Friday 29 October 2021

குறிஞ்சி நிலத்தில் குறு நடையாக….

      நீண்ட காலம் எந்தப் போரும் நடக்காமல், களத்தில் இறங்கிப் போர் புரிய வாய்ப்பில்லாமல், வீட்டில் முடங்கிக் கிடக்கும் பண்டைக் காலத்துத் தமிழ் மறவர்களின் தோள்கள் தினவெடுக்குவாம். எனக்கும் அதே நிலைதான்.

   மகுடத்தொற்று மகுடம் சூடி ஆட்சி செய்த நிலையில், ஆண்டுக் கணக்கில் காடு மலைகளில் சுற்றித்திரிய எனக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. கால்கள் தினவெடுக்கத் தொடங்கிவிட்டன. இதை எப்படியோ அறிந்து கொண்ட என் மாப்பிள்ளை ஒரு மலையழகைக் காண என்னை அழைத்துச் சென்றார்.

    இந்த அக்டோபர் திங்களில் கனடா நாட்டில் உள்ள பெரும்பாலான மரங்களின் இலைகளும் தழைகளும் பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும். காடு மலையெலாம் வண்ணக் கோலம் தாங்கி நிற்கும் அழகைக் காண ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும் அணி அணியாகச் செல்வர்.

       வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு அக்டோபர் திங்களின் முதல் வாரத்திலேயே கடுங்குளிர் தாக்கத் தொடங்கியதால் வெளியே செல்ல இயலவில்லை. சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை மட்டும் சற்றே குளிரின் தாக்கம் குறையவே, உடனே காலுறை, கையுறை, மெய்யுறை என அனைத்தையும் அணிந்துகொண்டு புறப்பட்டோம்.

     நாங்கள் சென்றது கலபோகி என்னும் இடத்திலுள்ள காடும் மலையும். குறிப்பாகச் சொல்வதென்றால் கழுகுக் கூடு என்னும் மலை முகடு. ஒட்டாவா நகரிலிருந்து ஒன்றரை மணிநேர மகிழ்வுந்துப் பயணம்; மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம்!

    அது அடர் வனமும் அன்று; இடர் வனமும் அன்று; கதிரவனின் சுடர் படர் வனம் ஆகும். அதனால்தான் வாயில் இரை கவ்வியவாறு ஓடிய ஒரு நரியின் பின்னால் நானும் ஓடிக் காணொளிப் படமாக எடுக்க முடிந்தது!

    மலை முகட்டுக்குச் செல்லும் பாதையைப் படிக்கட்டுகள் கொண்டு அமைக்காமல் மலை ஏறுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில் சுற்றி வளைந்துச் செல்லும்படியாய் அமைத்திருந்தனர். முற்றிலும் மண்பாதையாக இருந்தது. பாதையின் நடுவே சேறு சகதி என இயற்கை மாறாமல் இருந்தது தனிச் சிறப்பாகும்.   இந்தப் பாதையில் முதியவர்களும் நடந்தனர். மூன்று வயதுக்கும் குறைவான குழந்தைகளும் நடந்தன. துவளும் குழந்தைகளைத் தோள்கள் மீது தூக்கிவைத்து நடந்தனர் தந்தையர். இப்படிக் குழந்தைகளைக் காடு மலைகள் பக்கம் அழைத்து வருவது இந் நாட்டினர்க்குள்ள தனிப் பண்பாகும். நாமும் இதைக் கடைப்பிடிக்கலாம்.

   நான்கு கிலோமீட்டர் நடந்த களைப்பு அறவே இல்லை. மலை முகட்டில் ஏறி நின்று கீழே பார்த்தால் அத்தனை அழகு! மனிதர் அணுக முடியாத நீர் நிலைகள்! அடர் வனங்கள்! சுவர்க்கம் இப்படித்தான் இருக்குமோ என என் மனம் எண்ணியது.

    போகும் போதும் திரும்பும் போதும் படங்களை எடுத்துத் தள்ளினேன். இல்லம் திரும்பியதும் அவற்றைத் தொகுத்தும் பகுத்தும் தொலைக்காட்சிப் பெட்டியின் அகன்ற திரையில் பார்த்தபோது, இயற்கை அன்னையின் களி நடனம் எத்தகு உயிர்ப்பும் உணர்வும் உடையது என்பதை உள்ளத்தால் உணர்ந்து மகிழ்ந்தேன்.

முனைவர் .கோவிந்தராஜூ,

கனடாவிலிருந்து.

9 comments:

 1. Sir, the place is very beautiful. I have studied that, Canada was a land of lakes. But, your travelogue and the pictures in it are portraying the scenic beauty of the country which is so beautiful beyond its lakes...

  ReplyDelete
 2. Wow very beautiful place and time well spent

  ReplyDelete
 3. அருமை ❗👌

  உங்கள் சிறப்புப் பார்வையும் எழுத்தும் எங்களை சொர்க்கத்தை பார்க்கவும் அனுபவிக்கவும் வைக்கிறது 👌🤝❗

  ReplyDelete
 4. கவித்துவமான பதிவு. கலை ரசனையான புகைப்படங்கள். மகிழ்ச்சி ஐயா.

  ReplyDelete
 5. படங்கள் அனைத்தும் அழகு...

  ReplyDelete
 6. படங்கள் அழகு ஐயா
  மறக்க முடியாத பயணமாக, இப்பயணம் தங்கள் மனதில் நிலைக்கும

  ReplyDelete
 7. படங்கள் அத்தனையும் அழகு ஐயா. நல்ல பயணம்

  துளசிதரன்

  ReplyDelete
 8. மிகவும் ரசித்து எடுத்திருக்கிறீர்கள் ஐயா படங்கள் எல்லாமுமே. அதுவும் அந்தச் சின்னக் குழந்தை இருக்கும் வண்ணமயமான இலைகள் சூழ் மரங்கள் சூழ் அந்தப் பாதை புகைப்படம், ஏரி/நதி புகைப்படம், மேப்பிள் இலைகள் தானே அவை? அந்த வண்ணப் படமும் அட்டகாசமாக இருக்கின்றன.

  மனதிற்கு இதமான தியான நிலை எட்டும் பயணம்! இயற்கையுடன் என்றாலே தியானம் தான்..

  அங்கு முதியவர்கள் முடியவில்லை வயதாகிவிட்டது என்று நினைக்காமல் சொல்லாமல் இப்படியான பயணங்களிய மேற்கொள்வர் அது போல குழந்தைகளையும் அவர்களுக்கு முடியாது என்று சொல்லாமல் அழைத்துச் செல்வர். நீங்கள் சொல்லியிருப்பது போல் இது நல்ல விஷயம் இதை நாம் கண்டிப்பாகக்கற்க வேண்டும்.

  அருமை. மகுடத் தொற்று என்றும் சொல்லப்படுகிறதா இந்தத் தொற்று?

  படங்களை மிகவும் ரசித்தேன் ஐயா

  கீதா

  ReplyDelete
 9. அருமை ஐய்யா

  ReplyDelete