Wednesday 1 May 2019

உழுதுண்டு வாழ்வாரே வீழ்வார்


    குஜராத் உயர்நீதிமன்ற வாயிலில், அம் மாநிலத்தைச் சேர்ந்த  குறுநில விவசாயிகள் ஒன்பது பேர்கள் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடாக தனக்கு வழங்க வேண்டும் என வழக்குத் தொடுத்துள்ளது பெப்சி என்னும் பன்னாட்டு நிறுவனம்.

    இந்த வழக்கு வம்பைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினமான ஒன்றுதான். இருப்பினும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

  பெப்சி நிறுவனம் நம் ஊர் நீரை எடுத்து அதையும் இதையும் கலந்து கண்ணைக் கவரும் வண்ணங்களில் பானமாகவோ அல்லது  வெறும் தண்ணீராகவோ அடாவடியாய் விற்றுப் பணம் பண்ணுவது நமக்குத் தெரியும். லேய்ஸ் என்னும் வணிகப் பெயரில் அதே நிறுவனம் உருளைக்கிழங்கு சீவல் வற்றலை விற்கிறது என்பது பலருக்கும் தெரியாது. அதில் கலக்கப்படும் ஒரு வேதிப்பொருள் குழந்தைகளின் வயிற்றைக் கெடுக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

  ஒரு குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்கை ஆய்வகத்தில் உருவாக்கி குஜராத் விவசாயிகளுக்குத் தந்து விதைக்கச் சொல்லி, விளைச்சலை பெப்சி நிறுவனமே எடுத்துக் கொள்வது என ஒப்பந்தம் போட்டது. குறைந்த ஈரப்பதம் கொண்ட இவ்வகை உருளைக்கிழங்கை சமையல் செய்து உண்ண முடியாது.
photo courtesy: Google
   ஆயிரக்கணக்கான  விவசாயிகள் நெல், பருத்தி போன்ற வாழ்வாதாரப் பயிர்களை ஓரங்கட்டிவிட்டு, இந்தப் புதியவகை  உருளைக்கிழங்கைப் பயிர்செய்து பெப்சிக்குத் தாரைவார்த்துவிட்டு அவர்கள் தவணை முறையில் தந்த காசுக்குக் கையேந்தி நின்றனர். அரசு உருளைக்கிழங்குக்குக் குறைந்த அளவு ஆதார விலையைத் தர முன்வராத நிலையில் அவர்களுக்கும் பெப்சியை விட்டால் வேறு கதியில்லை.

    நிலைமை இப்படிப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்த நிலையில், உள்ளூர் வற்றல் தயாரிக்கும் குடிசைத் தொழில் முனைவோர்கள்  அந்த FC5 வகை உருளைக்கிழங்கை விவசாயிகளிடம் வாங்கி வேதிப்பொருள் கலக்காமல் அன்றாடம் தயாரித்து அன்றாடம் விற்க, லேய்ஸ் வற்றல் விற்காமல் தேங்கிக் கிடந்தன.
photo courtesy: Google
    தாங்கள் உருவாக்கிய  உருளைக்கிழங்கை விளைவித்துத் தங்களுக்குத் தராமல், தங்களுக்குத் தெரியாமல்  உள்ளூரில் விற்றுக் கூடுதல்  காசு பார்த்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த விவசாயிகள் மீது அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் (Intellectual Property Right Act) கீழ் வழக்குத் தொடர்ந்து கோடிக்கணக்கில் நட்ட ஈடாகக் கேட்கிறது பெப்சி. “அட ச்சீ இது என்ன புது வம்பு!” என்று புலம்பி நிற்கின்றனர் உருளை விவசாயிகள்.
 ஊரான்  ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காஅதைக்
காசுக்கு ரெண்டாக விக்கச் சொல்லிக்
கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன் 
என்னும் சொலவடை ஒன்று  நாம் வெள்ளையருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் இருந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் உருளைக்கிழங்குஅதை
அவனுக்கு மட்டுமே விக்கச் சொல்லி
அதிகாரம் பண்றானாம் பெப்சிக்காரன் 
என்ற வகையில் அச் சொலவடை இன்றைக்கும் பொருந்துகிறது என்பது கொடுமையிலும் கொடுமை!

   விவசாயிகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் பெப்சியின் அணுகுமுறை உள்ளது. அந்தக் காலத்து ஆசிரியர் ஒரு மாணவனை ஓங்கி அறைவார். அதைப்பார்க்கும் மற்ற மாணவர்கள் அச்சத்தால் அடிபணிவார்கள். இப்படி அச்சமூட்டுவதும் வன்முறைதான் என்பதை ஐம்பத்து ஏழாம் அதிகாரத்தில் வெருவந்த செய்யாமை என்னும் தலைப்பில் விரிவாகப் பேசுவார் திருவள்ளுவர்.

       “மற்ற விவசாயிகள் போல எங்களுக்கு அடிமையாக இருந்து எங்கள் வற்றல் தொழிற்சாலைக்குத் தேவைப்படும் மூலப்பொருளை விளைவித்துக் கொடுக்க முன்வந்தால் வழக்கைத் திரும்பப்பெறுவோம்” என்று பெப்சி தரப்பு வழக்காடுநர் நீதிமன்றத்தில் தெரிவிக்க, நீதிமன்றம் வழக்கை வரும் ஜூன் பன்னிரண்டாம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.

  இது பெப்சி நிறுவனம் நம் நாட்டு விவசாயிகள் மீது நடத்தும் மிகப்பெரிய வன்முறை என்பதை நாம் உணரும் தருணம் வந்துவிட்டது.

   “சிறுமை கண்டுப் பொங்குவாய் வா வா” என்பான் பாரதி. நம் இல்லத்தரசியர் இனியாவது பொங்கி எழவேண்டும். மாதக்கணக்கில் கடையில் தொங்கும் காலாவதியான  வற்றலை வாங்குவதை நிறுத்திவிட்டு, அதே கடையில் கிடைக்கும் பாரம்பரிய உருளைக்கிழங்கை வாங்கிவந்து வீட்டிலேயே வற்றல் தயாரித்துக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அல்லது தெருக்கோடியில் நம் கண்ணெதிரில் உருளைக்கிழங்கைச் சீவி வறுத்துக் கொடுக்கும் வையாபுரி கடையில் வாங்கலாமே. கண்ணுக்குத் தெரியாத வெளிநாட்டு முதலாளி நாம் கொடுக்கும் காசில் கொழுக்க வேண்டும். நம்மூர் வற்றல் கடை வையாபுரி வறுமையில் வாட வேண்டும். இது எனக்கு நியாயமாகப் படவில்லை.

    இங்கே பாதிக்கப்படுவோர் விவசாயிகள் மட்டுமல்லர்; அவர்களை நம்பியிருக்கும் நாட்டு  மக்களும்தான். ஏமாற்றப்படுவோர் அவர்கள் மட்டுமல்லர்; நாமும்தான்.

       வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனம் இங்கே வந்து நம் நாட்டின் இறையாண்மைக்குச் சவால் விடும் வகையில் பண்ணாட்டுப் பண்ணுவதையும், பாவப்பட்ட விவசாயிகள் மீது வழக்குப் போடுவதையும் அரசு வேடிக்கைப் பார்ப்பது அழகன்று என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
   


10 comments:

  1. கொடுமையிலும் கொடுமை ஐயா...

    நல்லதொரு தீர்ப்பு வர வேண்டும் என்று வேண்டுகிறேன்...

    ReplyDelete
  2. இது நாடா இல்ல வெறும் காடா
    இதைக் கேட்க யாரும் இல்லை தோழா
    என்ற பாடல் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. என் வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி நண்பரே

      Delete
  3. வலைப்பதிவு ஆசிரியருக்கும் பின்னூட்டம் இட்டிருக்கின்ற அன்பர்களுக்கும் பெப்சி நிறுவனத்தின் மீது இருக்கும் கோபத்தில் மீச்சிறு அளவாவது ஆளும் ஆண்ட அரசுகளின் மீது இல்லை என்பது எனக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது.
    சமீபத்தில் வெளியான LKG என்ற திரைப்படத்தில் அடிக்கடி சொல்லுவார்கள் "காசுக்காக கார்ப்பரேட்காரன் என்ன வேணும்னாலும் செய்வான்". அவன் அப்படித்தான். அதனால் தான் நம்மாழ்வார் போன்றவர்கள் எல்லாம் உழுபவனுக்கு நிலம் எவ்வளவு முக்கியமோ விதையும் அவ்வளவு முக்கியம் என்று.
    உண்மையிலேயே நம் கோபம் மண்ணையும் விதையையும் நீரையும் கார்ப்பரேட்காரனுக்கு தாரை வார்த்த அரசுகளின் மீது தான் இருக்க வேண்டும். அது தான் நியாயம்.... அது தான் நீதி...!

    ReplyDelete
  4. மன்னிக்கவும். இதில் அரசாங்கத்தின் பங்கை விட விவசாயிகலாகிய நம் பங்கும் , பொது மக்கள் பங்கும் ுஉன்டு என்பதை மறப்பது ுஉன்மயான தீர்வினை நோக்கி நம்மை அழைத்து செல்லாது.

    ReplyDelete
  5. நாளிதழ்களில் செய்தியினைப் படித்தேன்.இருந்தாலும் மிகவும் தெளிவாகப் புரியும் வகையில் பதிந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. அருமை. உழவர்களின் நிலை நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. இதில் பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கியதால் சிறு வணிக நிறுவனங்கள் முற்றிலும் அழிந்து வருகிறது. கிழங்குகள், காய்கள், கனிகள் என அனைத்திற்க்கும் எதிர்காலத்தில் உரிமை கொண்டாடுவார்கள். வால்மார்ட் போன்ற வணிக நிறுவனங்களில் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு முத்தாய்ப்பாக உருளை விவசாயிகள் பிரட்சினை உருவெடுத்துள்ளது. வழக்கம் போல அரசு மெளனமானால் விவசாயிகள் பெப்சிக்கு அடிமையாவதைத் தவிர வேறு வழியில்லை. கோவில்பட்டி இசக்கி கடலை மிட்டாய் வால்மார்ட் தயாரிப்பாக மாறலாம். அன்று வெள்ளையனே வெளியேறு என்றனர், இன்று அனுமதியுடன் அதிகாரத்துடன் அரசியல்வாதிகளின் பலத்துடன் அந்நிய நிறுவனங்கள் கால் ஊன்றி விட்டன. அரசியல்வாதிகள் தவிர்த்து பிற மக்களின் எதிர்காலம்?
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்

    ReplyDelete