இன்னும் சில வார காலம் நம்மை நாமே தனிமைப்
படுத்திக்கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம். இதை ஆக்க வழியிலும்
அறிவார்ந்த வழியிலும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆக்க வழியில்
எப்படிப் பயன்படுத்தலாம்?
வீட்டின் உள்புறத்தைத் தூய்மை செய்யலாம்.
தேவையற்ற பொருள்களைக் கழித்துக்கட்டி, தேவையானவற்றைத் துடைத்து வைக்கலாம். இந்தப் பணியின்போது எப்போதோ
தொலைந்து போனவை மீண்டும் நம் கண்களில் பட்டு வியப்பை ஏற்படுத்தும். ஒன்றிரண்டு
பழைய ஐந்நூறு, ஆயிர ரூபாய் நோட்டுகள் கூட கிடைக்கலாம்!
குழந்தைகளுக்குக் கதை சொல்லலாம்; மறந்துபோன
ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, தாயக்கட்டை போன்ற விளையாட்டுகளைச் சொல்லித் தரலாம்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், மு.வ.
எழுதிய கரித்துண்டு, நா.பா. எழுதிய குறிஞ்சிமலர் போன்ற நாவல்களை மீண்டும் படிக்கலாம்.
“எனக்குச் சுடுதண்ணீர் கூட வைக்கத் தெரியாது”
எனச் சொல்லிக்கொள்ளும் ஆண்கள் அம்மா, மனைவி, மகளை அணுகிச் சமையல் செய்யக்
கற்றுக்கொள்ளலாம்.
பழைய உறவினர்களை, நண்பர்களை, மாணவர்களை,
ஆசிரியர்களைத் தொலைப்பேசியில் அழைத்து உற்சாகமாய்ப் பேசி உறவையும் நட்பையும்
புதுப்பித்துக் கொள்ளலாம்.
அறிவார்ந்த
வழியில் எப்படிப் பயன்படுத்தலாம்?
இன்று காலையில் எனது முன்னாள் மாணவர் நாமக்கல்
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு அவர்களுடன் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.
நோயை விரட்டும் நுட்பத்தைச் சொன்னார்:
நாள்தோறும் இரண்டு வேப்ப இலைகளை மென்று
தின்றாலே நோய் எதிர்ப்புச் சக்தியை இலவசமாய்ப் பெறலாம். அதிக விலையுள்ள ஆரஞ்சு
பழத்தைவிட ஏற்ற விலையில் கிடைக்கும் எலுமிச்சம் பழத்தை வாங்கி சாறு பிழிந்து
தினமும் குடிப்பது நல்லது. இளநீரும் பழைய சோற்று நீரும் மிக நல்லது. கபசுர
குடிநீர், நிலவேம்பு குடிநீர் கிடைத்துக் குடித்தால் மிகவும் நல்லது.
மேலும் அவர் சொன்ன ஒரு செய்தி என் கவனத்தைக்
கவர்ந்தது. இந்தச் சமூக விலகல் காலத்தில் நமக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கும்.
அப்போது வீட்டு முற்றத்தில் அமர்ந்து தியானம், மூச்சுப்பயிற்சி செய்வது மிகவும்
சிறந்தது.
உளவியலாளர் என்ற முறையில் நான் சில ஆலோசனைகளை
அளிக்க விரும்புகிறேன்.
வீட்டில் தனியாக இருக்கும்போது வாட்ஸப்,
முகநூல் போன்றவற்றில் உலா வரும் எதிர்மறைச் செய்திகளை உங்கள் மனத்தில் பதிவு
செய்யாமல் இருப்பது நல்லது. சும்மா இருந்தால் மனம் கொரோனா குறித்த எதிர்மறைச்
சிந்தனையில், கற்பனையில் ஈடுபடும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே
மேலே சொன்ன ஆக்க வேலைகளில் ஈடுபட்டால் மனநலம் சீராக இருக்கும்.
பயம் இருவகைப்படும். உணர்வார்ந்த பயம்,
அறிவார்ந்த பயம். பாம்பைக் கண்டு பயப்படுதல் உணர்வார்ந்த பயம். கொரோனா குறித்துப்
பயப்படுவது அறிவார்ந்த பயம். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது அறிவுகெட்ட
செயல் என்பார் வள்ளுவர். எனவே தனிமைப் படுத்தியிருக்கும் காலத்தில் வெளியில் செல்லாமல்
இருப்பது வீட்டுக்கும் நல்லது
நாட்டுக்கும் நல்லது.
நம்மை அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்வதில்
பயனில்லை; செயல்பட்டால்தான் பயன் உண்டு.
முனைவர்
அ.கோவிந்தராஜூ,கரூர்.
தமது கருத்துகளை வரவேற்கிறேன். மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தம்மைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.
ReplyDelete21 நாட்களையும் பயனுள்ளதாக்க அருமையான வழிமுறைகளைக் கூறியுள்ளீர்கள் ஐயா
ReplyDeleteநன்றி
இக்காலத்திற்கேற்ற, பயனுள்ள பதிவு. பயன்படுத்திக்கொள்வேன் ஐயா.
ReplyDeleteவழிமுறைகள் அனைத்தும் அருமை... முடிவு சிறப்பு...
ReplyDeleteஅருமையான வழிமுறைகள் ஐயா. வீட்டிற்குள் இருக்க வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு.
ReplyDeleteகீதா