இங்கே அமெரிக்காவில் டெல்லாஸ் பகுதியில் வசிக்கிறார் என் மூத்த மாப்பிள்ளை. அவரது அளவிலா அன்பில் திளைக்கும் பத்துப் பன்னிரண்டு தமிழர் குடும்பங்கள் உள்ளன. அக் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அவ்வப்போது ஒன்றுகூடி தம் நாட்டின் கலாச்சாரத் தொடர்புடைய தீபாவளி, பொங்கல், ஐயப்பன் வழிபாடு போன்ற பல விழாக்களைப் பாங்குடன் கொண்டாடுவார்கள். விழாக்கள் ஏதும் இல்லாவிட்டாலும் கூட உண்டாட்டு எனச்சொல்லப்படும் ஒரு நாள் முழுவதும் உண்டு மகிழும் உணவுத் திருவிழா உண்டு.
அவற்றுடன்
தமக்குச் சோறு போடும் நாட்டையும் நன்றிப் பெருக்குடன் நினைக்கும் வண்ணம் அமெரிக்க
மண்ணுக்குத் தொடர்புடைய விழாக்களைக் கொண்டாடுவதும் உண்டு. அந்த வகையில் அவர்கள் சென்ற
ஜூலை மாதம் நான்காம் நாள் அமெரிக்க சுதந்திர தினத்தைக் கொண்டாடிய பாங்கினை ஒரு
தனிப்பதிவாக இட்டிருந்தேன். அந்த விழாவில் பங்கேற்ற நான் நம் நாட்டின் சுதந்திர
தினத்தை அவர்கள் கொண்டாடினால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து அந்தப்
பதிவில் எழுதியிருந்தேன்.
அதைப் படித்த அந்தத் திருக்கூட்டம் எனக்கு மிகப்பெரிய வியப்பைக் கொடுத்து
என்னைத் திக்குமுக்காடச் செய்த அந்த நிகழ்வினை இதோ உங்கள் கண்முன்னால்
காட்டுகிறேன்.
“வரும்
ஞாயிற்றுக் கிழமை ஒரு Family get together உள்ளது.
நீங்களும் அத்தையும் வரவேண்டும்” என ஓர் அன்புக்கட்டளை மாப்பிள்ளையிடமிருந்து
வந்தது. அது மற்றுமொரு உண்டாட்டு நிகழ்வு என எண்ணிய நான் அங்கு செல்வதைத் தவிர்க்க
நினைத்தேன். பிறகு அரை மனதுடன் ஒப்புக்கொண்டேன்.
இந்த முறை இந்த நண்பர்கள் சந்திப்பு ஃபிரிஸ்கோ பகுதியில் வசிக்கும் பாலா
அவர்கள் இல்லத்தில் நடந்தது. அங்கு நான் செல்வது இதுவே முதல்முறை.
காலை பத்தரை மணி நாங்கள் சென்றபோது. பாலாவும் அவர் துணைவியாரும் இருகை கூப்பி எங்களை அன்புடன் வரவேற்றார்கள். முதல் பார்வையிலேயே அவர் இல்லம் என் கருத்தைக் கவர்ந்தது. காரணம் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த அழகிய வண்ணக்கோலம்! பொதுவாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தம் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை; காரணம் எனக்குத் தெரியவில்லை.
உள்ளே அடி எடுத்து வைத்ததும் என் கண்ணில் பட்டது மிகப்பெரிய மூவண்ணக் கொடி. என்னை மறந்து உற்சாகத்தில் பெருங் குரலெடுத்து “அருமை! அருமை!” எனக் கூவினேன். கண்பார்வை இழந்தவன் மீண்டும் கண்பார்வை பெற்றால் எப்படி மகிழ்வானோ அப்படி அந்தக் கணத்தில் உணர்ந்தேன்! பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்து நின்ற சிறுமியர் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி எங்களை வரவேற்றனர். தொலைக்காட்சித் திரையில் வழக்கத்திற்கு மாறாக தேசபக்திப் பாடல்கள் தேனாய் ஒலித்தன.
அடுத்த அரைமணி நேரத்தில் என்னை வீட்டின் புழக்கடைப் பகுதிக்கு வருமாறு
அழைத்தனர். அங்கே சென்றால் அடுத்ததொரு வியப்பு என்னை வரவேற்றது. அங்கே ஆண்கள்,
பெண்கள், குழந்தைகள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து மகிழ்ந்து குலாவிய காட்சி
மறக்க முடியாதது. ஒரு நண்பர் ஒலிவாங்கியை எடுத்து என் பெயரைச் சொல்லி மூவண்ணக்
கொடியை ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். மகிழ்ச்சியுடன் சென்று நம் தேசியக்
கொடியை ஏற்றினேன். ஒரு நண்பர் சல்யூட் என்றார். அனைவரும் நெஞ்சை நிமிர்த்தி
சல்யூட் அடித்தோம். அது ஒரு பெருமித அனுபவம்!
பின்னர்
மகளிர் இருவர் மனத்தைக் கவரும் வகையில் தாயின் மணிக்கொடிப் பாடலைப் பாடினார்கள்.
என்னைப் பேசுமாறு பணித்தார்கள். அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றதாய் நம் பள்ளிப்
பாடத்திட்டம் சொன்னாலும் உண்மையில் நம் முன்னோர் குருதி சிந்தியே விடுதலை பெற்றனர்
என்பதை, உத்தம் சிங், பகத்சிங், இராஜகுரு, சுகதேவ், நேத்தாஜி, வ.உ.சிதம்பரம், வாஞ்சிநாதன்,
திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளின் வரலாற்றைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். உரையின்
நிறைவாக வாடிப்பட்டித் தியாகி சிறை சென்ற செம்மல், நினைவில் வாழும் பழனிசாமி
ரெட்டியார் அவர்களின் தியாக வாழ்வை விளக்கிக் கூறி, அவருடைய மகள்வழிப் பேரன்தான்
இங்கே நிற்கும் என் மாப்பிள்ளை சிவா எனச் சொன்னபோது வியப்புடன் ஆரவாரம் செய்து
கரவொலி எழுப்பினர். பிறகு அனைவரும் சேர்ந்து நாட்டுப்பண் பாடினார்கள். அந்தப் பாடலுக்கு உரிய கால அளவான 52 விநாடிகளில்
பாடி முடித்தனர். நம் ஊர் பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்பண் ஒலிக்கப்படும்போது
மாணவ மாணவியர் வாயால் பாடும் மரபு மறைந்து
வருகிறதே என வருத்தப்படுவதுண்டு. ஆனால்
இங்கே அனைவரும் சேர்ந்து பாடினார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
நாட்டுப்பண்ணைத் தொடர்ந்து இனிப்பு வழங்கினார்கள். என்ன இனிப்பு தெரியுமா? ஆரஞ்சு
மிட்டாய்கள்!
இந்தக் கொடியேற்று விழாவில் இவர்களுடைய பெருந்தன்மையைக் காட்டக் கூடிய ஓர்
ஒப்பற்ற நிகழ்வும் அரங்கேறியது. நம் பாரத மணித்திருநாட்டின் கொடியை ஏற்றுவதற்கு
முன் அருகில் நின்ற ஒரு கம்பத்தில் அமெரிக்க நாட்டுக் கொடியை ஏற்றி அதற்குரிய
ஆங்கிலப் பாடலைப் பாடி மரியாதை செய்தனர்.
அடுத்த நிகழ்வு என்ன? மதிய உணவுதான். மதிய உணவு எனப் போகிற போக்கில்
சொல்லிவிட முடியாது.
ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அதுவும் கூட்டாஞ்சோறு
முறையிலான விருந்து. Potluck lunch என
ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுண்டு. ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒருவகை உணவைத்
தயார்செய்து கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தின்படி வந்த உணவு வகைகளைச் சொன்னால்
வாசகர்கள் நாவிலிருந்து உமிழ்நீர் ஊற்றெடுக்கும். பாசுமதி அரிசிச் சாதம், அரைத்துவிட்ட
குழம்பு, மண்சட்டி ரசம், உருளைக்கிழங்கு வறுவல், முட்டைக்கோஸ் பொரியல், சௌ சௌ
கூட்டு, உளுந்துவடை, அப்பளம், பாசிப்பருப்புப் பாயாசம். அசைவ உணவாளர்க்கு மீன்
குழம்பும், மீன் வறுவலும் கூடுதல் இணைப்பாக! வேண்டியதைத் தட்டில் எடுத்துப்போட்டு
அளவளாவியபடி அளவாக உண்டேன். நிறைவாக மடித்த வெற்றிலைப் பாக்கையும் சுவைத்தேன்!
அப்புறம் என்ன? பை பை சொல்லிப் புறப்பட்டோம் என இந்தப் பதிவை முடித்துவிட
முடியாது.
இந்திய சுதந்திரதின விழா நிகழ்வுகள் தொடர்ந்தன. இல்லத்தின் முதன்மைக்
கூடத்தில் எல்லோரும் அமர்ந்ததும் குழந்தைகளின் குறள் சொல்லும் அசத்தல் நிகழ்ச்சி
அரங்கேறியது. இரண்டு வயது முதல் பதின்மூன்று வயது வரையிலான குழந்தைகள்
ஒவ்வொருவராய் வந்து குறளைத் தமிழில்
சொல்லி அதற்குரிய பொருளையும் சொன்னார்கள். சிலர் குறளைத் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில்
பொருளைச் சொன்னார்கள். எல்லாம் செவிநுகர்
கனிகள்! இதைத் தொடர்ந்து வளர்ந்த குழந்தைகள் வழங்கிய கருவி இசை பிரமிப்பு ஊட்டுவதாய் அமைந்தது.
தொடர்ந்தது
இரு பெண்மணிகள் தமிழில் நடத்திய Jackpot என்னும்
விளையாட்டு களை கட்டியது. ஆடவர் பக்கமிருந்து ஒருவரையும், மகளிர் பக்கமிருந்து
ஒருவரையும் எழுந்து வரச்சொல்லி ஒரு கேள்வி கேட்டனர். ஒரு கேள்விக்கு ஐந்து
பொருத்தமான விடைகள் உண்டு. அதில் மிகப்பொருத்தமான விடையைச் சொல்வோருக்கு மதிப்பெண்
உண்டு. எடுத்துக்காட்டாக, தொடர்ந்து நின்றபடி வேலை செய்வோர் யார் என்னும் கேள்விக்கு
ஆசிரியர், தேநீர் தயாரிப்பாளர், பேருந்து நடத்துநர், சமையல் செய்யும் பெண்,
போக்குவரத்துக் காவலர் எனப் பல விடைகளைக் கூறினாலும், போக்குவரத்துக் காவலர் எனச்
சொன்னவருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. நான், என் மனைவி உட்பட வந்திருந்த ஆடவர்
மகளிர் அனைவரும் பங்கேற்ற ஒரு புதுமை விளையாட்டாக அமைந்தது. இறுதியில் மகளிர்
படையே வெற்றி வாகை சூடியது. ஒரு மணி நேரம் ஒரு நொடியாய்க் கழிந்தது.
பின்னர் கரோக்கி முறையில் ‘மிலேசுர் மேரா துமாரா’ என்னும் பன்மொழி சேர்ந்திசைப்
பாடலை மிகச் சிறப்பாகப் பாடினர். தொடர்ந்து அதே முறையில் தமிழ்த் திரையிசைப்
பாடல்களைத் தேர்ந்த பின்னணிப் பாடகர் போல பாடி அசத்தினார்கள்.
நம் ஊரில் நம்வீட்டு வாசலில் நாம் அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கும்போது நம்மிடையே தென்றல் புகுந்து தவழ்ந்து செல்லுமே, அப்படி
சின்னக் குழந்தைகள் கூடத்தில் குறுக்கும் நெடுக்கும் தம் போக்கில் ஓடித் திரிந்தது
கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது.
இப்படியாக விழா இனிதே நிறைவு பெற்றது.
என் மூவண்ணக் கொடியேற்றும் கனவை நனவாக்கிய
நண்பர்களுக்கு நன்றி சொன்னேன். “இனி ஆண்டு
தோறும் இந்திய சுதந்திரதின விழாவைக் கொண்டாடி குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றை
ஊட்டுங்கள்” என்னும் வேண்டுகோளும் விடுத்தேன்.
நண்பர்களிடம் விடை பெற்று, மீதியிருந்த வடை
பெற்று இல்லம் திரும்பினோம்..
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
"இந்திய சுதந்திரதின விழா நிகழ்வுகள் தொடர்ந்தன. இல்லத்தின் முதன்மைக் கூடத்தில் எல்லோரும் அமர்ந்ததும் குழந்தைகளின் குறள் சொல்லும் அசத்தல் நிகழ்ச்சி அரங்கேறியது. இரண்டு வயது முதல் பதின்மூன்று வயது வரையிலான குழந்தைகள் ஒவ்வொருவராய் வந்து குறளைத் தமிழில் சொல்லி அதற்குரிய பொருளையும் சொன்னார்கள். சிலர் குறளைத் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில் பொருளைச் சொன்னார்கள். எல்லாம் செவிநுகர் கனிகள்! இதைத் தொடர்ந்து வளர்ந்த குழந்தைகள் வழங்கிய கருவி இசை பிரமிப்பு ஊட்டுவதாய் அமைந்தது"......
ReplyDeleteஅருமை.. இனிமை.. வாழ்த்துகள்
"திருக்கூட்டம்","உண்டாட்டு நிகழ்வு", "செவிநுகர் கனிகள்", நல்ல சொல்லாடல். 59 ஆம் அகவையிலும் தமிழ் கற்கும் வாய்ப்பைத் தந்த இனியன் அண்ணனுக்கும், கல் தோன்றி, மண் தோன்றி, மனிதன் தோன்றிய காலத்தே தானும் தோன்றிய காலத்திருந்தே தன்னைத் தகவமைத்துக் கொண்டு என்றும் இளமையாய் வாழும் எந்தமிழுக்கும் நன்றி!
ReplyDeleteஉங்கள் இனிமையான பொழுதுடன் நானும் இணைகிறேன். சுவை மிகுந்த வர்ணனை.
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteமிகச் சிறப்பு👌🇮🇳
ReplyDeleteமிகவும் அருமை.. நாங்கள் அங்கே இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
ReplyDeleteஅமெரிக்கா வில் வாழும் நம்மவர்கள் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவது மனதுக்கு மகிழ்ச்சி யாக உள்ளது
ஐயா! நாங்களும் உண்டாட்டு நிகழ்வு நடத்துவோம். ஆனால், இதுபோல் நம் தேசிய நாட்களைப் பற்றி நினைத்தது கூட இல்லை! 😑 மிகவும் அருமை 👌❕
ReplyDeleteGreat sir
ReplyDeleteநயம்பட தங்கள் பதிவு இருந்தது. நம் பாரம்பரியம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தான் காப்பாற்றி வருகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று என நினைக்கிறேன் நேரில் கலந்துகொண்ட ஒரு பூரிப்பு அருமை நன்றிகள்
ReplyDeleteசிறப்பு...
ReplyDeleteஅருமை ஐயா
ReplyDeleteமகிழ்ச்சி. உங்களின் ஏக்கம் குறைந்திருக்கும் என நினைக்கிறேன். அனைவரும் சேர்ந்து பாடினார்கள்....மிகவும் அருமை.
ReplyDelete