1969 ஆம் ஆண்டு. பழைய திருச்சி மாவட்டம், பழைய உடையார்பாளையம் தாலுக்கா, ஆண்டிமடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி அளவில் நடக்கும் பத்தாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.
ஊரில் மின்வசதி இல்லாததால் இரவு நேரத்தில்
பள்ளிக்குச் சென்று அங்கேயே தங்கிப் படிக்க நானும் என் நண்பர் இருவரும் முடிவு
செய்தோம். முதலில் மறுத்தாலும் பின்னர் என் அண்ணன் கிருஷ்ணன் அனுமதித்தார்.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வேறு உடையை மாற்றிக்கொண்டு அம்மா
கொடுக்கும் இரவு உணவு, படுக்கை விரிப்பு, படிக்கும் புத்தகம் இவற்றுடன் மீண்டும்
பள்ளிக்குச் சென்று, கொஞ்சம் படிப்பு நடுவே அரட்டை, படுத்தபின்பும் பேச்சு என
நாள்கள் நகர்ந்தன.
ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும். பள்ளி
வகுப்பறை ஒன்றில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த நாங்கள் திடீரென எடுத்த
முடிவின்படி மூன்று பேரும் அவரவர் சைக்கிளில் புறப்பட்டோம். அமாவாசை இருட்டு.
சைக்கிள் விளக்கும் இல்லை. நட்சத்திரங்கள் தந்த சிறு வெளிச்சத்தில் சைக்கிளை
மிதித்தோம். சாலையில் இருபுறமும் மரங்கள் கூடாரமாய்க் கவிழ்ந்து கிடந்த இடங்களில்
சைக்கிளை ஓட்டப் படாத பாடுபட்டோம். எதிரில் லாரி வந்தபோது ஒதுங்குவது பெரும்
சவாலாக இருந்தது. சில இடங்களில் விழுந்தோம்; எழுந்தோம். பதினேழு மைல் தூரத்தைக்
கடந்து, இரவு பத்தரை மணிக்கு விருத்தாசலம் சந்தோஷ்குமார் பேலஸ் முன் சென்று
இறங்கினோம். முதல் மணி நீண்டு ஒலித்தது. அவசரமாக டிக்கெட் வாங்கிக்கொண்டு
தியேட்டருக்குள் நுழையவும் லட்சுமி கல்யாணம் இரண்டாம் காட்சி படம் தொடங்கவும்
சரியாக இருந்தது.
எனக்கு ஒரு பக்கம் ஏதோ ஒரு சாகசம் செய்த
உணர்வு; மறுபக்கம் செய்யத் தகாத செயல் செய்த குற்ற உணர்வு. கொஞ்ச நேரந்தான்
இப்படி. பிறகு படத்தில் மூழ்கிப் போனேன்.
படம் விட்டதும் சைக்கிளை எடுத்துக்கொண்டு
வெளியே செல்ல முற்பட்டபோது யாரோ பின்னாலிருந்து என் சைக்கிளை இழுப்பதுபோல்
உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தால் எங்கள் ஊர்க்காரர் கைலாசம் என்பவர் நின்று
கொண்டிருந்தார். விருத்தாசலத்திற்கு வேலையாக வந்த அவர் கடைசி பேருந்தைத்
தவறவிட்டதால் இரண்டாம் காட்சி சினிமா பார்த்துவிட்டு விடியற்காலை முதல் பேருந்தைப்
பிடிக்க இருந்த அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். அவர் சென்று என் அண்ணனிடம்
போட்டுக்கொடுத்துவிட்டால் கதை கந்தலாகிவிடுமே என்னும் கலக்கத்தில், அவருக்கு பன்,
தேநீர் எல்லாம் வாங்கிக்கொடுத்து, என் அண்ணனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் எனக்
கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். “நான் ஒண்ணும் சொல்லல. ஆனா நீ இனிமே இப்பிடிச் செய்யாம
இரு” என்று எச்சரித்துவிட்டுப் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தார்.
மூவரும் சைக்கிளை ஒரு இயந்திர கதியில் மிதித்தோம்,
யாரும் யாரோடும் பேசாமல் பள்ளிக்குச் சென்று படுத்து எழுந்து, காலையில் வழக்கமான
நேரத்தில் அவரவர் வீடு திரும்பினோம். எங்கள் வீட்டுக்கு வந்து நான் சைக்கிளை
நிறுத்தியதும் என்னைப் துவரம் மிலாரால் அடித்து நொறுக்கினார் என் அண்ணன். அம்மா
தடுத்தும் கேட்கவில்லை. அத்தோடு விட்டாரா? அடுத்த நாளே அந்த சைக்கிளை
விற்றுவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார். நான் செய்தது மாபெரும் தவறு என்பதால்
எதிர்த்து ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று. அந்த கைலாசம் எனக்கு முன்னால்
வந்து என் அண்ணனிடம் போட்டுக் கொடுத்ததன் பின்விளைவே இவையெல்லாம் என்பதை
வாசகர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
உடனே என் அண்ணன் ஒரு நீண்ட கடிதத்தை எழுத, என்
பெரிய அண்ணன் என்னைக் கையோடு அழைத்துச்சென்று அந்த மே மாத இறுதியில் கோவையில்
சுவாமி சிவானந்தா உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
பொதுவாகப் பள்ளி இறுதி வகுப்பில் யாரையும் சேர்ப்பது வழக்கத்தில் இல்லாத காலத்தில்
நான் சென்று சேர்ந்ததால் வகுப்பிலிருந்த மாணவ மாணவியர், பாட ஆசிரியர்கள் அனைவரும்
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.
என் அண்ணன் என்னை
அங்கு சேர்த்தபோது என்ன சொல்லிச் சேர்த்தாரோ தெரியவில்லை, ஆசிரியர்கள் அனைவரும் என் மீது ஒரு கண்
வைத்தவாறே இருந்தனர். தலைமை ஆசிரியர் வாரம் ஒருமுறை அழைத்து அறிவுரை சொன்னார்.
பிறகென்ன? வாலைச்
சுருட்டிக்கொண்டு பாடங்களை ஒழுங்காகப் படித்தேன். அம்மாவுக்குச் சமைப்பதில்
உதவினேன். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அங்கேயே ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன்
வித்யாலயா கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். அக் கல்லூரியிலேயே என் இயற்பியல்
பட்டப்படிப்பும் தொடர்ந்தது.
தொடர்ந்து நான்
சொந்த ஊரில் படித்திருந்தால் என் நிலை என்ன ஆகியிருக்குமோ? என் சைக்கிளால் என்
வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட்டது. என் அண்ணன் பெருமாள் என்னைத்
தடுத்தாட்கொண்டார்.
பிறகு பல
ஆண்டுகள் சென்று கோவையில் சிட்டி சைக்கிள் மார்ட் என்னும் கடையில் ஒரு புதிய சைக்கிள்
வாங்கினேன். அந்த நாள்கூட நினைவில் உள்ளது. அது 10.7.1976. அது என் வாழ்வில் மேலும் ஒரு எதிர்பாராத திருப்பத்தை
ஏற்படுத்தியது.
அது என்ன திருப்பம்?
(தொடரும்...)
முனைவர் அ.கோவிந்தராஜூ,
தேசிய விருதாளர்
.
துப்பறியும் நாவல், திடீர் திரு ப்பங்கள்
ReplyDeleteநிறைந்த மர்ம நாவல்கள் போல ..அந்தகாலத்தில் ஆனந்த விகடன் , கல்கி யில் வரும் தொடர்கதைகளையும்
மிஞ்சி விடும் போல இருக்கிறது உங்க சொந்த கதை...பஹுத் அச்சா ஹை..(ஹிந்தி வகுப்பில் சேர்ந்து படித்த சம்பந்திக்கு நானும் ஹிந்தி படிக்கிரேன் கிறதை வேறு எப்படி காண்பிக்கிறது..,,)
கஹானி தோ அச்சா லக்தா....! லேக்கின், ஏதோ பொருள் குற்றம் இருப்பது போல் தோன்றுகிறதே...!
ReplyDelete1969ல் 10ஆம் வகுப்பில் பொதுத் தேர்வா? அல்லது 11ஆம் வகுப்பில்...?
எது எப்படியோ, இந்த சம்பவம் நடந்து முகச்சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1979ல் நானும் நண்பர்களும் விருத்தாச்சலத்தில் இருந்து நெய்வேலிக்கு "புதிய பறவை" திரைப்படம் பார்க்கச் சென்று திரும்பி வர பேருந்து கிடைக்காததால் விடிய விடிய தெர்மல் II பேருந்து நிருத்தத்தில் படுத்திருந்து அதிகாலை முதல் பேருந்தைப் பிடித்து விருத்தாசலம் வந்தது என் பக்கக் கதை.
இந்தக் கதையின் anti-climax தான் சூப்பர். அது என்னவென்று அடுத்த பின்னூட்டத்தில் பதிவிடுகிறேன்....!
Good to read ! While I read your write up , I always travel down the memory lane and use to masticate my good old days. It's an art taking the readers in the pillion of your cycle.
ReplyDeleteதிருப்பங்கள் நிறைந்த அனுபவம். இந்தத் திருப்பம் தங்களுக்கு நல்லதே செய்திருக்கிறது. அடுத்த திருப்பம் என்னவோ?
ReplyDeleteதுளசிதரன்
வாழ்வில் சில திருப்பங்கள் நமக்கு நன்மையே செய்யும். ஒரு நல்ல விஷயம் நீங்கள் அடி வாங்கிய போதும் அதை நீங்கள் நல்ல விதத்தில் எடுத்துக் கொண்டது. வழி மாற வைக்கும் வயதில் நீங்கள் நேர்மறையாக எடுத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கை நல்லவிதமாக அமைய வழி வகுத்திருக்கிறது ஐயா. அது உங்கள் வாழ்க்கையில் சிறந்த அனுபவம் எனலாம்.
அடுத்த திருப்பம் என்ன என்று அறிய ஆவல்.
கீதா
நடந்த நிகழ்வுகள் சுவாரசியம்... அடுத்த திருப்பத்திற்காக காத்திருக்கிறேன்...
ReplyDeleteஆகா
ReplyDeleteஅடுத்த நிகழ்விற்காகக் காத்திருக்கிறேன்
Interesting sir😊
ReplyDelete