மானத்தோடு வாழ்ந்த மறத்தமிழன் இன்றைக்கு
மரத்தமிழன் ஆகிவிட்டான். கொங்கு வட்டார வழக்கில் சொல்வதென்றால் ஒணத்தி இல்லாத
தமிழன் ஆகிவிட்டான். தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குச் சூடும் இல்லை சுரணையும் இல்லை
என்று இலங்கைவாழ் தமிழரும் மலேசியத் தமிழரும் நம் காதுபடவே பேசுகிறார்கள்.
சுப்பனும் குப்பனும் தமிழர்கள், ஆனால் அவர்களுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் அவர்கள் தவறியும்
தமிழில் பேசிவிட முடியாது; மீறி பேசினால் தண்டனை உண்டு. அந்தப்
பள்ளிதான் சிறந்த பள்ளி என்று சுப்பனும் குப்பனும் சொல்லித் திரிகிறார்கள்.
தமிழன் நடத்தும் கடைப்பெயர் தமிழில் இல்லை; விற்கும் பொருள் பட்டியல் தமிழில் இல்லை. பற்றுச்சீட்டு
கொடுப்பதில்லை; கொடுத்தாலும் அது தமிழில்
இல்லை.
தமிழாசிரியர் உட்பட அனைவரும் ஆங்கிலச்
சொற்களைக் கலந்தே பேசும் அலங்கோலம் தமிழ் நாடு முழுவதிலும் காணப்படுகிறது.
படிக்காதவர்களும் ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்கள். தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து
தமிங்கலம் பேசுகிற கேவலத்தை வேறு எங்கும் காண முடியாது. படித்தவன்
தெரிந்து பேசுகிறான்;
படிக்காதவன் தெரியாமல் பேசுகிறான். வேறுபாடு
அவ்வளவுதான்.
ஒரு நிமிடம்
நேரம் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசுவதற்கு ஒரு போட்டி; அதற்குப் பரிசு வேறு. போட்டி யாருக்கு? தமிழைத்
தாய்மொழியாகக் கொண்ட தமிழருக்கு. அப்
போட்டி எங்கே நடக்கிறது?
கோடை பண்பலை வானொலியில் நடக்கிறது. ஒரு மணி
நேரம் நடக்கும் போட்டியில் ஐம்பது பேர் பங்கேற்கிறார்கள்; ஒரு நிமிடம்
முழுவதும் தமிழில் பேசி வெற்றி பெறுவார் எவருமிலர். அவமானமாக இருக்கிறது.
பெயருக்கு முன்னால் ஆங்கிலத்தில்
தலைப்பெழுத்திடும் மோசமான வழக்கம் உலகில் தமிழனைத் தவிர வேறு எந்த மொழிக்காரனிடத்தும் இல்லை. எந்த ஆங்கிலேயனாவது க.மா. Isac Joseph என்று
எழுதுகிறானா? நாம் மட்டும் P.N. நடேசன் என்று ஏன் எழுத வேண்டும்? தமிழனின் தன்மான உணர்வு எங்கே போயிற்று?
தமிழனுக்கு இனமான உணர்வு இம்மியளவும் இல்லையா?
எத்தனைத் தமிழர் தமிழில்
கையொப்பம் போடுகிறார்? ஆங்கிலத்தில்
கையொப்பம் போடுவது பெருமையா? உண்மையில்
அது சிறுமை;சிறுமையிலும் சிறுமை. தமிழக அரசு ஊழியர் தமிழில்தான் கையொப்பம் இட
வேண்டும் என்பதற்கு ஓர் ஆணை பிறப்பிக்க வேண்டிய அவல நிலை தமிழ் நாட்டில்தான்
ஏற்பட்டது. அந்த ஆணையை மதித்துத் தமிழில் கையொப்பம் இடுவதை ஒரு சிலரே
கடைப்பிடிக்கின்றனர். என்னே அறியாமை!
A.S.K இல்லத் திருமணம்
என்று பதாகை வைப்பவனும் தமிழன்தான். தமிழன் தன் வீட்டுக்கு அன்பு இல்லம் என்று
பெயர் வைத்தாலும் அதை Anbu Illam என ஆங்கிலத்தில்தானே எழுதி வைக்கிறான்? தமிழகத்தில்
வாழும் தமிழாசிரியர் கூட தன் இல்ல முற்றத்தில் தன் பெயர்ப்பலகையை ஆங்கிலத்தில்தானே
எழுதிவைக்கிறார்?
நம்
குழந்தைகளிடத்தில் “ எங்கே ஒரு இங்கிலீஷ் ரைம் சொல்லு” எனக் கேட்டு
மகிழ்ந்து போகிறோம். நான்கு திருக்குறளை அல்லது ஒளவையின் ஆத்திசூடியைச் சொல்லச்
சொல்கிறோமா? இல்லையே. ஒருகாலத்தில் ஆங்கிலேயனுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோம்; இப்போது ஆங்கில மொழிக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். இது
கொடுமையிலும் கொடுமை!
நமது திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும்
இன்னும் மோசம். திரையிசைப் பாடல்களில் ஆங்கிலக் கலப்பிற்கு அளவே இல்லை. பொன் மகள் வந்தாள் பொருள்கோடி தந்தாள் என்ற
அருமையான பாடலை ‘ரீ மிக்ஸ்’ என்றபெயரில் ஆங்கில வரிகளைக் கலந்து
கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டார்கள்.
தமிழில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்களின் தொலைக்காட்சியிலும்
நாளேடுகளிலும் எத்தனை எழுத்துப் பிழைகள்! அருவருக்கத் தக்க ஆங்கிலக்
கலப்படம்!. இவர்களெல்லாம் அரிசியைச்
சமைத்துச் சாப்பிடுகிறார்களா அல்லது அரிசியுடன் கற்களையும் கலந்து சமைத்துச்
சாப்பிடுகிறார்களா?
1933 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ்
மாநாட்டிற்கு அண்ணல் காந்தியடிகள் அனுப்பிய செய்தியினைத் தன்மானமுள்ள தமிழர்
யாவரும் உணரவேண்டும். அச் செய்தி பின்வருமாறு:
“தமிழர்களின் தமிழ்ப்பற்று நீடித்து வளர
வேண்டும். எவ்வித இடையூறுகளையும் எதிர்த்து நிற்கத் தேவையான உறுதி தமிழர்களுக்கு
இருக்குமென்று நம்புகிறேன். வளமும் அழகும் கொண்ட தமிழை அம் மொழிக்குச்
சொந்தக்காரர்களே அலட்சியம் செய்வது ஒரு பெரிய குற்றம் என்பது என்னுடைய கருத்தாகும்”
ஆங்கிலம் கற்பது பிழைப்புக்காக, தமிழைக்
கற்பது வாழ்வாங்கு வாழ்வதற்காக என்பதைத் தமிழன் உணர வேண்டாமா?
இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டிய நாள் இன்றைய நாள். உலகத்
தாய்மொழி நாள் இன்று.
ஆக, தமிழரின் உடையும் கெட்டது; உணவும் கெட்டது; உணர்வும் கெட்டது.
இவற்றை
மீட்டெடுக்க வேண்டாமா?
சிந்திப்போம்; செயல்படுவோம்.
-முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்
21/2/2020
.
உங்களது உணர்வு புரிகிறது... நினைத்து, உணர்ந்து செயல்பட வேண்டும்... ஒல்லும் வகையெல்லாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும்
ReplyDeleteமுழுமையான உன்மை ஐயா ...எனக்கும் அதே கவலை தான் என் வாழ்வில் நிடிக்கிறது ......
ReplyDeleteசிந்திக்க வேண்டிய அருமையான பதிவு ஐயா...
ReplyDeleteஅருமை. ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
ReplyDeleteமிகச் சரியான, அவசியமான கட்டுரை ஐயா காந்திஜியின் வார்த்தை இன்று முழுமையாக பொருந்தி விட்டது.
ReplyDeleteநியாயமான ஆதங்கம் ஐயா. திருந்துவது சிரமமே.
ReplyDeleteதங்கள் கருத்து மிகவும் ஏற்கத் தக்கது.போற்றத்தக்கது.பின்பற்றத்தக்கது
ReplyDeleteமிகச்சரியான சூடு.வெட்கித் தலை குனிய வேண்டும். ஆங்கிலேயன் மெக்காலே தன் வேலையை மிகச் சரியாக செய்து விட்டான். நாடு சுதந்திரம் அடைய இருந்த போது ஆங்கிலேயர் ஆட்சி தமிழ்நாட்டில் மட்டுமாவது தொடரவேண்டும் என்று தீர்மானம் இயற்றி பிரிட்டின் அரசுக்கு கடிதம் எழதியவரின் அடி வருடி திராவிட கட்சி கூட்டம் தான் தமிழகத்தை தொடர்ந்து 53 ஆண்டுகளாக தமிழரின் மானத்தை சிதைத்து கப்பலேற்றி வருகிறது. ஏனென்றால் உண்மையில் அவர்கள் தாய் மொழி தமிழ் அல்ல. கன்னடமும்,தெலுங்கும் தான். ஆகையால் தான் திராவிடம் என்று சொல்லி தமிழை மறைமுகமாக ஒதுக்கி ஆங்கிலத்தை
ReplyDeleteதூக்கிப்பிடித்து ,நேருவிடம் மன்றாடி தமிழை அழித்து ஆட்சியை தக்க வைத்தனர். என்ன கேவலம்! தமிழ் தாத்தா உ.வே.சா மற்றும் பரிதிமாக்கலைஞனின் ஆன்மா சாந்தி அடையட்டும்! தமிழ் வாழ்க!
திரைத்துறை அடிமையான தலைமுறையும் (1940 முதல் 1965 வரை பிறந்தவர்கள்)மற்றும் போனதலைமுறை அரசுப்பணியாளர்கள் ஆங்கிலமோகத்தால் தங்கள் குழந்தைகளை கிருத்தவப்பள்ளிகளில் சேர்த்ததன் விளைவே தமிழும் கலாச்சாரமும் சீர்கெட்டுப்போனதற்கு காரணம் ஐயா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான பதிவு.ஆக்கமான செயல்பாடுகள் பற்றி சிந்திக்கத் தூண்டும் ஒன்று.
ReplyDelete