நீண்ட இடைவெளிக்குப்பின் நேற்று மாலை ஒரு புகழ்பெற்ற உணவகத்திற்குச் சென்றோம், அமெரிக்காவில் பெருந்தொற்றுத் தாக்கம் குறைந்துள்ள போதிலும் உணவகங்களில் வாடிக்கையாளர் வருகை வழக்கத்திற்கு மாறாகக் குறைந்தே காணப்படுகிறது.
நாங்கள் சென்ற உணவகத்தின் பெயரே
என்னை ஈர்த்தது. எம்.கே.காந்தி மால்குடி கார்டன்ஸ் என்பது அந்த உணவகத்தின் பெயர்.
மால்குடி டேய்ஸ் என்பது ஆர்.கே.
நாராயண் எழுதியுள்ள புகழ்வாய்ந்த ஆங்கில நாவல் என்பது உங்களுக்குத் தெரியும். அதில்
வரும் மால்குடி என்னும் ஊர் அவராக உருவாக்கிக்கொண்ட ஒரு கற்பனை ஊர். அந்தப் பெயரில்
அமைந்த உணவகம் என்பதால் எனது ஆர்வம் இரட்டிப்பானது. பெயரில் காந்தியின் பெயர் ஒட்டிக்கொண்டிருந்ததால்
என்னுடைய ஆர்வம் மேலும் அதிகரித்தது.
பொதுவாக அமெரிக்க உணவகங்களில் நம் ஊரைப் போல் வாடிக்கையாளரிடம் பணம் வாங்கிப்போட, மீதி சில்லரை கொடுக்க என ஒரு காசாளரையோ அதற்கான கல்லாப்பெட்டியையோ பார்க்க முடியாது. ஆனால் இந்த உணவகத்தில் கல்லா இருந்தது. கல்லாவில் ஓர் ஆள் இருந்தார். அவர் பெயர் மதன். அவர்தம் இருக்கைக்குப் பின்னாலிருந்த சுவரில் காந்தியின் பெரிய படமும், காந்தியின் பொன்மொழிகளும் அழகுற காட்சியளித்தன. அங்கு மட்டுமன்று சுவர்கள் எங்கும் காந்தியின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய அழகிய படங்கள் நிறைந்திருந்தன.
காந்தியின் பெயருக்கு ஏற்றாற்போல்
எளிமையான தூய்மையான மரத்தாலான இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அண்ணாந்து பார்த்தால் மின்விசிறியின்
இறக்கைகள் கூட மரத்தால் ஆனதாய் இருந்தன. என் ஒருவயது பேரனுக்காக அழகான உயரமான பாதுகாப்புடன்
கூடிய ஓர் இருக்கையை உடனே தந்தார்கள். அதுவும் மரத்தால் ஆனதே!
உணவு விவரம் அச்சிடப்பெற்ற ஏடு
ஒன்றைத் தந்தார்கள். அதன் முன் அட்டையிலும் காந்தி புன்னகை பூத்தார். ஏட்டைப் புரட்டினேன்.
எத்தனை எத்தனை உணவு வகைகள்! எல்லாம் சைவ உணவுகள்! சைவ உணவுகள் மட்டுமே.
மதன் அவர்கள் எங்கள் அருகே
வந்து நாங்கள் குறிப்பிட்ட பல்வேறு உணவு வகைகளின் பெயர்களையும் அளவையும் கையடக்கக்
கணிணியில் ஏற்றிச் சமையலறைக்குக் கடத்தினார். சற்று நேரத்தில் அந்தப் பெயர்களெல்லாம்
தத்தமக்குரிய உருவம் தாங்கி அணிவகுத்து வந்தன;
சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ந்தோம்.
முருங்கைக்காய் பருப்புச் சாறு
என்ற சூப் மிகுந்த சுவையுடன் இருந்தது. டெல்லி பனீர் தோசை வந்தது. “கன்னியாகுமரியிலிருந்து
டெல்லிவரை பரந்து விரிந்த பெரிய தோசையாக உள்ளதே” என்று என் துணைவியிடம் சொன்னேன். அதைக்கேட்ட
மதன் சிரித்தார்; மனைவி சிரிக்கவில்லை!
வந்த உணவினங்களை அனைவரும் பகிர்ந்து
உண்டோம்.
அங்கே கைகள் கழுவ தனி இடம்
இல்லை. கழிவறைக்குதான் செல்ல வேண்டும். சென்றேன். கழிவறை மிகத் தூய்மையாக இருந்தது!
ஓர் உணவகத்தில் சமையலறையும் கழிவறையும் தூய்மையாகப் பராமரிக்கப்படுமானால் அது சிறந்த
உணவகம் என நம்பலாம்.
வரும்போது மதன் அவர்களிடம்
பேச்சுக் கொடுத்தேன். அவர் நாகர்கோவில்காரர் என்றும் உணவகத்தின் உரிமையாளர் கோயமுத்தூர்காரர்
என்றும் பேச்சுவாக்கில் குறிப்பிட்டார். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தட்டேந்திச் சென்று
தாம் விரும்பியவற்றைப் போட்டுண்ணும் பஃபே செயல்படும் எனவும் சொன்னார்.
வயிற்றுக்கு உணவிட வேண்டும்
இங்கே வாழும் இந்தியருக்கெல்லாம் என்னும் உயர்ந்த நோக்குடன் செயல்பட ஏதுவாய் இருக்கும்
அவரைச் சில சொற்களில் பாராட்டிவிட்டு வெளியில் வாகன நிறுத்தப்பகுதியில் நின்ற என் மாப்பிள்ளையின்
மகிழ்வுந்தை நோக்கி நடந்தேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
அருமையான உணவகம்...
ReplyDeleteThanks
ReplyDeleteVery nice sir. அருமையான உணவகம்
ReplyDeleteஅருமை சம்பந்தி
ReplyDeleteநாங்கள் அங்கு சென்ற ஞாபகம் இல்லை
பதிவைப் படித்ததும் ஓர் அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.
ReplyDeleteVery nice and happy to know
ReplyDeleteசுவைமிகுந்த பதிவு👌
ReplyDelete