Tuesday, 2 March 2021

தடுப்பூசி போட்ட தருணம்

     நான் அமெரிக்காவில் காலடி வைத்ததும் என் பெரிய மாப்பிள்ளையிடம் கேட்ட முதல் கேள்வி “எப்போது கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?” என்பதே. அவரும் உடனே உரிய வலைத்தளத்தில் புகுந்து முன்பதிவு செய்தார்.  திருமண நாள் குறிப்பிடப்படாமல் நிச்சயம் செய்யப்பட்ட பெண், மாப்பிள்ளை போல  என் மனைவியும் நானும் காத்திருந்தோம்.

  கொரோனா தடுப்பூசிக்கு எதிரான கருத்தூட்டம் இங்கு அறவே இல்லை. எனவே நாட்டு மக்கள், எங்களைப் போன்று ஊர் சுற்ற வந்தவர்கள் என எல்லோரும் பெயரைப் பதிவு செய்து வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

 சென்ற வாரம் செய்தி வந்தது. எனக்கு ஒரு நாள் என் மனைவிக்கு வேறொரு நாள் என்று. என்னவள் இதற்கு உடன்படவில்லை. மாப்பிள்ளை மீண்டும் வலைத்தளத்தில் புகுந்து சில தகவல்களை உள்ளீடு செய்து ஒரே தேதிக்கு மாற்றுமாறு வேண்ட, அடுத்த சில நிமிடங்களில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. ஒதுக்கப் பட்ட தேதி 1.3.2021; மனைவிக்கு மதியம் 1.15 மணி; எனக்கு  1.45 மணி.

    குறிப்பிட்ட நாளில் காலை 11.30 மணிக்கு என் மாப்பிள்ளையுடன் மகிழுந்தில் பயணமானோம். நாங்கள் இருப்பது அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் டெல்லாஸ் நகரில் கோலிவில் என்னுமிடம். அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் 120 கி.மீ. தூரத்தைக் கடந்து 'மினரல்வெல்' என்னும் ஊரை அடைந்தோம். அங்கே ஒரு பெரிய தனியார் மருந்துக்கடை. அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது.

   வரவேற்பாளரிடம் எங்கள் பாஸ்போர்ட்டை அடையாள ஆவணமாகக் காட்டினோம். எங்கள் முன்பதிவைச் சரிபார்த்தபின்னர், ஒரு சிறு அச்சிட்ட அட்டையைக் கொடுத்தார். அதில் பெயர், பிறந்த தேதியை எழுதி, தடுப்பூசி போடும் பகுதியில் ஓர் ஊழியரிடம் கொடுத்தோம். என் மனைவியை முதலில் அழைத்தார்கள். அடுத்து என்னை அழைத்ததால் அவளிடம் எதுவும் கேட்க இயலவில்லை. நான் அணிந்திருந்த மேல் கோட்டை கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு விரைவாக நடந்தேன்.  உள்ளே நுழையும் முன் என் முகக்கவசத்தைச் சரி செய்து கொண்டேன். ஓர் இருக்கையில் அமரச் சொன்னார் என்னை வரவேற்ற தம்பி. எந்தக் கையில் போடலாம் எனக் கேட்டார். எந்தக் கையில் வேண்டுமானாலும் போடலாம் என்று சொன்னேன். அவர் தன் கைப்பேசியில் இருந்த தகவலைச் சரிபார்த்துவிட்டு, அதன் திரையில் கையொப்பம் போடச் சொன்னார்; வலது ஆட்காட்டி விரலால் கையொப்பம் இட்டேன்.

    முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சிறிய அறுவை சிகிச்சையின் போது ஓர் ஊசி போட்டுக்கொண்ட நினைவு வந்தது. அதற்குப் பின்னால் ஊசி போட்ட அனுபவம் இல்லாததால் இப்போது எப்படியிருக்குமோ என்ற சிந்தனையில் இருந்தேன்.

   அவர் தன் கைகளில் புதிய கையுறைகளை அணிந்து கொண்டு, ஒரு புதிய ஊசியால், ஒரு புதிய குப்பியிலிருந்து மருந்தை உறிஞ்சினார். மருந்துக் குப்பியின் மீது ஃபைசர்(Pfizer) என எழுதப்பட்டிருந்தது. என் வலது மேற்கையில் ஒரு நொடியில் மருந்தைச் செலுத்தினார்; ஒரு சிற்றெறும்பு கடித்த உணர்வு ஏற்பட்டது. ஊசி போட்ட இடத்தின்மேல் மருந்து தடவப்பெற்ற ஓர் ஒட்டியை ஒட்டினார். அவர் வேலை முடிந்தது என்பதற்கு அடையாளமாக ஒரு புன்முறுவலை உதிர்த்தார். அது அவரது முகக்கவசத்தையும் தாண்டி என்னை அடைந்தது. நன்றி சொல்லிவிட்டு நடந்தேன். இது இலவச ஊசி அன்று. உரிய தொகையை எங்களுக்கான காப்பீட்டு நிறுவனம் செலுத்திவிடும்.

     ஊசி போட்டுக் கொண்டவர் அந்த வளாகத்தில் பதினைந்து நிமிடம் இருக்க வேண்டும் என்பது விதி. மருந்துக் கடையைச் சுற்றிப்பார்த்து நேரத்தைப் போக்கினோம். அது மருந்துக் கடை மட்டுமன்று; ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் என்பது பின்னரே தெரிந்தது! அங்கு இல்லாத பொருள்களே இல்லை.

  அப்புறம் என்ன? நாடு விட்டு  நாடு வந்து இப்படியெல்லாம் நடக்கிறதே என்ற இனம் புரியாத ஒரு மன உணர்வுடன், அதே சமயம் ஒரு மன நிறைவுடன் இல்லம் திரும்பினோம்.

    இரண்டாவது தவணை ஊசியை வருகிற 22ஆம் தேதி போட வேண்டும்.

எல்லாம் விதிப்படி நடக்கின்றன. “ஊழிற் பெருவலி யாவுள?” என வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

10 comments:

  1. தடுப்பூசி அனுபவம் நன்று. நலமே விளையட்டும். இரண்டாவது தவணை ஊசியையும் வெற்றிகரமாக போட்டுக்கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  2. இந்தியாவில் ஒரு அரசு மருத்துவமனையில் உடனே போட்டுக் கொள்ளலாம்.

    ReplyDelete
  3. நல்ல அணுபவப்பகிர்வு ஐய்யா.
    நாங்கள் இன்னும் நான்கு மாதங்களுக்குள் போட்டுக்கொள்வோம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. நிகழ்வுகளை நேரில் பார்த்ததுபோல் அழகாக தொகுத்து இருக்கிறீர்கள் ஐமா.

    வெற்றிகரமாக அடுத்த ஊசியையும் போட்டுக் கொள்வீர்கள்.

    ReplyDelete
  5. I read your message just within 10 minutes after I have taken my vaccination on 8th March 2021 in Coimbatore. Wish you good luck.

    ReplyDelete
  6. நன்றி இனியன் ஐயா

    இவண்
    அருணகிரி ஈஷா கோவை

    ReplyDelete