கனடா நாட்டில் இது மழைக்காலம். ஆனால் மழையை விட பனிதான் அதிகமாய்ப் பொழிகிறது. பனிப் பொழிவைக் காண கண் கோடி வேண்டும். அப்படி ஓர் அழகு. தேவர்கள் வானிலிருந்து மலர்கள் தூவ அது பூமாரியாய்ப் பொழிந்தது என்று புராணக் கதைகளில் படித்திருக்கிறோம். பனி மழையை நேரில் பார்த்தவர்தாம் அப்படி எழுதியிருக்க முடியும்! குண்டு மல்லிப் பூக்கள் வானிலிருந்து பரவலாக விழுந்து கொண்டே இருப்பதாய் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் இங்கே பெய்யும் பனிமழை.
இப்படிப் பனிமழை
தொடர்ந்து பெய்தாலும் இங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம்போல் தொடர்கிறது. பள்ளி, கல்லூரிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பொதுப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்புமில்லை. பேரங்காடிகளில் கூட்டம் வழிகிறது. எல்லோரும் கடுங்குளிரைத் தாங்கவல்ல ஆயத்த
ஆடைகளை அணிந்து வெளியில் செல்கிறார்கள். தங்கள்
வளர்ப்பு விலங்குகளான நாய்,
பூனைகளுக்கும் ஷூ, ஸ்வெட்டர் போன்றவற்றை அணிவித்துத் தங்களுடன்
அழைத்துச் செல்வது நமக்கு வேடிக்கையாக உள்ளது.
தம் வீட்டிற்கு
முன்னால் குன்றுபோல் குவிந்து கிடக்கும் பனித்துகள்களை மண்வெட்டி கொண்டோ சிறு இயந்திரம்
மூலமாகவோ அகற்றுகிறார்கள்.
சாலைகளில் குவிந்து
கிடப்பவற்றை நகராட்சியினர் பெரிய இயந்திரங்களைக் கொண்டு உடனுக்குடன் அகற்றுகின்றனர். எனவே வாகனப் போக்குவரத்துச் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை.
‘மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தினான்’ என்னும் நம்மூர்ப் பழமொழி இங்கேதான் சரியாகப் பொருந்துகிறது. கடுங்குளிரிலிருந்து தப்பிக்க வேண்டி வீடு முழுவதையும், கழிப்பறை உட்பட சூடாக்கி வைத்துள்ளனர். வெளியில் -10 டிகிரி என்று குளிர் இருந்தாலும் வீட்டின் உள்ளே எப்போதும் 25 டிகிரி அளவில் வெப்ப நிலை பராமரிக்கப்படும். இந்தக் குளிர்காலத்தில் இதன் காரணமாக மின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகவே இருக்கும்.
இன்னும் ஒரு
மாதம் போனால் உறைபனிக் காலம் தொடங்கிவிடும். ஏரி, குளம், ஆறு ஆகியவற்றில் உள்ள தண்ணீர் அத்தனையும்
உறைந்துவிடும்.
இளைஞர் பலரும் அவற்றின்
மேல் ஐஸ் ஹாக்கி விளையாடுவதைப் பார்க்க நமக்கு வியப்பாக இருக்கும்.
இந்தக் கடும்
பனி மழையிலும் ஒரு பேரங்காடிக்குப் போனோம். திரும்புகையில் ஒரு பையைத் தொலைத்துவிட்டு
வருத்தத்துடன் திரும்பினோம்.
மறுநாள் தொலைப்பேசிச்
செய்திமூலம் பை பத்திரமாய் இருப்பதாய்த் தெரிவித்தார்கள். உள்ளே இருந்த பொருள்களுடன் பை திரும்பக்
கிடைத்தது.
ஒரு நாடு நாடாக
இருந்தால் என்ன காடாக இருந்தால் என்ன, மேடாக
இருந்தால் என்ன பள்ளமாக இருந்தால் என்ன, பனிப்பொழிவு
இருந்தால் என்ன பாழ்நிலமாய் வறண்டு கிடந்தால் என்ன அந்த நாட்டுக்குப் பெருமை எதனால்
என்றால் அங்கே வாழும் நல்ல பண்பு மிக்க மக்களால்தான் என்று கூறுகிறார் ஔவையார்.
“நாடாகொன்றோ காடாகொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.”
ஆம்.
நேர்மைத் திறமும் நெஞ்சில்
உரமும் கொண்ட மக்களால்தான் இந் நாட்டுக்குப் பெருமை என்பதை மேற்காண் நிகழ்வால் அறிந்து
கொண்டேன்.
முனைவர்
அ.கோவிந்தராஜூ, கரூர் துச்சில்: கனடா.
பனிவிழும் நகர்/மலர் வனம்!!! படங்கள் அழகு.
ReplyDeleteபனிவிழுவதைப் பார்ப்பதற்குக் ஆயிரம் கண் வேண்டும்! நீங்கள் ரசித்து எழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. நேர்மறை எண்ணம்!!
ஏனென்றால் நம்மூர் மக்கள் அங்கு செல்பவர்களுக்கு இது ஒத்துவராததால் சில புலம்பல்கள் எதிர்மறையாக இருப்பதைக் கேட்டிருக்கிறேன். சமீபத்திய மழையின் போதும் கூட. இயற்கையை யாரேனும் எதிர்த்து வெற்றி பெற முடியுமா? அதை ரசித்து ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்ப நம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.
பை பத்திரமாகக் கிடைத்தது - ஆமாம் ஐயா அங்கு இந்த நேர்மைதான் (ஜப்பானிலும் இப்படித்தான். தெருவில் தவறவிட்டிருந்தால் கூட அடுத்த நாள் அங்கு சென்று பார்த்தால் அது அங்கேயே அப்படியே இருக்கும்) இந்த நாடுகளை பெருமையுடன் வாழ வைக்கிறது! ஔவையின் பாடலைச் சொன்னது சிறப்பு!
பதிவை ரசித்தேன்.
கீதா
தவறவிட்ட கைப்பைகள் அதுவும் லட்சங்களுடன் பைகளின் சொந்தக்காரர்களிடம் திரும்பக் கிடைப்பது நம்ம ஊரிலும் நிறைய நடக்கிறது.
ReplyDelete"எவ்வழி நல்லவர் ஆடவர்" இதில் வரும் "ஆடவர்" என்கிற சொல் கொஞ்சம் குழப்புவதாய் உள்ளதே!
ஆடவர் என்று சொன்னால் பெண்டிரும் அதில் அடக்கம். ‘ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே’ என்பது நன்னூல் இலக்கண நூற்பா.
Deleteஎளிதான எடுத்துக்காட்டு. சோறு உண்டான் என்றால் சோற்றுடன் குழம்பு, இரசம், மோர், பொரியல் சேர்த்து உண்டான் என்று புரிந்து கொள்கிறோம். வெற்றிலை போட்டான் எனின், வெற்றிலையோடு பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துப் போட்டான் என்றே நினைப்போம்.
இந்த அடிப்படையில்தான்,
மேற்காண் ஔவையின் பாடலையும்,
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
என்னும் குறளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தம்பி தங்கபாண்டியனின் குழப்பம் தீர்ந்திருக்கும் என எண்ணுகிறேன்.
ஆடவர் என்று சொன்னால் பெண்டிரும் அதில் அடக்கம். ‘ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே’ என்பது நன்னூல் இலக்கண நூற்பா.
Deleteஎளிதான எடுத்துக்காட்டு. சோறு உண்டான் என்றால் சோற்றுடன் குழம்பு, இரசம், மோர், பொரியல் சேர்த்து உண்டான் என்று புரிந்து கொள்கிறோம். வெற்றிலை போட்டான் எனின், வெற்றிலையோடு பாக்கு, சுண்ணாம்பு சேர்த்துப் போட்டான் என்றே நினைப்போம்.
இந்த அடிப்படையில்தான்,
மேற்காண் ஔவையின் பாடலையும்,
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
என்னும் குறளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தம்பி தங்கபாண்டியனின் குழப்பம் தீர்ந்திருக்கும் என எண்ணுகிறேன்.
அருமை ஐயா...
ReplyDeletePictures & contents are lively !
ReplyDelete