Thursday, 18 June 2020

கொரோனா கொடுத்த புதிய வாய்ப்புகள்


   “கொரோனா பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார். அது குறித்துச் சிந்தித்ததன் விளைவே இப்பதிவு.

   நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில மாற்றங்களை அண்மைக் காலத்தில் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.

இப்போது முகக்கவசம் அணிவது வழக்கமாகிவிட்டது.


தன்சுத்தம் பேணுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டோம்.

தனிமனித இடைவெளி அவசியம் என்பதை உணரத் தொடங்கிவிட்டோம்.

பணம் காசைத் தொடுவதைத் தவிர்த்துக் கைப்பேசி மூலம் பணப்பரிமாற்றம் செய்வதே நன்று என ஏற்றுக் கொண்டோம்.

அலுவலக வேலையை வீட்டிலிருந்து செய்வது வாடிக்கையாகிவிட்டது.

உணவு விடுதிக்குச் சென்று உண்ணும் வழக்கம் மறந்துவிட்டது; மறைந்துவிட்டது.

பழையபடி கோயில்களில் எளிமையாக திருமணம் நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை ஆகிவிட்டது.

வீட்டின் பூஜை அறைக்கு முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது.

மனிதர் மரணம் கூட அமைதியாக அனுசரிக்கப்படுகிறது. வெறுங்கூட்டமும் வெற்று ஆர்வாரமும் தவிர்க்கப்படுகிறது.

மருத்துவர்கள் பயன்படுத்தும் காப்புடை தயாரிப்போர், முகக்கவசம், கிருமி நாசினி, அகச்சிவப்பொளி வெப்பமானி தயாரிக்கும் கார்ப்போரேட் நிறுவனங்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டன.

   இந்த வரிசையில் மிக முக்கியமான மாற்றம் என்பது காணொளிக்காட்சி வாயிலாக காரியங்களைச் செய்யப் பழகியது ஆகும்.

  இன்று காணொளிக்காட்சி மூலம் நடந்த பிஎச்.டி பட்டப் பேற்றுக்கான ஒரு பொது வாய்மொழித் தேர்வில் என் இல்லத்தில் இருந்தவாறு நானும் பங்கேற்றேன்.

   ‘கொல்லிமலை வரலாறும் வழிபாட்டு முறைகளும்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்த கரூர் ஸ்ரீ சாரதா கல்லூரி மாணவி திருமதி இரா. ஹேமா நாமக்கல்லில் வசிப்பவர். புறத்தேர்வாளர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் ப.இராஜேஸ் தஞ்சையிலிருந்து தன் வீட்டிலிருந்து வாய்மொழித் தேர்வை அருமையாக நடத்துகிறார். நெறியாளர் முனைவர் சு.இளவரசி கரூரிலிருந்து ஒருங்கிணைக்கிறார். முன்னரே திட்டமிட்டபடி, சரியாக காலை பதினொன்று மணிக்குத் தேர்வு தொடங்குகிறது. ஆய்வாளர், ஆர்வலர், பேராசிரியர் என நாற்பது பேர்கள் இணையவழியில் இணைகிறார்கள்; வினா தொடுக்கிறார்கள்; ஆய்வாளர் இயல்பாகவும் பொருத்தமாகவும் விடையளிக்கிறார். பின்னர் புறத்தேர்வாளர் சில வினாக்களைத் தொடுக்கிறார். ஆய்வாளர் அளித்த விளக்கத்தில் நிறைவடைந்ததும் தேர்வினை நிறைவு செய்கிறார்.

   இந்தக் காணொளிக்காட்சி  முறையில் யாருக்கும் அலைச்சல் இல்லை; பல்கலைக்கழகத்துக்குப்  பணச்செலவு இல்லை; புறத்தேர்வாளரை வரவேற்று, உரிய வகையில் உபசரித்து அனுப்பிவைக்கும் வரை ஆய்வு நெறியாளருக்கு ஏற்படும் மன உளைச்சல் இல்லவே இல்லை. ஆய்வாளருக்கு அறவே பணச்செலவு இல்லை. சாதாரணமாக இது போன்ற சமயங்களில் சிற்றுண்டி, மதிய உணவு வகையில் குறைந்தது மூவாயிரம் ரூபாய் செலவாகும். மேலும், நேரடியாக நடக்கும் இப்படிப்பட்ட நிகழ்வில் உள்ளூரைச் சேர்ந்த சிலரே பங்கேற்பர். ஆனால் இணையவழியில் மாநிலத்தின் எல்லா ஊர்களிலிருந்தும் பங்கேற்கின்றார்கள்.

   இதில் கூடுதலாக ஒரு வசதி உண்டு. சொன்னால் சிரிப்பீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். என் மனைவியின் வேண்டுகோளை ஏற்று இடையில் சென்று பாத்திரங்களை விளக்கி வைத்துவிட்டு மீண்டும் வாய்மொழித் தேர்வில் பங்கேற்றேன்.

    இந்த மாற்றம் கொரோனா தந்த புதிய வாய்ப்பல்லவா? கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பது கிராமத்துப் பழமொழி. அந்த வகையில் கொரோனவால் கிடைக்கும் நன்மைகளை ஏற்றுக்கொள்வோம்.
   

11 comments:

  1. நீங்கள் சொல்வது போல் பல நன்மைகளும் உள்ளன ஐயா...

    ReplyDelete
  2. ஆமாம்!

    பல வசதிகளும்
    சில அசதிகளும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. Dear Dr, A lot of conveniences and to some extent,a little transparency ! However, we miss the traditional warmth and nearness !

    ReplyDelete
  4. அத்தனையுமே நல்ல மாற்றங்கள் அதுவும் வரவேற்கத்தக்க மாற்றங்கள் அனைத்துமே. நல்ல பாடமும் புகட்டி உள்ளது. பல செலவுகள் குறைந்துள்ளது எனலாம்.

    ஒரு சில கஷ்டங்கள் இருக்கின்றன. இணையம் வழி கல்வி கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்குக் கொஞ்சம் கடினமாக இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக மலைப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு.

    அடுத்து இன்னும் பயணங்கள் செய்ய இயலாத நிலை உள்ளது.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  5. துன்பங்கள் பல இருந்தாலும்
    நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன

    ReplyDelete
  6. அருமை. கூடி வாழ்தால் கோடி நன்மை என்ற சொலவடை கடந்து தனித்திரு பிறருடன் நெருக்கத்தைக் குறை விழிப்புடன் இரு - இது கொரானா ஊர் சுற்றும் காலம் மனிதா நீ சுற்றினால் உன்னை அடக்கி விடுவேன் என எச்சரிக்கை விடுக்கிறது. அறிவியல் வளர்ச்சியினால் மனிதன் வாழலாம் இல்லை அழியலாம். இதுவும கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன்...
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
  7. இடையில் சென்று சில பாத்திரங்களை விளக்கி....வீட்டில் நானும் தொடர்ந்து செய்கிறேன் ஐயா.
    இணையவழி வாய்மொழித்தேர்வு தற்போதைய நடைமுறைக்கு சரிதான். ஆனால் இந்த நடைமுறை, இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் பழைய நிலையில் அமையவேண்டும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா. தாமதமாக பார்த்ததற்கு மன்னிக்கவும். தாங்கள் அனுப்பியுள்ள செய்திகள் அனைத்தும் மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. அத்தோடு வாய்மொழித் தேர்வு பற்றிய விமர்சனங்களும் அருமை. பணிகளில் கூட நீங்கள் கவனம் செலுத்துவதைவிட சமையலறைகளிலும் செய்வதில் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உண்மையிலேயே அம்மா கொடுத்து வைத்தவர்கள் நன்றி ஐயா.

    ReplyDelete
  9. "என் மனைவியின் வேண்டுகோளை(??) (கட்டளையென்று சொல்வதை தவிர்த்திருப்பது தெரிகிறது.) ஏற்று இடையில் சென்று பாத்திரங்களை விளக்கி வைத்துவிட்டு மீண்டும் வாய்மொழித் தேர்வில் பங்கேற்றேன்", இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை இதுவும் இப்போது பழக்கமாகிவிட்ட வாழ்வியலோடு பிணைந்துவிட்ட ஒன்றுதான். நேர்முக தேர்வாளர்களுள் சிலரும் அப்படி செய்திருப்பார்கள் இடைவேளை நேரத்தில் .

    காணொளி மூலம் நடைபெறும் இந்த நேர்முக தேர்வுகளும் கல்வி போதனைகளும் வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete