Thursday, 28 January 2021

பெருமிதம் என்பது கெட்ட வார்த்தையா?

 பெருமிதம் என்பது கெட்ட வார்த்தையா?

   நான் ஓர் ஆசிரியர் என்பதில் எனக்குப் பெருமிதமே. பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதைப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்படி பெருமிதம் என்னும் சொல்லைப் பரவலாகப் பலரும் பயன்படுத்துகிறார்கள். நானும் பேசும்போதும் எழுதும்போதும் இதுவரை இப்படித்தான் பயன்படுத்தினேன். இது மாபெரும் தவறு என்பதை இப்போது உணருகிறேன்.

  கடந்த ஓராண்டு காலமாக திருக்குறளுக்கு ஓர் உரை எழுதுகிறேன். அதையும் இரண்டே வரிகளில் எண்சீர் வெண்பா வரிகளாக எழுதுகிறேன். போகிற போக்கிலா உரை எழுத முடியும்? குறளைப் பன்முறை ஊன்றிப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

     979 ஆம் குறளுக்கு உரை எழுதும்போதுதான் பெருமிதம் என்னும் சொல் அடிக்கடி கேட்ட வார்த்தையாக இருந்தாலும் அது ஒரு கெட்ட வார்த்தை என்பது தெரிய வந்தது.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்

 

என்பது குறள்.

பெருமையாவது தருக்கு இன்றி இருத்தல் என்பார் பரிமேலழகர்.

“ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்” என்பது இக் குறளுக்குக் கலைஞர் கருணாநிதி எழுதிய உரை.

இக் குறளுக்கு உரை எழுதிய மு.வரதராசன்  பெருமை என்பது செருக்கு இல்லாமல் இருத்தல் என்பார். பெருமைக் குணம் என்பது அகங்காரம் இல்லாமல் இருத்தல் என்பார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். தற்செருக்கு இன்மை பெருமையின் குணம் என்பது வ.சுப. மாணிக்கனார் உரை.

   பெருமிதம் என்னும் சொல்லுக்கு ஆணவம், செருக்கு, அகங்காரம், தற்செருக்கு என்னும் பொருள்கள் இருக்கின்றன என்பதை அறியாமல் இச் சொல்லை மிகப் பெருமையோடு பயன்படுத்தி வருகிறோம்.

பெருமை என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் pride. பெருமிதம் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் vanity, obstinacy  என்பனவாகும்.

     பெருமை என்னும் சொல் இருக்கும்போது பெருமிதம் என்னும் சொல்லை நாம் எதற்குப் பயன்படுத்த வேண்டும்? தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தினால் திருக்குறளுக்கு இழுக்குச் சேர்ப்பதாய் அமைந்து விடாதா?

   பெருமிதம் என்னும் சொல்லை அதற்கு உரிய பொருள் விளங்கும்படி இனி நாம் பயன்படுத்தலாம். எப்படி? சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

அவன் பணக்காரன் என்னும் பெருமிதத்தில் திரிகிறான்.

அந்தக் கவிஞருக்கு அதிகப் புகழ் என்னும் பெருமிதம் உண்டு.

ஆண் என்னும் பெருமிதத்தோடு பெண்களை இழிவாகப் பேசுகிறான்.

  ஆக, பெருமிதம் என்னும் சொல் இழிவுப் பொருளில் பயன்பட்டு வந்தது. என்பதைக் குறள் வழியே அறிகிறோம்.   பெருமிதம் என்னும் சொல்லைச் சரியாகக் கையாளும் புரிதல் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது உண்மையானால் இந்தப் பதிவின் முதல் பத்தியைத் திருத்த வேண்டும்.

நேற்றுவரை இப்படிச் சொன்னோம்:

  நான் ஓர் ஆசிரியர் என்பதில் எனக்குப் பெருமிதமே. பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதைப் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றுமுதல் இப்படிச் சொல்லப் பழகுவோம்:

  நான் ஓர் ஆசிரியர் என்பதில் எனக்குப் பெருமையே. பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ,

அமெரிக்காவிலிருந்து.

 

 

 

 

4 comments:

  1. இனி சரியாக உபயோகிப்போம். நன்றி ஐயா.

    ReplyDelete
  2. விளக்கம் அருமை ஐயா...

    இரண்டே வரிகளில் எண்சீர் வெண்பா எழுதுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி...

    ReplyDelete
  3. விளக்கம் அருமை ஐயா
    இனி சரியாய் பயன்படுத்துவோம்

    ReplyDelete
  4. நிறைய சூழல்களில் இப்படி தவறான சொல் பயன்பாட்டில் சிக்கிக் கொள்கிறோம்; மொழி சிக்கிக் கொள்கிறது. நம்மில் எத்தனை பேர் "After all" என்னும் ஆங்கிலப் பதத்தை ஒருவரின் செயல்பாட்டை "உயர்த்திப் பிடிக்க" பயன்படுத்துகிறோம்?

    ReplyDelete