கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகள் தேசிய சொத்தாக மதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஒவ்வொரு பள்ளியின் அருகிலும் அதிவேக சாட்டிலைட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பள்ளி வேலை நாள்களில் காலை மாலை குறிப்பிட்ட நேரத்தில் நாற்பது கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டினால் கேமரா பதிவு செய்துவிடும். அவ்வளவுதான். தண்டக் கட்டணம் ஆயிரம் டாலருக்கு மேல் (இந்திய பணத்தில் ஐம்பத்தைந்து ஆயிரம்). ஓட்டுநர் உரிமத்தில் கரும்புள்ளி விழும். நான்கு முறை கரும்புள்ளி வாங்கிய பிறகு வாகனம் ஓட்டும் உரிமம் செல்லாது.கனடாவிலும் காந்தியை நினைப்பதற்குச் சிலர் உள்ளனர் என்பதைக் கண்டேன். எங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஆண்ட்ரூ ஹேடன் பூங்காவிற்கு நான் சென்றபோது ஒரு கல்வெட்டு தூரத்தில் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தேன்; அதில் காந்தியின் பொன்மொழி பொறிக்கப்பட்டுக் கம்பீரமாகக் காட்சியளித்தது. மயிர்க்கூச்செரிய வியந்து நின்றேன். இன்றைய அவசர யுகத்தில் உலக மக்கள் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒரு நேர்மறைத் தாக்கத்தை நம் காந்தி ஏற்படுத்தியுள்ளார் என்பதை எண்ணியபோது எனக்குப் பெருமையாக இருந்தது. அது. நெருங்கிய உறவினருக்காக வைக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டு என்பது அதில் இருந்த வாசகத்தைப் படித்தபோது தெரிந்தது. ஒரு மரம் நட்டு அதன் அடியில் இக்கல்வெட்டைப் பதித்துள்ளார்கள். இப் பூங்காவில் அநேக மரங்கள் இப்படித்தான் நடப்பட்டுள்ளன.
கனடா நாட்டு மக்களையும் சைக்கிளையும் பிரிக்க முடியாது. மூன்று வயது குழந்தைகள் கூட தம் சிறிய தலைக்கேற்ற குட்டி ஹெல்மெட்டை அணிந்து கொண்டு இருசக்கர சைக்கிளை வெகு இயல்பாக ஓட்டுகின்றன. கூடவே எண்பது வயது தாத்தாக்களும் பாட்டிகளும் சைக்கிள்களை ஓட்டிச்செல்கின்றனர்! இவர்கள் வழி தனிவழி. ஆம். இங்கே சைக்கிள் ஓட்டுவதற்கென தனிச் சாலைகள் உள்ளன.
இது ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே காணப்படும் ஆளில்லா சைக்கிள் பழுதுநீக்கு மையங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. இவை நகராட்சியால் அமைக்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. இங்கு எல்லா வகையான ஸ்பேனர்கள் உண்டு; விதவிதமான ஸ்க்ரூ ட்ரைவர்கள், சுத்தியல்கள் உண்டு. காற்றடிக்க அளவுமானியுடன் கூடிய ஆள் இயக்கும் பம்ப் உண்டு. இன்னும் பற்பல கருவிகள் உண்டு. பக்கத்தில் ஏதேனும் உண்டியல் உள்ளதா என்று பார்த்தேன்; ஒன்றுமில்லை. இங்கும் மொடா குடியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவற்றைத் திருடிச்சென்று விற்றுக் குடிக்கும் அளவுக்கு “விவரமான வில்லங்கக் குடிகாரர்கள்” யாரும் இல்லை. அதனால் இந்தப் பொருள்கள் களவு போகாமல் அன்றாடப் பயன்பாட்டில் அருமையாக உள்ளன.
இந்தக் கொரோனா காலத்திலும் பொதுமக்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் நூலகங்கள் செயல்படுகின்றன. நூலகரே ஓட்டுநராகவும் செயல்படுகிறார். குறிப்பிட்ட இடத்தில் இந்த நூலகம் மூன்று மணிநேரம் நின்று செல்லும்.
புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள ஒரு தனிமனிதர் தானே தம் கைகளால் உருவாக்கிய பெட்டி நூலகம்.ஒன்றைக் கண்டேன்.உண்மையில் இது மரப்பலகையால் ஆன பெட்டி நூலகம்தான் நடைப்பயிற்சிக்கு வருவோர் சிறிது நேரம் இந்த நூல்களை எடுத்து வாசிக்கும் வழக்கமான காட்சியைக் கண்டு வியந்து போகிறேன்.
அடுத்தடுத்தப்
பதிவுகளில் இந்த வரிசையில் மேலும் சிலவற்றைப் பகிர்வேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
ஒட்டாவா நகரிலிருந்து.
சிறப்பான தகவல்கள். நல்ல வசதிகள், அதனை சரியாகப் பயன்படுத்தும் மனிதர்கள்...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி ஐயா.
தகவல்கள் ஒவ்வொன்றும் அருமை ஐயா... தொடர்கிறேன்...
ReplyDeleteஒவ்வொரு செய்தியும் வியப்பினைத் தருகிறது ஐயா
ReplyDeleteநன்றி
காதலற் மடப்பிடியொடும் களிறு வருவன கண்டேன்.. கண்டேன்.. கண்டறியாதன கண்டேன்.. கொஞ்சம் வியந்தேன்.. நெஞ்சம் நெகிழ்ந்தேன். மிகவும்
ReplyDeleteமகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க ஐயா
Beautiful.
ReplyDeleteஅப்பர், எம்பெருமானைக் கண்டு நெகிழ்ந்த உணர்வினை தலைப்பாகக் கொண்ட, அதிகமான வியப்புகைளைத் தந்துள்ள மிக அருமையான பதிவு.
ReplyDeleteவியப்பூட்டும் தகவல்கள் ஐயா பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete