Thursday 14 October 2021

பாரதியும் ஹைக்கூ கவிதையும்

 ஹைக்கூ  கவிதையை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியே.

அவர் அக்டோபர் 18, 1916 சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இது:

    சமீபத்திலே மார்டன் ரிவ்யூ என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உஜோ நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வது என்னவென்றால்,இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக்கவிதை சிறந்தது. காரணமென்ன? 

   மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கை இல்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவின்மையாலும், பல சொற்களைச் சேர்த்து, வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகிற வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது.    ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. 

     கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன், எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு, இவற்றிலே ஈடுபட்டுப்போய் , இயற்கையுடன் ஒன்றாகி வாழ்பவனே கவி. 

   ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ஹொக்கு என்ற பாட்டு ஒரு தனிக் காவியமாக நிற்கும்., அநாவசியமான கருத்து விளக்கம் என்ற இரண்டுமில்லாமல், முத்துப் போல பதங்கள் கோர்க்கும் நல்ல தொழிலாகிய அக் கவிராணி, இங்லீஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார். 

சிறிய பாட்டுப் போதும். சொற்கள், சொற்கள் சொற்கள், வெறும் சொற்களை வளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்? 

ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் பூஸோன் யோஸாஹோ என்ற ஜப்பானியக் கவிராயர் ஒரு ஹொக்கு ( பதினேழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழி பெயர்ப்பு: 

பருவ மழையின் 

புழையொலி கேட்பீர் இங்கென் 

கிழச் செவிகளே. 

இந்த வசனம் ஒரு தனிக்காவியம். பாட்டே இவ்வளவுதான். 

    படிப்பவனுடைய அனுபவத்திற்கேற்ப அதிலிருந்து நூறுவகையான மறைபொருள் தோன்றும்.

  பலபலப் பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதையன்று. கேட்பவனுள்ளத்திலே கவிதை உணர்வை எழுப்பிவிடுவது சிறந்த கவிதை. 

    மற்றுமொரு நேர்த்தியான ஹொக்குப் பாட்டு, வாஷோ மத்ஸுவோ என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார்.அவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம். ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடித்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்று ரியே, அதாவது ஏறக்குறைய முப்பது வராகன், காணிக்கையாகக் கொடுத்தான்.இவர் ஒரு நாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தம்க்குத் தொல்லையாதலால், வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம். 

இவருக்குக் காகா என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணவர் இருந்தார். இந்த ஹொகுஷியின் வீடு தீப்பட்டு எரிந்து போய்விட்டது. அந்தச் செய்தியை ஹொகுஷிப் புலவர், தமது குருவாகிய வாஷோ மத்ஸுவோக்குப் பின்வரும் பாட்டில் எழுதியனுப்பினார்: 

தீப்பட்டெரிந்தது; 

வீழும் மலரின் 

அமைதி என்னே!

 

   மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் போது எத்தனை அமைதியோடியிருக்கிறதோ அத்தனை அமைதியோடு வரும் துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது. ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதி இழந்து போகவில்லை என விஷயத்தை ஹோகூஷி இந்தப்பாட்டின் வழியாகத் தெரிவித்தார். 

   "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயர் கவிதை இதற்கு நேர்மாறாக இருக்கிறதென்றும் சொல்கிறார்.

   நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'. கிழக்குத் திசையின் கவிதையில் இவ்விதமான ரசம் அதிகந்தான். தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும் கவிதை ஒரேடியாகச் சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் ஹொக்குப் பாட்டன்று.

------------------------------------ 

பி.கு: இந்தக் கட்டுரை இணையத்தில் நிறைய பிழைகளுடன் காணப்பட்டது. பதிவிட்டவர் பெயரும் இல்லை. நான் சற்றே ஒழுங்குபடுத்திப் பதிவிடுகிறேன்.

எல்லாப் புகழும் பாரதிக்கே.

5 comments:

 1. புதியவை பல தெரிந்து கொண்டோம்.

  அருமையான பதிவு. பாரதியின் இக்கட்டுரையை இதுவரை வாசித்ததில்லை.

  கீதா

  ReplyDelete
 2. ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் பூஸோன் யோஸாஹோ என்ற ஜப்பானியக் கவிராயர் ஒரு ஹொக்கு ( பதினேழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழி பெயர்ப்பு: //

  பருவ மழையின்

  புழையொலி கேட்பீர் இங்கென்

  கிழச் செவிகளே. //

  ரசித்தேன் ஐயா. பாரதியும் எழுதியிருக்கிறாரோ ஹைக்கு?

  ஹொக்குதான் ஹைக்குவானதோ?

  துளசிதரன்

  ReplyDelete
 3. மற்றுமொரு நேர்த்தியான ஹொக்குப் பாட்டு, வாஷோ மத்ஸுவோ என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார்.அவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம். ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடித்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்று ரியே, அதாவது ஏறக்குறைய முப்பது வராகன், காணிக்கையாகக் கொடுத்தான்.இவர் ஒரு நாளுமில்லாதபடி புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தம்க்குத் தொல்லையாதலால், வேண்டியதில்லை என்று திரும்பக் கொடுத்து விட்டாராம். //

  அட இப்படியும் கவிஞர்! அக்காலத்தில் நம்மூரிலும் புலவர்கள் (பாரதி உட்பட) வறுமையில் வாழ்ந்ததாக அறிவதுண்டு புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடியதே பரிசில் கிடைக்கத்தான் இல்லை என்றால் எப்படிக் குடும்பத்தை ஓட்டுவது? என்றாலும் இந்தக் கவிஞர் அதை விரதமாகவே பூண்டிருந்தது வியப்புதான். பாரதி கூட சுய கௌரவத்தை இழந்ததில்லை. பிறரைப் புகழ்ந்து பாடி பொருள் ஈட்டியவர் அல்லவே.

  கீதா

  ReplyDelete