Saturday, 14 March 2020

புலம்ப வைக்கும் புதுநோய்


  கனடா நாடு டொரண்டோ நகரில் வசிக்கும் என் நண்பர் அகில் அவர்கள் நேற்று என்னைப் புலன வழியே அழைத்தார். “நீங்கள் கனடாவுக்கு வருவதைக் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள்” என்று ஒரு வரியில் சொல்ல வேண்டிய செய்தியை காரண காரியங்களோடு கால்மணி நேரம் பேசினார்.

   “இங்கே பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. மக்கள் வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள். நாங்கள் ஒரு மாதத்துக்குத் தேவையான சமையல் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டோம். என் வாழ்நாளில் இது ஒருவிதமான புது அனுபவம்’’ என்று சொல்கின்றாள் அமெரிக்காவில் வசிக்கும் என் மூத்த மகள்.

  கனடா நாட்டின் பிரதமரின் மனைவி சோஃபி ட்ரூடோ இந்த நோயால் பாதிக்கப்பட்டு அவரது இல்லத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதை விலாவாரியாகச் சொன்னாள் அந் நாட்டில் வசிக்கும் என் இளையமகள்.

    கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவா நகரில் புலம் பெயர்ந்து வாழும் நண்பர் முருகானந்தம் அவர்கள் முகநூல் பதிவில், “எனக்கு எந்தவித பயமும் இல்லை. கொழுப்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவை உண்கிறேன். நாள்தோறும் உடற்பயிற்சி செய்கிறேன். எனவே அது என்னை என்ன செய்யும்?” என்று கேட்கிறார்.

   சென்னையில் வசிக்கும் என்னுடைய அண்ணன் பேராசிரியர் பெருமாள் அவர்கள் இன்று என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, “கூட்டங்களுக்குச் சென்று பேசுவதை எல்லாம் நிறுத்திவிடு. இன்னும் ஒரு மாதத்திற்கு வீட்டைவிட்டு நகராதே” என்று உரிமையுடன் எச்சரித்தார்.

     அந்தச் சனியனைக் கைகழுவித் தொலைக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் சரியாகக் கைகழுவ வேண்டும் என்று சொல்கிறார் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை இயக்குநர் மருத்துவர் க.குழந்தைசாமி. இவர் எனது முன்னாள் மாணவர்.

   தும்முபவன் இன்று
  துப்பாக்கி   ஏந்தியவன் ஆகின்றான்
   இருமினால் இனி
   இரட்டை ஆயுள் தண்டனை
     என்று புதுக்கவிதை படைக்கிறார் கரூர் ரோட்டரி பாஸ்கரன்.

இந்தப் புதுக்கவிதைக்குப் போட்டியாக, முதுபெரும் கவிஞர் குறளகன் ஐயா அவர்கள்,

திரண்டபெரும் மாந்தருடைச் சீனாவில் தோன்றி
பிறகண்ட மெல்லாம் பெருகும்! – கொரோனா
தன்னை ஒழித்துத் தலைதூக்க இன்றைக்கு
மன்னுலகில் இல்லை மருந்து

என்னும் மரபுக் கவிதையைப் படைக்கின்றார்.

  இடுக்கண் வருங்கால் நகுக என்று வள்ளுவர் சொன்னாலும் சொன்னார்;   நண்பர் டாக்டர் குணசேகர் உடனே ஒரு நகைச்சுவைத் துணுக்கை அனுப்பினார்; சரியான விடுமுறை விண்ணப்பம் என்ற தலைப்பையும் தந்திருந்தார்.

     இதோ அந்தத் துணுக்கு.

மதிப்பிற்குரிய மேலாளர் அவர்களுக்கு,
   வணக்கம். எனக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளதாகத் தெரிவதால், பதினைந்து நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்புத் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். விடுப்புத் தர மறுத்தால் வழக்கம்போல் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறேன்.     

     “எங்கள் நாட்டின் மருத்துவ மனைகள் விழிபிதுங்கி நிற்கின்றன. நோயாளி, மருத்துவர் இருவரில் யார் வாழ்வார் யார் சாவார் என்று தெரியாத நிலை நீடிக்கிறது. இந்த நிலை உங்கள் நாட்டில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் கொஞ்ச நாள்களுக்கு வீட்டைவிட்டு வெளியில் செல்லாதீர்கள். அது ஒன்றுதான் இதற்குத் தீர்வு.” என்று ஒரே போடாய்ப் போடுகிறார் இத்தாலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிறிஸ்டினா ஹிகின்ஸ்.

   இப்படி ஒரு பொருள் குறித்துப் பல சொற்களை உலகத்தில் உள்ள அனைவரும் பேசும் சூழ்நிலையை உருவாக்கிய பெருமை கொரோனாவுக்கு மட்டுமே உண்டு. நம் பிரதமர் மோடியின் கால்களைக் கட்டிப்போட்ட கூடுதல் பெருமையும் இதற்கு உண்டு.

    வள்ளுவரைக் கேட்டால் ஏதேனும் விளக்கம் சொல்வார் என்று நினைத்து அவரிடம் கேட்டேன்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்றார். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டேன்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையார்
செத்தாருள் வைக்கப் படும்

என்று சொன்னார்.

புரியவில்லை என்று சொன்னேன்.

“நான் சொன்னது என்றைக்கு உங்களுக்குப் புரிந்தது?” என்று திருப்பிக் கேட்டார்.

அவர் சொல்வதும் உண்மைதான்.
---------------------------------------------------------------------------------------------------

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

  

6 comments:

  1. ஒரு படைப்பாளர் மலைப்பு வேளையிலும் படைக்கிறார்

    ReplyDelete
  2. Excellent write-up,Dr. It teaches and makes us think & act.It is tinged with a breeze of literature! A satirical note also !

    ReplyDelete
  3. விரைவில் இந்நோய் வேதனை தீரும் என்று நம்பவோம் ஐயா

    ReplyDelete
  4. விரைவில் இந்த வைரஸ் அழிந்து போக வேண்டுகிறேன்...

    ReplyDelete
  5. உலகையே அச்சுறுத்தும் இந்நோய் ஒழியும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. நலமே விளையட்டும்.

    விரைவில் பிரச்சனைகள் தீர வேண்டும். அதுவே அனைவருடைய ஆசை.

    ReplyDelete