26/5/2021 புதன் மாலை ஏழு மணி. என் அழைப்பை ஏற்றுக் குறித்த நேரத்தில் வந்து கொட்டம் அடித்தது ஒரு மாணவர்ப் படை.
கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில் நான் பணியாற்றிய கால் நூற்றாண்டு காலத்தில்(1979-2004) என்னிடம் படித்த நூற்றுக்கணக்கான மாணவர்களில் பலரை,அமெரிக்காவில் இருந்த வண்ணம், இணையவழியில் ஜூம் செயலி மூலமாகச் சந்தித்து உரையாடினேன்.
1979-80இல் என்னிடம் படித்த மேனிலை வகுப்பு முதல் தொகுதியைச் சேர்ந்த
மாணவர் மேனாள் தமிழகப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி
ஆற்றிய விழிப்புணர்வு உரை பெருந்தொற்றை வெல்வதற்கான புதிய வல்லமையைத் தந்தது. அவருடைய வகுப்புத் தோழர்கள் இந்திய வருமான
வரித்துறை ஆணையர் எம்.இரத்தினசாமி,I.R.S., அருணாச்சல பிரதேச காவல்துறைத் தலைவர் வி.ஜெ.சந்திரன்,I.P.S
ஆகியோர் உற்சாகமாக உரையாடி வியப்பின் எல்லைக்கு அழைத்துச் சென்றார்கள்.Diamond Jubilee School Centenary Building
தத்தம் துறைகளில் முத்திரை பதித்துப்
பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், இணையவழிக்
கூட்டத்தில் பங்கேற்று இனிய நினைவுகளை இந்த இனியனுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
ஒருவர் பாட, இன்னொருவர் கவிதை சொல்ல, வேறொருவர் நடித்துக்காட்ட, மேலும் ஒருவர்
பள்ளி நூற்றாண்டு விழாவைப் பார்த்தவாறு விவரிக்க இரண்டு மணி நேரம் இரு நிமிடமாகக் கழிந்தது.
சரவெடி
வெடித்தது போன்ற நகைச்சுவைகள் அரங்கேறின! அனைவரும் வாய்விட்டுச் சிரிப்பதற்கான
வாய்ப்பாக, வரமாக இந்த நிகழ்வு அமைந்தது.
அறிமுக நிகழ்வுக்குப் பிறகு அனைவரையும் பள்ளி வளாகத்துக்கு அழைத்துச்
சென்றேன். அவர்கள் விளையாடி மகிழ்ந்த ஆடிடம், நட்ட மரங்கள், அமர்ந்து படித்த
வகுப்பறைகள் அடங்கிய படத்தொகுப்பைக் காட்டியபோது உணர்ச்சி மயமாகி உற்சாகக்குரல்
எழுப்பினார்கள். ஒரு மாணவர், “இது நான் நட்ட வாகைமரம். ஓங்கி உலகளந்த
உத்தமனைப்போல் பரந்து விரிந்த மரமாக உள்ளதே!” என வியந்துரைத்தார். மாணவர்களின் மலரும்
நினைவுகள் மடை திறந்த வெள்ளமாய்ப் பாய்ந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற மாணவர் மூவரின் பணிகள்
பாராட்டத் தக்கவை. கோவையில் உயிருக்குப் போராடும் பெருந்தொற்றாளர்க்கு இலவச
ஆக்ஸிஜன் வழங்கும் நந்தகுமார். கோபியில் பொதுமுடக்கக் காலத்தில் ஏழை எளியோர்க்கு
உணவுக்கொடை நல்கும் கிளமெண்ட் பிரேம்குமார்; கோபியில் பெருந்தொற்றில் உயிரிழந்தவரின்
உடலுக்கு இறுதி மரியாதை செய்து தன் வாகனத்தில் கட்டணமின்றி மயானத்திற்கு
எடுத்துச்சென்று உதவுகிற ஓட்டுநர் சக்திகுமார். இவர்கள் மனிதர் வடிவில் நடமாடி
வரும் தெய்வங்கள் என்பேன்.
மேலும்
ஒரு குறிப்பிடத் தகுந்த செய்தி யாதெனின், மாணவர் பலரும் மறக்காமல் நினைவு கூர்ந்த
ஒரு மாமனிதர் பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் நம் நினைவில் வாழும் ஓ.கு.தியாகராஜன்
அவர்கள்.
சுருங்கச் சொன்னால் இந்த மாணவர்களைச் சந்தித்தப் பிறகு பத்து வயது
குறைந்ததுபோல் உணர்கிறேன். ஊர் நடுவே உயர்ந்து நிற்கும் இந்தப் பழமரங்களின்
வேர்களுக்குக் கொஞ்சம் நீர் வார்த்த எளிய தோட்டக்காரன் என்ற வகையில் அண்ணாந்துப்
பார்த்துப் பெருமைப்படுகிறேன்.
ஆசிரியராய் இருப்பது பேறு. இப்படி ஆகச் சிறந்த மாணாக்கர் குழாம் அமைவது
பெரும்பேறு. கூட்டத்தில் பங்கேற்று மகிழ்ந்த, மகிழ்வித்த மாணாக்கச் செல்வங்கள்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அவர்களுக்கும், அவர்களுடைய மனைவி மக்களுக்கும்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
முனைவர்
அ.கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.
இந்த இன்பம் தான் பேரின்பம் ஆசிரியரே!... அன்புடன் ஸ்ரீநாத்.
ReplyDeleteஆகா...! வாழ்த்துகள் ஐயா...
ReplyDeleteமண்ணில் பிறந்த எவருக்கும் கிடைக்காத பேறு ஆசிரிய சமுதாயத்திற்கு கிடைக்கும். அந்த வகையில் உங்கள் மாணாக்கர்கள் உயரிய பதவியை அடைந்ததுடன் நற்சேவைகள் புரிவது மிகவும் பாராட்டுக்குரியதே. தன்னில் தம் மக்கள் மேம்பட்டவர்களாக இருப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சி. அதேபோன்று தன்னிடம் கல்வி கற்றவர்கள் தரணி போற்றும் மனிதர்களாக இருப்பது ஆசிரியருக்கு கிடைத்த மகிழ்ச்சி. விதை நல்லதாக இருப்பின் விருட்சமும் நன்றாகவே இருக்கும். மகிழ்ச்சி.
ReplyDeleteமகிழ்ச்சியும் உணர்ச்சியும் ஒருங்கிணைந்த வாய்ப்பு. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்குபெற்றேன்.
ReplyDeleteஆசிரியர் தம் மாணவர்களைச் சந்திப்பதென்றால் அதுவும் தற்போது அனைவரும் நல்ல நிலையில் இருப்பவர்களைக் காணும் போது ஆசிரியரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிழ்வான தருணங்கள். ஆசிரியர்களை மாணவர்கள் நினைவு கூர்ந்து மகிழ்வதும் எத்தனை தங்கமான, வைரமான தருணங்கள்! ஆசிரியருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய சிறப்பு. உங்களின் அந்த மகிழ்வான தருணங்கள் கிட்டியமைக்கு வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதுளசிதரன் (ஆசிரியர் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்)
கீதா