சாலை விதிகளைப் பாப்பா – நீ
சரியாக அறியவேணும் பாப்பா!
ஓடி ஆடும் பிள்ளைகள் – வாகனம்
ஓட்டுதல் கூடாது பாப்பா!
பதினெட்டு வயதைத் தாண்டி- ஓட்டப்
பழகிட வேண்டும் பாப்பா!
உரிமம் இல்லாமல் பாப்பா –ஓட்ட
உரிமை இல்லையடி பாப்பா!
தலைக்கவசம் இல்லாமல் ஓட்டல் – பெரும்
தவறாகும் அறிந்திடு பாப்பா!
இடது புறமாக மட்டும் – வாகனம்
இயக்கப் படவேணும் பாப்பா!
சீறிப் பாய்ந்திடத் தூண்டும் – ஆனால்
சிக்னலை மதித்திட வேண்டும்!
சிக்னலை மதிக்காத போது – உடல்
சிதறிப் போனாலும் போகும்!
வேகம் மிகக்கெடுதல் பாப்பா –உனக்கு
விவேகம் வேணுமடி பாப்பா!
முன்னால் போகும் வாகனம் – அதை
முறையாக முந்தோணும் பாப்பா!
இடப்பக்கம் முந்திநீ சென்றால் – அது
இன்னலைத் தருமடி பாப்பா!
வலப்பக்கம் முந்திட வேண்டும் – நல்ல
வழியாகக் கொண்டிடு பாப்பா!
வாகன இடைவெளி முக்கியம் – இன்றேல்
வம்பில் மாட்டுவாய் சத்தியம்!
இருபது மீட்டர் இடைவெளி – என்றும்
இருப்பது நல்லதடி பாப்பா!
வலப்பக்கம் வாகனம் திருப்ப – சில
வழிமுறை உள்ளதடி பாப்பா!
வலக்கையை உயர்த்திக் காட்டு – உரிய
விளக்கையும் போட்டுக் காட்டு!
கண்ட இடங்களில் வண்டியை – நீ
கண்டிப்பாய் நிறுத்தாதே பாப்பா!
உரிய இடத்திலே நிறுத்து – அது
உனக்குமிக நல்லதடி பாப்பா!
-கவிஞர் இனியன், கரூர்.
அழகுத் தமிழில் அன்புக் குழந்தைகளுக்கு "மீண்டு வந்த பாரதியாய்....மீண்டும் வந்த பாரதியாய்" பாப்பா பாட்டு தந்திருப்பது பெரும் மகிழ்வு. இந்தப் பாக்கள் ஒரு பெரிய வாசகர் வட்டத்தை சென்று சேர வேண்டும் என்பது என் அவா.
ReplyDeleteசிறப்பு ஐயா...
ReplyDeleteஅழகு தமிழில், இனிய தமிழில் பாப்பா பாட்டு. பெரியோருக்கும் பொருந்தும். நன்று.
ReplyDeleteஇந்த தலைமுறையின் அழ.வள்ளியப்பா நீங்கள் ஐயா... அருமை
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வுப் பாடல்
ReplyDelete