Thursday 9 December 2021

இருந்தாலும் இறந்தவர்களே

    வள்ளுவர் பலருடைய வாழ்வியல் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கிறார். அவர்களில் சிலரை வாழ்வோர் பட்டியலிலிருந்து நீக்கிச் செத்தவர் பட்டியலில் சேர்க்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பலவாகும்.

   பண்ணையார் ஒருவர், தம் பண்ணையில் வேலை செய்வதற்காக வெளியூரிலிருந்து வந்த கணவன், அவனுடைய இளம் மனைவி, அவர்தம் குட்டிக் குழந்தையுடன் தங்கி வேலை செய்ய ஒரு குடில் அமைத்துத் தருகிறார். அவர்களும் அவரை நம்பி அன்புடன் பழகிப் பணிசெய்து கிடக்கின்றனர். அந்தப் பண்ணையார் ஒரு நாள் காமுகனாய் மாறி அப் பெண்ணின் கையைப் பிடித்திழுக்க நிலைகுலைந்து, பாய்புலியிடம் சிக்கிய இளமானைப்போல் செய்வதறியாது திகைக்கின்றாள். வேலியே பயிரை மேய்கிறதே என்று வெம்பி வேதனை அடைகிறாள். இப்படி நம்பினவர் வீட்டுக்குத் தீமை செய்வோரைச் செத்தார் பட்டியலில் சேர்க்கிறார் திருவள்ளுவர். பிறனில் விழையாமை என்னும் அதிகாரத்தில் அமைந்த அருங்குறள் இது:

   விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 

   தீமை புரிந்தொழுகு வார்.   143   

  

  ஒருவன் அருகில் இல்லாதபோது அவனைப் புறம் பேசுகிறவன் எவனோ அவன் உயிருடன் இருப்பது பூமிக்கு வெறும் பாரம்(dead weight) என்று சொல்கிறார். இறந்தார் எவராலும் பயனில்லை என்னுமாப்போல் இவனாலும் பயனில்லையாம். போனால் போகட்டும் என்று பூமித்தாய் புறங்கூறுவானைச் சுமப்பதாக வள்ளுவர் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்:

    அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்   

     புன்சொல் உரைப்பான் பொறை.   189

  

    தான் வாழும் சமுதாயத்திற்கு எந்தவொரு பயனுள்ள பங்களிப்பையும் செய்யாமல் வெறுமனே இம் மண்ணில் இருப்பவனை(simply existing) செத்தவனாகவே கருதுகிறார் வள்ளுவர். இத்தகைய மனிதர் மீது வள்ளுவர் சினம் கொள்கிறார். சற்றும் மதிப்புக் கொடுக்க மறுக்கிறார். ஒருமையில் சாடுகிறார். செத்தாரை வைத்துக்கொண்டு சீராட்டவா முடியும்? வள்ளுவர் சிறுமை கண்டு பொங்கியதால் விளைந்த குறள் இது:

     ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

     செத்தாருள் வைக்கப் படும்.   214

 

   மனிதன் தனக்குள் உட்பகை பலவற்றை வைத்துக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் வாழ்கிறான். அவற்றுள் ஒன்று சினம்; அளவு கடந்த சினம். இந்தச் சினம் பொங்கி எழும்போது அறிவு அணுவளவும் வேலை செய்யாமல் முடங்கிவிடும். செத்தவர்க்கு எப்படி அறிவு வேலை செய்யாதோ அப்படியே சினம் மிகுந்தார்க்கும் வேலை செய்யாது. எனவேதான்  இவர்கள் செத்தாரைப் போன்றோர் என்று வள்ளுவர் இந்தக் குறளில் தெளிவாகப் பதிவு செய்கிறார்:

  இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்  

  துறந்தார் துறந்தார் துணை.   310     

 

    செல்வத்துள் தலையாயது செவிச்செல்வம் என்பார் வள்ளுவர். கற்றிலனாயினும் கேட்க என வேண்டுவார். எனைத்தானும் நல்லவை கேட்க என்று வற்புறுத்திச் சொல்லுவார். என்ன சொல்லியும் கேட்காமல் மூன்று வேளையும் மூக்கு முட்ட உண்டு கிடப்போரை வள்ளுவர் செத்தார் பட்டியலில் சேர்க்கிறார். எல்லார்க்கும் தெரிந்த குறள் இது:

     செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் 

     அவியினும் வாழினும் என்.   420

 

   சான்றோர்கள் ஓதி உணர்ந்து, ஆராய்ந்து பார்த்துச் சிலவற்றை உண்டு என்பார்கள். ஆனால் சிலர் எவ்வித ஆராய்ச்சியும் இன்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்றுஇல்லைஎன ஒற்றைச் சொல்லில் சொல்லிச் செல்வர். அவர்களை வாழும் மனிதராய் வள்ளுவர் ஏற்றுக் கொள்வதில்லை; இறந்தோர் பட்டியலில் சேர்க்கிறார்; இறந்தபின் உலவும் பேய்கள் என்கிறார். அலகை என்றால் பேய் என்று பொருள். பலரும் காணாத குறள் இது:

        உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்(து)     

        அலகையா வைக்கப் படும்.   850

 

    நஞ்சு உண்போரின் கதி என்னாகும்? இறந்து விடுவர். கள் உண்பவரை வள்ளுவர் நஞ்சுண்பவர் எனச் சொல்கிறார். அளவு கடந்து மதுவருந்திச் செத்தாரைப் போல அசைவற்றுக் கிடப்போரை நாம் பார்க்கிறோம். மது அருந்துவோர் அனைவரையும் செத்தார் என்றே கருதி வள்ளுவர் செத்தவர் பட்டியலில் சேர்க்கிறார்:

  துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்                           

  நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.   926

 

   ஒருவன் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டிப் பணம் சேர்த்துச் செல்வந்தன் என்னும் தகுதியுடன் வாழ்ந்தாலும், ஒரு சல்லிக் காசைக் கூட மற்றவர்க்காகச் செலவிடமாட்டான்; தானும் அனுபவிக்க மாட்டான். அவனையும் இறந்தோர் பட்டியலில் சேர்க்கிறார் வள்ளுவர். ‘அவன் உளனாயினும் செத்தானாம்என்று உரை எழுதுவார் பரிமேலழகர்.

        வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் 

        செத்தான் செயக்கிடந்த தில்.   1001

 

   பண்டைக் காலத்தில் போரில் விழுப்புண் ஏற்று இறந்தவர்களைப் புதைத்து, புதைத்த இடத்தில் ஒரு கல்லை நட்டு, அதைத் தெய்வமாக, தேவராக எண்ணி வழிபடுவர். இத்தகைய தேவருக்குச் சமமானவர் கயவர் என்று அவர்களைப் புகழ்வதுபோல் இகழ்வார் வள்ளுவர். ஆக இந்தக் கயவர்களையும் செத்தவர் பட்டியலில் சேர்க்கிறார் வள்ளுவர். 

     தேவர் அனையர் கயவர் அவருந்தான்   

      மேவன செய்தொழுக லான்.   1073

 

   சுருங்கச் சொன்னால், மாற்றான் மனைவியை விரும்பும் மதி கெட்டார், புறம் பேசுவோர், உடன் வாழும் மனிதர் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உதவி செய்து வாழாதவர், சேர்ந்தாரைக் கொல்லி எனப்படும் சினம் உடையவர், கேள்வி அறிவைப் பெறுவதில் ஆர்வம் இல்லாத கேளாச் செவியர், உண்டு என்று சான்றோர் சொல்வதை இல்லை என மறுப்பவர், சேர்த்த செல்வத்தை வறியார்க்குக் கிள்ளிக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்போர், எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாமல் தாம் நினைத்ததைச் செய்யும் கயவர் எனப்படும் இவர்கள் உயிருடன் இருந்தாலும் உண்மையில் இறந்தவர்களே. 

 முனைவர் அ.கோவிந்தராஜூ,                                                                                            துச்சில்: கனடா.

3 comments:

  1. மிகவும் அருமை...

    சிறப்பு ஐயா...

    ReplyDelete
  2. மிக மிக மிக அருமை ஐயா. நல்லதொரு ஆய்வு. சிறப்பான பார்வை, விளக்கம். மிகவும் ரசித்தேன். வள்ளுவர் எவ்வளவு அழகாக நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்! உலகமறை என்பது எத்தனைப்பொருத்தம்! அதை நீங்கள் இங்கு தெரிந்தெடுத்துச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

    இதை வாசித்த போது தோன்றியது....இப்படிச் சொல்லலாமா என்று தெரியவில்லை ஆனால் தோன்றியது இதுதான். உலகம் 99% இறந்தவர்களைத்தான் சுமந்து கொண்டிருக்கிறது என்று.

    கீதா

    ReplyDelete
  3. திருக்குறள் இன் நட்ஷெல். அந்த ஷெல்லை உடைத்து ஒரு குறிப்பிட்ட பொருளில் அடங்கும் குறள்களைத் தொகுத்து நீங்கள் அழகான விளக்கம் கொடுத்துச் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு. இப்படி எல்லாம் சிந்தித்ததில்லை.

    அருமை ஐயா.

    துளசிதரன்

    ReplyDelete