Wednesday 26 May 2021

சகலமும் தந்த சைக்கிள் சாமி

     நான் வணங்கும் சாமிகளில் எனது சைக்கிளும் ஒன்று. அதனால்தான் சைக்கிள்சாமி என்று குறிப்பிட்டேன். நான் அரசு ஊதியம் பெறும் பணியில் சேர, முனைவர் பட்டம் பெற, வீடு கட்ட, கார் வாங்க, வங்கியிலே கொஞ்சம் வைப்பு நிதியாய் வைக்க, வறியவர்க்கு அல்லது உரியவர்க்குச் சிறிது வழங்க அடிப்படைக் காரணம் எனது சைக்கிள்தான். அதனால்தான் எனது புதிய ஹூண்டாய் காருக்குச் சமமாக மதித்து எனது 44 ஆண்டுகள் பழமையான சைக்கிளைப் பேணிப் பயன்படுத்தி வருகிறேன்.

    சென்ற பதிவில் 1976ஆம் ஆண்டில் கோவையில் ஒரு புதிய சைக்கிளை வாங்கினேன் என்று சொன்னது வாசகர்களுக்கு நினைவிருக்கும். முடித்த கையோடு கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ நேரு வித்யாலயா மேனிலைப் பள்ளியின் இயற்பியல்துறை ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கான விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பம் போட்டேன். பணி கிடைத்தது. மாத ஊதியம் ரூ.150(நூற்று ஐம்பது மட்டும்). வாரத்தில் இரு நாள்களில் மட்டும் ஆய்வகத்தில் வேலை இருக்கும். மற்ற நாள்களில் பள்ளி அலுவலகத்தில் வினாத்தாள் தட்டச்சு செய்வதுண்டு.கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமாள் அண்ணன் வீட்டிலிருந்து இரண்டு மாதம் இரயில் மூலம் நாளும் பள்ளிக்குச் சென்று வந்தேன்.

       எனக்கு என ஒரு கனவு இருந்தது. ஆனால் செலவு அதிகமாகுமே என யோசித்தேன். ஒரு நாள் முதல்வர் திரு.எச்.பாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து, வகுப்பறைக்குச் சென்று சில பிரிவேளைகள் பாடம் நடத்த வாய்ப்பு கேட்டேன். ஆசிரியர் யாரேனும் விடுப்பில் சென்றால் அந்தப் பாடவேளைகளை எனக்கு ஒதுக்க ஏற்பாடு செய்தார். முன் தயாரிப்புடன் சென்று நல்ல முறையில் நடத்தவே, சில பெற்றோர் என்னை அணுகித் தம் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்பை நடத்துமாறு வேண்டினார்கள். முதல்வர் ஒப்புதல் தந்ததால் ஒத்துக்கொண்டேன். குழந்தைகளின் வீட்டுக்குச் சென்று பாடம் நடத்த வேண்டியிருந்தது.

    உடனே செயலில் இறங்கினேன். மாதம் நூறு ரூபாய் வாடகையில் ஒரு ஓட்டு வீட்டைப்  பிடித்து பள்ளிக்கு அருகில் தங்கினேன். பள்ளி முடிந்ததும் குழந்தையின் வீட்டிலிருந்து கார் வரும். வகுப்பு முடிந்ததும் காரில் அழைத்துவந்து வீட்டில் விடுவார்கள். பணக்காரர் வீட்டுக் குழந்தை என்பதால் மாதம் இருநூறு ரூபாய் கிடைத்தது. பிறகு மேலும் சிலர் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த வருமாறு அழைத்தனர். அப்போதுதான் புதிய சைக்கிள் வாங்கும் யோசனை தோன்றியது. ஊருக்குப் பணம் அனுப்பியது போக, நூல்கள் வாங்க செலவழித்தது போக, சேர்த்து வைத்த பணம் ரூபாய் நானூறு தேறியது. ஒரு பெற்றோரிடத்தில் முன்பணம் நூறு வாங்கினேன். ஐந்நூறு ரூபாயில் புதிய ரலே(RALEIGH) சைக்கிள் வாங்கினேன்.  மாலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணி வரையில் மூன்று வீடுகளுக்கு சைக்கிளில் சென்று தனிப்பயிற்சி வகுப்பை நடத்தினேன்.

   தனிப்பயிற்சி வருமானம் சிறிது பெருகியதால் என் கனவுத் திட்டத்தைச் செயல்படுத்தினேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ தமிழ் படிக்க விண்ணப்பம் போட்டேன். தமிழகத்தில் முதல் முதலாகத் தொடங்கப்பட்ட அஞ்சல்வழிப் படிப்பு என்பதால் போட்டி அதிகமாக இருந்தது. என்றாலும் எனக்கு இடம் கிடைத்தது. ரூபாய் ஐந்தாயிரம் செலவு  பிடிக்கும் இரண்டாண்டுப் படிப்பு அது. என் சைக்கிள் கை கொடுத்தது. ஒரு நாளில் பத்து கிலோமீட்டர் பயணித்துப் பல வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தியதால் வருமானம் பெருகியது. எளிதாக எம்.ஏ. படிப்பை முடித்தேன். அதே பள்ளியில் தமிழாசிரியராகப் பதவி உயர்வும் பெற்றேன்.

     அடுத்த சில மாதங்களில் கோபிசெட்டிபாளையம் நகர்மன்ற மேனிலைப் பள்ளியிலும், அதே ஊரில் வைரவிழா மேனிலைப்பள்ளியிலும் அரசு ஊதியத்தில் முதுகலைத் தமிழாசிரியர் பணியில் சேர  வாய்ப்புகள் வந்தன. என் அண்ணனின் ஆலோசனையின்படி 10.8.1979 அன்று வைரவிழா மேனிலைப்பள்ளியில் பணியேற்றேன். சரியான சமயத்தில் அதாவது தமிழகப் பள்ளிகளில் மேனிலை வகுப்பு அறிமுகமான சமயத்தில் எம்.ஏ. முடித்திருந்த காரணத்தால் அந்த வேலை கிடைத்தது.

     நான் நினைத்திருந்தால் ஒரு TVS 50 வாகனத்தை வாங்கி பகட்டாகப் பள்ளிக்குச் சென்றிருக்க முடியும். ஆனால் 1985ஆம் ஆண்டில் திருமணம் ஆன புதிதில், புதிய சேட்டக் ஸ்கூட்டர் வாங்கும்வரை அதே சைக்கிளில்தான் பள்ளிக்குச் சென்று வந்தேன்.

       

எனதருமை சைக்கிள்

பிறகு என் வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியும் விரும்பாமலும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் அந்த சைக்கிள் மட்டும் மாறவில்லை. பின்னாளில் முதல்வராகப் பள்ளிக்குக் காரில் சென்றபோதுகூட, வாரத்தில் ஒருநாள் சைக்கிளில் செல்வதை வழக்கமாக்கினேன். பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் பேரணி செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். வார இறுதி நாள்களில் உடல்நல மேம்பாட்டிற்காகப் பத்து கிலோமீட்டர் வரை சைக்கிள் சவாரி செய்வதுண்டு. பணி நிறைவுக்குப் பிறகு உள்ளூரில் எங்கு தனியே சென்றாலும் சைக்கிளில்தான். மனைவியுடன் செல்வதாக இருந்தால் அல்லது மழை என்றால் மட்டும் காரில் செல்வதுண்டு.
பள்ளிக் குழந்தைகளுடன் சைக்கிளில்....

   இப்போதும் ஆயுத பூஜையன்று முதல் மரியாதை என் பழைய சைக்கிளுக்குத்தான்!

   சென்ற ஆண்டு கனடாவுக்குப் புறப்பட்டபோது என் சைக்கிளை நண்பர் ஒருவரிடமும், காரினை உறவினர் ஒருவரிடமும் தந்து பயன்பாட்டில் வைத்திருக்குமாறு சொல்லிவிட்டு வந்தேன். இயக்கப்படாமல் கிடப்பில் போடப்படும் வாகனம் துருப்பிடித்து நாளடைவில்  செயல்படாது போகும். ஆம். வாகனமும் மனிதனும் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.

  இந்த அளவிலே எனது சைக்கிள் புராணம் நிறைவடைகிறது.

முனைவர் அ.கோவிந்தராஜூ, 

அமெரிக்காவிலிருந்து.

7 comments:

  1. ஐயா உங்களின் சைக்கிள் அனுபவங்கள் வெகு சிறப்பு. உங்கள் உழைப்புடன் சைக்கிளும் சேர்ந்து உழைத்துவருகிறது.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  2. Excellent write up ! A bicycle is equal to 100 true friends. I never came across a person who loves his car more than his first bicycle bought on his own earnings.

    ReplyDelete
  3. தாங்களும் சைக்கிளும் நகமும் சதையும் போல வாழ்வது போற்றுதற்கு உரியது. Old is Gold. மிக்க நன்றிங்க ஐயா

    ReplyDelete
  4. அணுபவங்கள் அருமை சார்.
    எங்கள் அலுவலகத்திலும் ஒருவர் சைக்கிளில் தான் வருவார்.
    எங்கள் அணைவரையும் விட தமது 50 ஆவது வயதிலும் மிகவும் ஆர்வமாகவும் சுருசுருப்பாகவும் உள்ளார்.

    ReplyDelete
  5. ஆகா...! சைக்கிள் மீது என்னவொரு பாசம்...! அருமை ஐயா...

    ReplyDelete
  6. அருமையான பழைய நினைவுகள். 50வயதைக் கடந்த அனைவருக்கும் சைக்கிள் தான் ஆடிக்கார் பென்ஸ் கார். பழைய திரைப்படத்தில் நடிகர்கள் கேன்டில் பார் தூக்க சைக்கிள் தாவிச் செல்லும். அதைப் பார்த்து நானும் அவ்வாறு செய்து மோதி விழுந்த அனுபவமுண்டு. பழையன கழிதல் என்று சொல்லும் நாளில் இன்றளவும் தாங்கள் சைக்கிளைப் பேணி வருவது மகிழ்ச்சி. இரும்புப் பொருளானாலும் அதற்கும் உரிமை கொடுத்து உயிர் கொடுப்பது சிறப்பே. உம்மை சுமந்த மிதிவண்டியை 44ஆண்டுகளாக மனதில் சுமக்கின்றீர். உம் நினைவுகள் வாழ்க வாழ்க வாழ்கவே.

    ReplyDelete
  7. சைக்கிள் சாமி தலைப்பு நன்றாக இருக்கிறது. சைக்கிளால் நீங்கள் பெற்ற அனுபவங்களைச் சிறுகதையாக எழுதிவிடுங்களேன்.

    ReplyDelete