Saturday, 2 October 2021

அம்மா வந்தாள்

       தி.ஜானகிராமன் எழுதியுள்ள 'அம்மா வந்தாள்' நாவலை, அம்மா தனக்குத் தந்த சிறு மைசூர்பா துணுக்கை  ஒரே மூச்சில் தின்னாமல் மெல்ல நக்கிச் சுவைத்துத் தின்ற குழந்தையைப்போல் மெதுவாக எழுத்தெண்ணிப் படித்து முடித்தேன்.

    சத்திய சோதனை, அம்மா வந்தாள் ஆகிய இரு நூல்களைப் படித்து முடித்ததும், ஒரு கருத்து என் மனத்தில் மின்னலைப்போல் வெட்டிப் பளிச்சிட்டது. மகாத்மா காந்தியும், தி.ஜானகிராமனும் உண்மையைத் தேடுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதே அது.

    பொய்களுக்குக் கண்ணும் காதும் வைத்து, மூக்கும் முழியும் சேர்த்துக் கதை கட்டும் எழுத்தாளர் பலரின் படைப்புகள் பரண்மீது கிடக்க, பிறந்து நூறாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களது எழுத்து இலக்கிய உலகில் வாசிக்கப்படும், சுவாசிக்கப்படும் பொருளாகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் உண்மையைத் தேடும் பெருவிருப்பு உடையவர்களாய் இருந்தமைதான்.

    இனி ‘அம்மா வந்தாள்’ நாவலுக்குள் நுழைவோம்.

“ஒரு நாவலின் தொடக்க வரிகளே வாசகனைப் படிக்கத் தூண்டுகின்றன” எனச் சொல்வார் எழுத்தாளர் அகில் சாம்பசிவம். அந்த வகையில் இந்த நாவல்  ஓர் அழகான வினை உவமையுடன் பின்வருமாறு தொடங்குகிறது.

“சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக்கூடாதுஎன்பார்கள். ஆனால் அன்று ஒருநாளும் இல்லாத திருநாளாக புத்தகத்தின் மேல் வருகிற ஆசை! கீழே கிடக்கிற –பல்பொடி மடிக்கிற – காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்! அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்தக் காவேரி மீது!” 

   தி.ஜானகிராமனின் மற்ற நாவல்கள்  பல்வேறு இதழ்களில் தொடராக வெளிவந்தபோது பல விமரிசனங்கள் எழுந்தன.  அவற்றுக்கெல்லாம் அவ்வப்போது என்ன விடையளித்தார் என்பதை யான் அறியேன். ஆனால் தொடராக வெளிவராத ‘அம்மா வந்தாள்’ நூலின் முன்னுரையில் தி,ஜானகிராமன் தன்னைப்பற்றிய விமரிசனங்களுக்கு எதிர்வினையாக ஒரு கருத்தைக் கூறுவதாய் நான் பார்க்கிறேன்.

  முன்னுரை என்று போடாமல், “இந்நூலைப் பற்றி...” என்னும் தலைப்பின் கீழ், சில கருத்துகளை முன்வைக்கிறார் தி.ஜானகிராமன்.

   “அம்மா வந்தாளில் நான் இரகசியங்கள் ஏதும் சொல்லவில்லை. நூல்தான் முக்கியம். எப்படி எழுதப்பட்டது ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதைத் தூற்றிவிட்டார்கள்.” என்று தன் வருத்தத்தை முதலில் பதிவு செய்கிறார்.

   கதைகளை இருவகையில் எழுதலாம். முற்றிலும் கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து எழுதலாம். அல்லது நாவலாசிரியர் தான் காணநேர்ந்த சிலரைப் பாத்திரங்களாகப் படைத்தும் எழுதலாம். முதல் வகை என்பது வாசகன் மனத்தில் தான் திணிக்க விரும்பும் கருத்துக்குத் தோதாகப் பாத்திரங்களை உருவாக்கி எழுதப்படுவது. இரண்டாவது வகை என்பது சமூகத்தில் இலைமறை காயாக அல்லது வெளிப்படையாகக் காணப்படும் ஒரு விடயத்தை நக்கீரத் துணிச்சலுடன் எழுத்தில் வெளிப்படையாகச் சுட்டிக் காட்டியும், குட்டிக் காட்டியும் படைப்பது.

   இரண்டாவது வகையிலே இந்த அம்மா வந்தாள் நாவலை அடக்கலாம் எனக் கருதுகிறேன். எனது கருத்துக்கு  நூலின் முன்னுரையில் காணப்படும் நாவலாசிரியரின் கூற்றே அரணாக அமைகிறது.

 “அம்மா வந்தாள் நான் கண்ட, கேட்ட  சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள்  இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி.” 

   இயல்பாக நீர் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலின் குறுக்கே ஒரு பெரிய மரம் விழுந்து தடுக்க, கரை உடைந்து நீரின் போக்கு மாறுவதைப் போல ஒரு குடும்பத்தலைவி அதுவும் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவள் நெறி தவறுவதைக் கதைக் கருவாய்க் கொண்ட நாவல்தான் அம்மா வந்தாள். சகுனம் சொல்லும் பல்லியே கழனிப் பானையில் விழுவதைப் போல வேதம் சொல்லும் குடும்பத்திலேயே ஒழுக்கச் சிதைவா என்று நெற்றிப் புருவத்தைச் சுருங்க வைக்கும் கதையாக விரிகிறது.

   நாவலாசிரியரின் உள்மனப் பதிவு என்பது .நாவலில் கட்டாயம் இருக்கும். அது கதை சொல்லியின் கூற்றாகவோ ஏதாவது ஒரு பாத்திரத்தின் வாயிலாகவோ வெளிப்படும். கதையில் வரும் கல்லூரி ஆசிரியர் கோபு சொல்வது நாவலாசிரியரின் மனக்குரலாகவே எனக்குப் படுகிறது.

“எந்த பிராமணன் சந்தி பண்றான் இப்ப. அவன் போடுற பூணூலுக்கு அர்த்தம் ஏது? டவாலி போட்டுக்கிறனாவது அர்த்தத்தோட போட்டுக்கிறான்

தான் பியூன்னு காமிச்சுகிதுக்கு. ஆனால் நமக்கு வேதம் கிடையாது,

சாஸ்திரம் கிடையாது. பூணூலையே அறுத்தெறியணும்.” 

    பாரதிக்கு அடுத்தப்படியாக இவ்வளவு துணிவோடு தான் சார்ந்த சாதியை உரத்தக் குரலில் விமரிசனம் செய்தவர் தி.ஜானகிராமன் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இதனால் தன் சமூகத்தாரால் சிலகாலம் தள்ளி வைக்கப்பட்டார் என்ற செய்தியும் காதில் விழுகிறது.

    கட்டுக்கோப்பாகக் குடும்பத்தைத் தொடங்கி அன்பு மயமாய் இல்லறம் நடத்தி மூன்று குழந்தைகளைப் பெற்ற தண்டபாணி அலங்காரத்தம்மாள் இணையர் இடையே சிவசு என்ற சிவசுந்தரம் புகுந்த பிறகு,  மேலும் மூன்று குழந்தைகள் அவன் புண்ணியத்தில் பிறந்த பிறகு, காலப்போக்கில் அவன் தவிர்க்க முடியாதவன் என்று ஆனபிறகு, புலியின் வாலைப் பிடித்த கதையாய் அவள் சிவசுந்தரத்தை விடவும் முடியாமல், தொடர்ந்து பிடிக்கவும் முடியாமல் சொல்லாமல் கொள்ளாமல் காசிக்குப்போய் அங்கேயே இருந்து செத்துப்போக எண்ணுவது வரை, கனத்த இதயத்துடன் கதையை நகர்த்தும் நாவலாசிரியருடன் நாமும் அதே அலைவரிசையில் பயணிக்கின்றோம்.

   தடம் மாறிய ஆசை மனைவியைத் தொடவும் முடியாமல், விடவும் முடியாமல் மனம் புழுங்கும் கணவன், அம்மாவின் நெறிபிறழ் நடத்தையை அறிந்தும் மனம் வெதும்பிச் சகித்துக்கொள்ளும், சலித்துக்கொள்ளும் மகன்கள் மகள்கள் – இவர்களின் உளவியல் சிக்கல்களை உள்ளது உள்ளவாறு அப்படியே படம்பிடித்துக் காட்டும் தி.ஜானகிராமன் எந்தப் பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்தார் என எண்ணத் தோன்றுகிறது.

    ஒரு குடும்பத்தின் சிதைவுக்குப் பல காரணிகள் இருப்பினும், குடும்பத் தலைவன் அல்லது தலைவியின் திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவு என்பது முதன்மையானக் காரணியாக இருப்பதை இன்றளவும் ஊடகங்கள் வாயிலாய் வரும் செய்திகளால் அறிகிறோம்.

   குடும்பத்தின் ஆணிவேர் என்பது பாலியல் ஒழுங்காகும். கணவன் பீடுநடை போட வேண்டும் என்றால் மனைவி நெறி பிறழாதவளாய் இருக்க வேண்டும் என்பார் திருவள்ளுவர். பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தும் நாவலாகப் பலரும் பார்க்கும் சமயத்தில், நான் அதற்கு நேர் எதிராக, பாலியல் ஒழுங்கை வலியுறுத்தும் நோக்கில் சொல்லப்பட்ட கதையாகத்தான் அம்மா வந்தாள் நாவலைப் பார்க்கிறேன். ஒரே கருத்தை நேர்மறையாகவும் சொல்லலாம்; எதிர்மறையாகவும் சொல்லலாம். இது எதிர்மறையாகச் சொல்லப்பட்டது; அவ்வளவே.

   சில விமரிசகர்கள் “ஒழுக்கவியலுக்கு எதிராக அம்மா வந்தாள் நாவலை எழுதிவிட்டார் தி.ஜானகிராமன்; அதை ஒரு நல்ல நாவல் எனக் கூறமுடியாது” என்று கூறி அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

“விமரிசகர்களைப்பற்றி நான் எப்போதுமே கவலைப்படுவதில்லை.

இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக்கொண்டு படைப்பாளியின்

விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படும் பேதை விமரிசகர்கள்” 

 என்னும் தி.ஜானகிராமனின் கூற்றை ஈண்டு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  நல்ல இலக்கியத்தின் வரைவிலக்கணம் எது என்பதை தி.ஜானகிராமன் தெளிவாகக் கூறுகிறார்:

‘நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம்.

மனித முகங்கள் வேறுபடுவதைப் போலத்தான் நல்ல இலக்கிய முயற்சிகள் வேறுபடுகின்றன; வேறுபட வேண்டும். தான் உண்மை என்று தேடிய வழியையும் கண்டதையும், சமூகத்திற்கோ, கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கோ பயப்படாமல் ஒருவர் சொல்லும்போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும். தன்னுடைய முயற்சியில் நம்பிக்கையும் (பிறர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி) எழுத்துக்கு அடிப்படையாக இருக்கும்பொழுது அது கட்டாயம் நல்ல இலக்கியமாகத்தான் இருக்கும்.” 

அம்மா வந்தாள் நாவலை இரு பகுதியாய்ப் பிரிக்கலாம். தண்டபாணி குடும்பத்தில் புகுந்த சிவசுவால் ஏற்பட்ட குடும்பச் சிக்கல்கள். சிவசுவை 'ஒரு காலைச் சுற்றிய பாம்பு' என்று நாவலின் இறுதியில் அலங்காரத்தம்மாளே சொல்லும் அளவுக்குப் பெருஞ்சிக்கல். இதுதான் கதைக்கரு. இதுதான் நாவலின் மையக்கருத்து எனக் கருதிய மொழிபெயர்ப்பாளர் அம்மா வந்தாள் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு The Sins of Appu’s Mother என்னும் பெயரைச் சூட்டினார் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்த செய்தியாகும்.

 அடுத்தப் பகுதியாய் இருப்பது அப்பு மீது ஏற்பட்ட இந்துவின் காதலும் அது குறித்து அப்புவிடம் ஏற்பட்ட மனப்போராட்டமும். குழந்தைப் பருவம் முதல் இந்துவும் அப்புவும் ஒரு கூரையின் கீழ் வளர்ந்தவர்கள். இந்து வேதபாடசாலையை நிருவகிக்கும் பவானியம்மாளின் தம்பி மகள். இந்துவுக்குப் பதினைந்தாம் வயதில் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் கணவன் எலும்புருக்கி நோயால் இறந்துவிட மீண்டும் வேதபாடசாலைக்கு வந்து தன் அத்தையுடன் பாடசாலைப் பணிகளைக் கவனிக்கிறாள். அதே பாடசாலையில் வேதம் பயிலச் சென்றவன் அப்பு; தண்டபாணி அலங்காரத்தம்மாள் இணையரின் மூன்றாவது குழந்தை. பதினாறு ஆண்டுகள் வேத பாடம் முடிந்து  ஆறடி உயரமுள்ள அழகிய இளைஞனாக அப்பு ஊர் திரும்ப இருந்த நிலையில் இந்து அவன் மீதிருந்த தன் காதலைச் சொல்லுகிறாள்; சொல்லியதுடன் நிற்காமல் அவனைக் கட்டி அணைத்து அதைக் கண நேரத்தில் உறுதிபடுத்துகிறாள். அதைக் கேட்டு, கண்டு அதிர்ச்சி அடைகிறான் அப்பு. அவளோ ஓர் இளம் விதவை. இவனோ வேதம் படித்த இளைஞன். நாவலாசிரியர் தொடர்ந்து இவர்களுடைய கதையை எப்படி நகர்த்துகிறார் என்பதை வாசகர்கள் நாவலைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டாவது பகுதியில் பேசப்படும் இந்துவின் காதல், விமரிசகர்களால் ஒழுக்கம் மீறிய செயல் எனப் பெரிதும் எடுத்துக்கூறப்பட்டது; இடித்தும் கூறப்பட்டது.

   விதவைத் திருமணத்தை ஆதரித்து எழுதுவது எப்படி ஒழுக்கம் மீறிய செயலாகும் என்பது புரியாத புதிராகவே உள்ளது.    இளம் விதவைகளின் உணர்வுகளைச் சொல்லவந்த பாரதிதாசன் அவர்களை வேரில் பழுத்தப் பலாப்பழங்கள் என உருவகப்படுத்துவதோடு அவை கோரிக்கையற்றுக் கிடக்கின்றனவே என மனம் குமுறுவார். இந்தச் சிந்தனை தி.ஜானகிராமனுக்கும் இருந்திருக்க வேண்டும் என்பதை அம்மா வந்தாள் நாவல் வழியே உணரமுடிகிறது.

    நிறைவாகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், அறிவார்ந்த மக்கள் செய்யக் கூடாத ஒன்றையும் செய்ய வேண்டிய ஒன்றையும் சுட்டிக்காட்டும் முகத்தான் இந்த நாவலைப் படைத்துள்ளார் தி.ஜானகிராமன் என்பதே எனது பார்வையாகும்.

------------------------------

பின்குறிப்பு: இக் கட்டுரையை எழுதியவர் முனைவர் அ.கோவிந்தராஜூ அவர்கள். தி.ஜானகிராமன் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி, கனடா நாட்டில் டொரண்டோ நகரில் 26.9.21 அன்று எழுத்தாளர் திரு.அகில் சாம்பசிவம் அவர்கள்  தொகுத்து வெளியிட்ட 'இலக்கிய வெளி'  சிறப்பிதழில் இக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

                     $$$$$$$$          

 

6 comments:

  1. அருமை ஐயா
    அவசியம் படிப்பேன்

    ReplyDelete
  2. சிறப்பான பார்வை.

    நான் எழுதிய நாவலுக்கு அணிந்துரை எழுதிய திரு இராய செல்லப்பா அவர்கள் தி ஜானகிராமன் அவர்களையும் பாலகுமாரன் அவர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

    துளசிதரன்

    ReplyDelete
  3. அருமையான விமர்சநம் ஐய்யா.

    ReplyDelete
  4. நான் ரசித்த நூல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் மதிப்பீடு செய்த விதம் அருமை.

    ReplyDelete