மனிதருக்கே உரிய பண்புகளில் முதன்மையானது உற்றுழி உதவுதல். அதனினும் சிறந்த பண்பு ஒன்று உண்டென்றால் அது பெற்ற உதவியை நன்றியுடன் நினைத்துப் பார்த்தல் ஆகும். ஒருவர் செய்த உதவி தினையளவே என்றாலும் அதைப் பனையளவாய்க் கொண்டு நன்றி பாராட்டுதல் தலைசிறந்த பண்பாகும். இந்தப் பண்பின் வெளிப்பாடாக ஒரு நாளை ஒதுக்கி உற்சாகமாகக் கொண்டாடுவதைக் கனடா நாட்டில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இன்று காலை நடைப்பயிற்சியின் போது நான் கண்ட காட்சிகளே அதற்குச் சான்று.
கனடா நாட்டில் அறுவடைக் காலம் முடிந்து விட்டது. கோதுமை, சோளம், கனோலா எனும்
எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை அள்ளித் தந்த நில புலங்களெல்லாம் ஓய்வெடுக்கும் காலம்
தொடங்கிவிட்டது. அடுத்த ஆறு மாதங்கள் குளிரும் மழையும் கடும் பனியும் சலங்கை கட்டி
விளையாடும்.
இயற்கை தந்த விளைபொருள்கள் வீடு வந்து சேர்ந்ததும் நாம் தை முதல் நாளில் பொங்கல்
வைத்துக் கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் போல, இவர்கள் அறுவடை நிறைவடைந்ததைக் கொண்டாடும்
வகையில் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கள் கிழமையை Thanks
Giving Day எனக்
குறிப்பிட்டு, நன்றி செலுத்தும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
கனடாவில் இன்று தேசிய விடுமுறையாகும்.
இந்த விழாவுக்காக கனடா நாட்டு மக்கள் தம் வீடுகளைத் தூய்மை செய்து அழகுபடுத்தி,
வீட்டு வாயிலில் பரங்கிக் காய்களை அழகுற வைக்கின்றனர். பரங்கிக்காய்கள் இந்நாட்டில்
பல வண்ணங்களில் விளைகின்றன. அதேபோல் ஒரு எலுமிச்சம் பழ அளவிலிருந்து பெரிய உருளி அளவு
வரை பரங்கிக் காய்களைப் பார்க்க முடிகிறது.
என் இரு கைகளாலும் அணைக்க முடியாத அளவில் மிகப்பெரிய பரங்கிக்காய் |
சோளக் கொல்லைப் பொம்மைகளை இன்றும் நமது கிராமங்களில் பார்க்க முடியும். இங்கே அத்தகைய பொம்மைகளை வாங்கி வந்து தம் வீட்டு முற்றத்தில் அழகுற அமைத்துள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இரை தேடும் கனடா வாத்துகள் |
நம்மூரில் தீபாவளி சமயத்தில் தள்ளுபடி விற்பனை நடைபெறுவது
போல் இங்கும் இந்த நாளை முன்னிட்டுத் தள்ளுபடி விற்பனை தலைவிரித்து ஆடுகிறது. ஆனால்
நம்மூரில் காணப்படும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் பதாகைகள் இங்கே காணப்படவில்லை; ஒலிபெருக்கிக்
கூச்சல்களும் இல்லை.
ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்தில் உறவைத் துண்டித்தவர் கூட அதற்காக மனம் வருந்தி,
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த உறவுகளை
அன்புடன் அழைத்து நன்றி பாராட்டி உறவைப் புதுப்பித்துக் கொள்வதும், பரிசுப் பொருள்களை
ஈந்து மகிழ்வதும் இந்நாளில் உண்டு என ஒரு கனடா நண்பர் கூறினார்.
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
சுற்றத்தால்
சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றதால் பெற்ற பயன்
என்னும் குறட்பாக்களை இவர்கள் எங்கிருந்து
கற்றனர்?
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
அறுவடைத்திருநாள் மிகவும் அருமை ஐயா
ReplyDeleteஆகா...! அருமை ஐயா...
ReplyDeleteஇறுதியில் கேட்ட கேள்வி அருமை ஐயா.
ReplyDeleteதமிழ்நாட்டில் குறள் ஏட்டில்.. கனடா நாட்டில் உணர்வில் செயலில்
ReplyDeleteபுதிய செய்தி அறிந்துகொண்டேன்
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா.
ReplyDeleteஅருமையான பதிவு. இப்போதுதான் இதைப் பற்றி அறிகிறேன் ஐயா. உணர்வு மிக்க விழா என்று தெரிகிறது
ReplyDeleteதுளசிதரன்
நன்றித் திருவிழா கிட்டத்தட்ட நமது பொங்கல் திருவிழா போலவே தான். ஆமாம் அங்கு இந்தப் பருவகாலத்தில் பூஷணி-பரங்கிகாய் நிறைய விளையும். நன்றி சொல்லும் விழா..
ReplyDeleteநல்லதொரு விழா இது. அமெரிக்காவிலும் உண்டு.
இப்போது விளையும் பூஷணி வைத்து பம்ப்கின் பட்டர் (எளிதான செய்முறை) ஜாம் என்று பல பதார்த்தங்கள் செய்து சேமித்தும் வைப்பார்கள் உண்டும் மகிழ்வார்கள்.
கடையில் உங்கள் கேள்வி அருமை...
கீதா
அறிந்திராத செய்தி அறிந்தேன். நல்ல விழா.
ReplyDelete