Wednesday, 17 November 2021

பெற்றோரைப் பேணல் பிள்ளையின் கடன்

 

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்   892

பெரியார்என்னும் சொல்லுக்குப் பொருள்கள் பலவாகும். இதற்கு இணையான வழக்குச் சொல் பெரியவர் என்பதாகும். பெரியவர் எனின் ஆற்றலில் பெரியவர், கல்வியில் பெரியவர், செல்வத்தில் பெரியவர், செல்வாக்கில் பெரியவர், பதவியில் பெரியவர், புகழில் பெரியவர், வயதில் பெரியவர் எனப் பற்பல பொருள்கள் நம் நினைவில் தோன்றும். 

  

   இந்தக் குறளுக்கு வள்ளுவர் சொல்லும் உட்பொருள் என்ன என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. உரை கண்டோர் தந்த பொருள் பல்விதமாய் உள்ளன.

பெரிய ஆற்றலுடையாரை மதியாது நடந்தால் தவிர்க்க முடியாத துன்பம் வரும்” – பேராசிரியர் வ.சுப.மாணிக்கம்.

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.” – மு..

ஆற்றல் மிக்க பெரியவர்களை மதிக்காமல் நடந்து கொள்வோர்க்கு அப் பெரியாரால் வரும் துன்பம் அப் பெரியாராலேயே நீக்க முடியாததாய் இருக்கும்.” – புலவர் நன்னன்

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.” –கலைஞர் மு..

பெரியாரை மதிக்காமல் நடக்கும் ஒருவனுக்கு, அப் பெரியாரால் நீக்க முடியாத அளவு துன்பம் வரும்” – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப் பெரியவர்களால் தீராத துன்பம் வரும்” – பேராசிரியர் சாலமன் பாப்பையா

ஆற்றல்களால் பெரியாயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், அவ்வொழுக்கம் அப் பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்” – பரிமேலழகர்.

முனிவரைப் போற்றாது ஒழுகுவானாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும்” – மணக்குடவர்

பெரியாரைப் போற்றாது ஒழுகுவானாயின், அவன் ஒழுக்கம் அவரானே எல்லாரானும் இகழப்படும் துன்பத்தைத் தரும். – பரிப்பெருமாள்

பெரியாரை அலட்சியப்படுத்துவான் ஆகின், அந்தப் பெரியாரால் போக்குதற்கு அரிய இடும்பை தரும்.” – பரிதி

பெரியோரை நெஞ்சினால் விரும்பாது ஒழுகின், அப் பெரியார் தம்மாலும் பேணிக் கோடற்கு அரிதாகிய பேரிடும்பையைத் தரும்.” – காலிங்கர்

 இந்தக் குறட்பாவில் வரும் பெரியார் என்னும் சொல்லுக்கு வயதில் பெரியவர் என்னும் பொருளை மட்டும் கருத்தில் கொண்டு இக் குறளை எப்படி அணுகலாம் என்பதே என் ஆய்வாகும்.

  திருக்குறளை இரண்டு முறைகளில் படிக்கலாம். ஒன்று, திருக்குறள் புலமையை வளர்த்துக்கொண்டு மேடையேறிப் பேசி, நூல்களாக எழுதிப் புகழ் பெறுவதற்கு. இரண்டு, நடைமுறையில் பயன்படுத்தத் தக்க குறட்பாக்களை இனங்கண்டு வாழ்வில் செயல்படுத்துவதற்கு.

    இக் குறள் இரண்டாவதாய்ச் சொல்லப்பட்ட வகையில் அடங்கும். அதாவது செயல்பாட்டுக்குரிய குறள் என்பதை முதலில் நினைவில் நிறுத்த வேண்டும்.

   நம் வீட்டிலுள்ள வயதான பெரியவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான வழி காட்டும் குறள் இது என்று நான் கருதுகிறேன்.

   இந்தக் குறளில் பேணாது என்னும் சொல் ஒன்று வருகிறது. இது ஆய்வுக்குரிய சொல். பேணுதல் என்றால் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ளல் என்று பொருள். ஒரு தாய் தன் குழந்தையைப் பேணி வளர்த்தாள் என்று சொன்னால் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருந்து வளர்த்தாள் என்று பொருள்.

    குழந்தை வளர்ப்புக்கு உரிய சொல்லை முதியோர் பராமரிப்பிற்கும் போடுகிறார் வள்ளுவர் என்றால், வயது முதிர்ந்த பெரியோர்களை அவர்தம் மக்கள் எவ்வாறு ஓம்ப வேண்டும் என்னும் நுட்பத்தை இலைமறை காயாய் வைத்துள்ளார் என்பதை அறியலாம்.

    முதுமைப் பருவம் என்பது இரண்டாவது குழந்தைப் பருவம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிறு குழந்தைகளைப் போல பயப்படுவது, அடம்பிடிப்பது, சினம் கொள்வது, அழுவது, அன்புக்காக ஏங்குவது, பாதுகாப்பு உணர்வை எதிர்பார்ப்பது எல்லாம் முதியவர்களிடத்திலும் இருக்கும்.

  குழந்தைகளைப் பேணுவதற்கு எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அறிவு வேண்டுமோ அதைப்போல் இரு பங்கு பொறுமையும் அறிவும்  முதியவர்களைப் பேணுவதற்கும் வேண்டும்.

       பெற்ற மக்கள் தம் வயது முதிர்ந்த பெற்றோரை பேணாது ஒழுகின் அவர்களுக்கு அதன் காரணமாகத் தீராத துன்பம் வரும் என்று ஒரு பொருளும் இக் குறளுக்கு உண்டு என்பது என் கருத்தாகும்.

   நூறு உரூபாய் மதிப்புள்ள ஓர் ஊன்றுகோலை வாங்கித்தர யோசித்தால், வயதான அப்பா கீழே விழுந்து இடுப்பெலும்பு பழுதாக, பின்னர் மகன் இலட்சக்கணக்கில் செலவு செய்ய நேரிடும்.

  சின்னக் குழந்தைகளைக் கவனிப்பது போல வயதானவர்களைக் கவனிக்க வேண்டும்.

  சிறு குழந்தைகள் பசி தாங்கா. அப்படியே முதியவரும் பசி தாங்கார். கொடுப்பதை உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும். காலம் தாழ்த்திக் கொடுப்பதால் ஏற்படும் மன உளைச்சலால் அவர்தம் உடல்நலம் பெரிதும் கெடும்.

   “பெரியவர்களிடம் நான் குறை காண்பதில்லை” என்பார் காந்தியண்ணல். ஆம். முதியவர்களிடத்தில் பல குறைகள் தென்படும். சில பொருள்களைப் போட்டு உடைத்து விடுவர்; அல்லது தொலைத்து விடுவர். அதற்காக கடிதல் கூடாது.


   குழந்தையை எப்படித் தனிமையில் விடலாகாதோ அப்படியே வயதானவர்களையும் தனிமையில் விடலாகாது. துன்பங்களில் தலையாயது தனிமைத் துன்பம். குறிப்பாக இரவு நேரத்தில் அழைக்கும்போது ஒருவர் குரல் கொடுக்க இருக்க வேண்டும்.

  முதியோர்க்குச் சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதனால் பெருஞ்சிக்கல் தவிர்க்கப்படும்.

     முதியவர்களின் மனநலம் பேணுவதில் பெற்ற மக்களுக்கு மட்டுமன்று பேரன் பேத்திகளுக்கும் முக்கியப் பங்குண்டு.

    பெரியவர்களுக்கு வயது ஏற ஏற குடும்பத்தார் தம்மை அலட்சியப்படுத்துகின்றனர் என்ற எண்ணம் அதிகமாகும் என்பது உளவியலார் கருத்து. வீட்டிலுள்ள முதியோருடன் சேர்ந்து உண்பது அல்லது அவர்கள் உண்டபின் உண்பது, பண்டிகைக் காலங்களில் புத்தாடை கொடுப்பது, பிறந்தநாள், மணநாள் என்றால் அவர்தம் அடிபணிந்து ஆசி பெறுவது போன்ற செயல்களால் இத்தகைய எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலும்.

 வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் வாரம் தவறாமல் அவர்களிடத்தில் பேச வேண்டும். உள்ளூரில் இருந்தால் அருகில் அமர்ந்து ஆர்வத்தோடு பேச வேண்டும். சிறு சிறு பணிவிடைகளை மனமுவந்து செய்ய வேண்டும்.

    அவர்கள் தம் இளம்பருவத்து நிகழ்வுகளைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் முதல் முறையாகக் கேட்பதுபோல், காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளைச் சொல்லுமாறு கேட்க வேண்டும். அவர்கள் ஏதேனும் கதை, கவிதை என்று எழுதிக் காட்டினால் முழுமையாகப் படித்துப் பாராட்ட வேண்டும். புதிர்களைச் சொல்லி விடை என்னவாக இருக்கும் என யோசிக்கச் செய்யலாம். இதனால் வாழும் வரை நினைவாற்றல் குறையாமல் இருப்பர். இப்படி எல்லாம் செய்யத் தவறினால் அவர்கள் அல்சீமர் நோய் எனப்படும் மறதி நோயில் வீழ்வர். அப்போது பெற்ற மக்களுக்கு மன உளைச்சலும், மருத்துவச் செலவும் கூடும்.

   இந்தக் கோணத்தில் இப்போது குறளை மீண்டும் படிப்போம்.

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

              $$$$$$

 

4 comments:

  1. முழுக்க முழுக்க உண்மை. பெரியார்.. அறிவு, ஆற்றல், வயது என மூன்றுமே இடத்துக்கு தக்கவாறு பொருந்தும். முதியோர் பேணல், முதுகுரவர் பேணல் என்று பொருள் கொண்டால் , நீங்கள் கூறியது சாலப் பொருத்தம். நல்ல பார்வை.. நன்றி

    ReplyDelete
  2. விளக்கம் அருமை ஐயா.

    ReplyDelete
  3. விளக்கம் அருமை ஐயா... "பேணாது" எனும் சொல்லை மற்ற குறல்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்...

    ReplyDelete
  4. குழந்தைகளைப் பேணுவதற்கு எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அறிவு வேண்டுமோ அதைப்போல் இரு பங்கு பொறுமையும் அறிவும் முதியவர்களைப் பேணுவதற்கும் வேண்டும்.//

    ஆமாம் ஐயா. மிகவும் உண்மை. அனுபவமும் உண்டு.

    அருமையான விளக்கம்

    கீதா

    ReplyDelete