Sunday, 7 March 2021

தொல்காப்பியர் திருநாள்

     அரசு அறிவிப்பின்படி தைத் திங்கள் இரண்டாம் நாள் (ஜனவரி 15 அல்லது 16) திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு. 31. தொல்காப்பியர் வாழ்ந்த காலம் கி.மு.300.  அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன். ஏனோ தொல்காப்பியருக்கு விழா எடுக்க நாள் குறிக்காமல் வள்ளுவருக்கென ஒரு நாளை வகுத்தனர்.

     பல ஆண்டுகளுக்கு முன் எனது தமிழாசான் பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள் சித்திரை முதல் நாளைத் தொல்காப்பியர் நாளாக அமைக்க வேண்டுமென தினமணியில் அவர் எழுதிய நடுப்பக்கக் கட்டுரை வாயிலாக தமிழ் நாட்டரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர் கூற்றை வழிமொழியும் வகையில் நாசா விண்வெளி விஞ்ஞானியும், சிந்துசமவெளி ஆய்வாளரும் எனது கெழுதகை நண்பருமான திரு.நா.கணேசன் அவர்கள் தினமணியில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதினார். மேலும் உலகத் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்துச் சித்திரை முதல் நாளை தொல்காப்பியர் திருநாளாக அறிவிக்க வேண்டுமென அரசுக்கு உரிய வகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில் அவர் என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு கவிதை எழுதத் தூண்டினார்.

       மிகவும் கடினமானது எனக் கருதப்படும் கட்டளைக் கலித்துறை யாப்பில் ஒரு பதிகம் எழுதியுள்ளேன். அதை அறிவார்ந்த வலைப்பூ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் கழிபேருவகை அடைகிறேன்.

 

தொல்காப்பியர் திருநாள் பதிகம்

(கட்டளைக் கலித்துறையில் அமைந்தது) 


இப்படி வாழ்கென இன்தமிழ்ப் பாட்டில் இசைத்தவரை

அப்படிச் சொல்ல அகம்புற மென்றே அறைந்தவரை

முப்பால் புகட்டும் முதல்வனைக் காட்டிலும் மூத்தவரை

எப்பால் புகினும் இவர்க்கிணை இல்லென ஏத்துவமே!  1

 

பாருயிர் தம்மைப் பகுத்து வகுத்ததைப் பட்டியலில்

ஆருயிர் ஆய்ந்தே அறிவோ டிணைத்த அறிவியலார்

ஊரும் உலகும் உவந்திடத் தந்த உயிரியலார்

பாருள மாந்தர் பணிந்து வியந்திடும் பாங்கினரே!  2 

 

மூலமாம் நூலிது மூலையில் சோர்தல் முறையிலவே

ஞாலம் முழுவதும் ஞாயிறு போல நலம்தரவே

காலம் கனியும் கணேசன் அருளால் கணப்பொழுதில்

பாலம் அமைக்கும் பணியில் இணைவோம் பரிவுடனே! 3  

 

இணையெனப் பாரில் எவரும் இலாத இலக்கணியை

அணையா விளக்கென யாவரும் போற்றிட ஆக்கிடுவோம்

இணையும் கரங்கள் எதனையும் வென்றிடும் என்றறிவோம்

கணைபோல் விரைந்து கடமைகள் செய்வோம் களிப்புறவே! 4

 

அலகிலாச் சீர்கொள் அருந்தமிழ் காத்திடும் ஆர்வமுடன்

உலகெலாம் வாழும் உணர்வுடைச் சான்றோர் உயிர்ப்புடனே

பலவகை யானும் பணிகளைச் செய்திடும் பாங்குடனே

இலக்கை அடையும் இலக்கினைக் கொண்டே இயங்குவரே! 5

 

மொழியியல் என்னும் மொழிநெறி பற்றி மொழிந்தவரை

விழியெனப் போற்றி விளங்கிடச் செய்ய விரும்புவதால்

அழியாப் புகழை அவருக் கணியாய் அளிப்பதற்கு

வழியென ஒன்றை வகுக்கும் தமிழினம் வாழியவே!   6 

 

காட்டா றெனப்படும் காலம் சமைத்த கடுஞ்சுழலில்

மாட்டா திருந்த மணிநூல் உலகினில் மற்றிலையே

கேட்டா லெவரும் கிளர்ந்தெழு வார்கள் கெழுதகையீர்

நாட்டா ரிடையே நவின்றிட வாரீர் நலம்பெறவே!  7

 

தொல்காப் பியர்திரு நாளென ஒன்றினித் தோன்றிடவே

ஒல்காப் புகழ்மிகு ஒண்டமிழ்ச் சீர்மிக ஓங்கிடவே

ஒல்லும் வகையில் உறுதுணை யாகி உதவிடவே

வெல்லும் வகையில் வெறிகொண் டெழுக வினைசெயவே!  8

 

பத்தரை மாற்றுப் பசும்பொன் எனத்தகும் பாவலரின்

முத்திரை யாக முழங்கும் திருநாள் முகிழ்த்திடவே

இத்தரை மீதினில் என்றும் அவர்பேர் இருந்திடவே

சித்திரை ஒன்று சிறப்பாய் அமைந்திடச் செய்குவமே!  9

 

செல்வழி நன்று சிறகை விரிப்போம் சிலிர்ப்புடனே

வெல்வ துறுதி விளைந்திடும் வெற்றி விரைவினிலே!

தொல்காப் பியரவர் தொன்மை அறிந்த அரசினரும்

நல்குவர் ஆணை நனிவிரை வாக நடைபெறுமே!  10

 

        -கவிஞர் இனியன், கரூர்.

         துச்சில்: அமெரிக்கா

 

 

 

 

 

 

 

5 comments:

  1. அருமை ஐயா
    தொல்காப்பியர் புகழ் போற்றுவோம்
    விரைவில் தொல்காப்பியர் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகட்டும் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. கவிதை அருமை ஐயா கோரிக்கை நிறைவேறட்டும்.

    ReplyDelete
  3. அருமை ஐயா.

    விரைவில் தொல்காப்பியர் நாள் குறித்த அறிவிப்பு வரட்டும்.

    ReplyDelete