவரும் இயக்கும் விதத்தில் அமைந்துள்ளன. பழுதடைந்தகருவி என்று ஒன்றுகூட தென்படவில்லை. பெண்கள் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

     பூங்காவில் மரங்கள் செழித்து வளர்ந்து நிற்பதால் நண்பகல் நேரத்தில் கூட நடக்கலாம். நடப்பவர்களின் பாதங்களுக்கு இதமாக அகன்ற அழகானத் தரையை அமைத்துள்ளார்கள். நடப்பவர்கள் களைத்துப்போனால் ஓய்வெடுக்க வசதியான இருக்கையுடன் கூடிய அழகான குடில்களும் உள்ளன. காலை நேரத்தில் பூங்கா முழுவதும் கேட்கும் வண்ணம் மெல்லிய இசையை ஒலிக்கச் செய்வது புதுமையாக இருந்தது.


   
தூய்மையான குடிநீர் வசதியும் கூடுதலாக உள்ளது. பொதுக் கழிப்பறை என்றாலும் தூய்மையாக உள்ளது!

   ஒளி அமைப்புதான் மிக அருமை. அடிக்கொரு கம்பம் நட்டு பளிச்சென்று மின்விளக்குகள் எரியும்படி செய்திருக்கிறார்கள்.

   பூங்காவின் நான்கு மூலைகளிலும் நாட்டுக்கு உழைத்த நல்லவர்களின் மார்பளவு சிலைகளை வைத்திருப்பது கண்டு வியந்து நின்றேன்.

    மூலை முடுக்குகளில் கூட நெகிழிக் குப்பைகள் இல்லை. அவ்வளவு தூய்மையாகப் பராமரிக்கிறார்கள்.

   இருபத்து நான்கு மணி நேரமும் பூங்காக் காவலர்கள் கண்காணிக்கிறார்கள் என்று உடன் நடந்தவர் கூறினார்.

    நம்மூர் அதிகாரிகளை அழைத்துச் சென்று இப் பூங்காவைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்று எண்ணியவாறு ஆங்கு அமைக்கப்பட்டிருந்த அழகிய இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தேன்.

5 comments: