ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்குது சுபதினம் என்பது 1969இல் வெளிவந்த சுபதினம் திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகள். நான் பழைய காலத்துப் பதினோராம் வகுப்பில் படித்த காலக்கட்டம் அது. அப்போது சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒலித்த அந்தப் பாடல் இன்னும் என் செவிகளில் ஒலிக்கிறது.
மூத்த வலைப்பூவர்களில் ஒருவரான டாக்டர் என்.வி.சுப்பராமன் அந்த சுப தினங்களைச் சுட்டிக் காட்டி நாள்தோறும் பதிவிடும் வழக்கமுடையவர். அந்த வகையில் நேற்று World back up day என்பது குறித்து ஆங்கிலத்தில் அழகானதொரு பதிவிட்டிருந்தார்.
என் சிந்தனையைத் தூண்டிய பதிவாக அது
அமைந்தது.
மேலே சொல்லப்பட்ட சுபதினங்களில்
ஒன்று உலக தரவுக் காப்பு நாள் என்பதாகும். இது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 31ஆம்
நாள் கொண்டாடப்படுகிறது.
நாம் நமது கோப்புகளை நம்முடைய கணினி,
மடிக்கணினி அல்லது கைப்பேசியில் சேமித்து வைத்துள்ளோம். நமது குடும்ப விவரம்,
கொடுக்கல் வாங்கல் என எல்லாம் அதில் இருக்கும். நாம் ஆசை ஆசையாய் எழுதிய கவிதை,
கதை, கட்டுரைகள், விரும்பி எடுத்த விதவிதமான படங்கள் அனைத்தையும் சேமித்து
வைத்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் ஒரு நொடியில் காணாமல் போய்விடும் என்பதை நாம்
கவனத்தில் கொள்வதில்லை.
வழக்கம்போல் காலையில் எழுந்து கணினி அல்லது கைப்பேசியைத் திறந்து பார்த்தால்
துடைத்து வைத்த சிலேட்டைப் போல வெறுமனே காட்சியளிக்கும். நாம் சேமித்து வைத்த தரவு
எதுவும் மீளப் பெற முடியாத வகையில் தொலைந்த நிலையில், நிலைகுலைந்து நிற்போம்.
வைரஸ் தாக்குதலால், கணினியில் ஏற்பட்ட கருச்சிதைவால், கைப்பேசியைத் தொலைத்து
விடுவதால் நமது தரவுகளெல்லாம் தொலைந்து போய்விடும் என்பது நம்மில் பலருக்கும்
தெரியாது.
இனி தரவுகளைக் காக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக தரவு காப்பு நாள் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் சேமித்து வைத்துள்ள தரவுக் கோப்புகளின் இரண்டாம் படியை எடுத்து வெளிப்புற வன்தட்டுகளில்(Hard Disc) சேமித்து வைத்துக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
இரண்டாம் படி எடுத்து வைப்பது
நமக்குப் புதிது அன்று. பத்திரப் பதிவு அலுவலகங்களில் மூலப்பத்திரங்களின் நகல்
எடுத்துப் பாதுகாப்பது நம் நாட்டில் நெடுங்காலமாக உள்ள நடைமுறையாகும். இப்போது
பத்திர நகலை குறுந்தகட்டில் பதிந்து தருகிறார்கள்.
தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார்
வாழ்க்கை வரலாறு உங்களுக்குத் தெரியுமே. சுந்தரர் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி
கட்டும் நேரத்தில் அவரைத் தடுத்தாள வந்தார் சிவபெருமான் அதுவும் முதிய அந்தணர்
கோலத்தில். “இதோ உன் பாட்டனார் எனக்கு எழுதிக்கொடுத்த இந்த அடிமை சாசனத்தின்படி நீ
எனக்கு அடிமை ஆகிறாய். என்னுடன் வா” என்றார் சிவபெருமான். அதைக் கேட்டு
அதிர்ச்சியடைந்த சுந்தரர் கண் இமைக்கும் நேரத்தில் அவ்வோலையைப் பிடுங்கிக்
கிழித்துப் போட்டார். விட்டாரா சிவபெருமான்? “நீ கிழித்தது நகல். இதோ பார் மூல
ஆவணம்” எனச் சொல்லி அவரைத் தடுத்தாட்கொண்டார். படி எடுத்துத் தரவுகளைப் பாதுகாப்பது என்பது தமிழ்நாட்டில்
புழக்கத்தில் இருந்துள்ளதை இதன் மூலம்
அறியலாம்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்
என்பது வள்ளுவரின்
வழிகாட்டும் குறள். வரும் துன்பத்தை முன்னதாக அறிந்து காத்துக்கொள்ளும்
அறிவுடையார்க்கு அவர்கள் நடுங்கும்படியாக வரும் துன்பம் எதுவும் இல்லை என்பது
இக்குறளின் பொருளாகும்.
ஆகவே இன்றே நமது தரவுகளை வேறோர்
இடத்தில் இரண்டாம் படியாகச் சேமித்து வைப்போம்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
துச்சில்: அமெரிக்கா.
backup... its a necessary awareness for this digital era ..
ReplyDeletethank you sir
தாங்கள் சொன்னவற்றை அவசியம் செய்ய வேண்டும்... அருமை ஐயா...
ReplyDeleteஅழகிய பாதுகாப்பு குறித்த அருமையான பதிவு ஐயா.
ReplyDeleteமுன்னெச்சரிக்கை என்பது வாழ்க்கையின் மிகத்தேவையான ஒன்று. தமிழ் வார இதழ்களில் "முன்னெச்சரிக்கை முனுசாமி" என்கிற ஒரு பாத்திரம் மிகவும் பிரபலம். எனக்கு அந்தக் கால நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteடெல்லியில் பயணச்சீட்டு பரிசோதனை மிகவும் கெடுபிடியாக இருந்த காலம். நம்ம ஊர் அண்ணாஜியும் சர்தார்ஜியும் ஒன்றாகப் பேருந்தில் ஏறுகிறார்கள். அண்ணா 2 சீட்டு கேட்கவும், சர்தாருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி, தனக்கும் சேர்த்து சீட்டு வாங்கியதர்க்காக. உடனே அண்ணா சொன்னர்,"எனக்கு மட்டும் தான், ஏனென்றால் ஒரு சீட்டு தொலைந்து போனால்...".
சிறுது நேரம் யோசித்த சர்தார் "2 சீட்டும் தொலைந்து போனால்.. ?" என்று கேட்டுவிட்டு ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். அதற்குப் பிறகு போட்டாரே ஒரு போடு நம்ம அண்ணாச்சி... "அது தெரிந்து தான் Monthly Pass வாங்கி வைத்துள்ளேன்." என்று.
Back Up....! Back Up for the Back Up...! அதற்கும் ஒரு Back Up...! எப்பூ......டி...? நாங்களெல்லாம் அந்தக் காலத்திலேயே....!
நீங்கள் கூற வந்தது மிகவும் சரி. ஏனெனில் கணினித் துறையில் ஒவ்வொரு கோப்புக்கும் மூன்று நகல் இருக்க வேண்டும் என்பது விதி.
Delete