Tuesday, 24 May 2022

கடலும் கடல் சார்ந்த கடவுளும்

   கடலும் கடல் சார்ந்த இடமும் என்பது நெய்தல் நிலமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர் நெய்தல் நிலத்திற்கான கடவுளை வருணன் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இன்றைய நிலை வேறு. கன்னியாகுமரியில் கன்னியாகுமரியும், திருச்செந்தூரில் முருகனும், இராமேஸ்வரத்தில் ஈஸ்வரனும் வழிபடும் கடவுளராய் வலம் வருகின்றனர்.

     எங்கள் சம்பந்தி சரவணப்பெருமாள் – காந்திமதி இணையருடன் ஊர்ப்பயணம் போவது எப்போதும் உற்சாகம் மிகுந்த அனுபவமாகவே அமையும். அவர்களுடைய முன்னெடுப்பில் எனக்கும் என் துணைவியாருக்கும் இராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. 13.5.22 அன்று காலை திண்டுக்கல்லில் புறப்பட்டு, மதுரை வழியாகச் சென்றோம்.  செல்லும் வழியில் ஆங்காங்கே மகிழுந்தை நிறுத்தி, நொங்கு உண்டோம்; பதநீர் பருகினோம். இராமநாதபுரம் மாவட்டத்தின் பனை நொங்கும் பதநீரும் விசேடமானது; சுவை என்றால் அப்படி ஒரு சுவை!

    நாங்கள் இராமேஸ்வரம் சென்றடைந்தபோது காலை மணி பதினொன்று இருக்கும். தமிழ்நாடு அரசு இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் அருகில் புதிதாய் எழுப்பியிருந்த யாத்திரி நிவாஸ்என்னும் தூய தமிழ்ப் பெயரைத் தாங்கிய தங்கும் விடுதிக்குச் சென்று பார்த்தோம். எதிர்பார்த்த அளவுக்குத் தூய்மையாக இல்லை என்பதால் கோவிலுக்கு அருகே இருந்த ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்தோம்.

    நேரே வங்கக் கடலுக்குச் சென்று கடல் நீராடினோம். இந்த இடம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுவதற்கான புனைகதைகள் பல உலா வருகின்றன. கடலலை ஓய்வது எப்போது குளிப்பது எப்போது என்னும் பழமொழி இங்கு பொய்மொழி ஆவதைப் பார்க்கலாம். கடலில் அலை என்பது அறவே இல்லை. இடுப்பளவு ஆழமுள்ள குளத்தில் குளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதற்கான அறிவியல் காரணம் என்னவோ? எங்கள் நல்ல நேரம் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை; எனவே நின்று நிதானமாக நீராட முடிந்தது.

    தொடர்ந்து கிழக்குக் கோபுர வாயில் வழியே நுழைந்து ஒருவருக்கு ரூ.25 கட்டணம் செலுத்திய பின்னர் வரிசையில் சென்று கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 கிணற்று நீரில் நீராட வேண்டும். ஒவ்வொரு கிணற்றிலும் ஊழியர் ஒருவர் வாளியால் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றுவார். ஆனால் கூட்டம் அதிகமாய் இருக்கும்போது ஒரு வாளி தண்ணீரை ஒன்பது பேர் தலைகளில் தெளித்து அனுப்பிவிடுவார்.  இந்தக் கிணறுகள்  எல்லாவற்றுக்கும் கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம் என வடமொழிப் பெயர்களே அமைந்துள்ளன.

    இங்கே நீராடினால் என்னென்ன நன்மைகள் எனப் பட்டியல் உள்ளது. செய்ந்நன்றி மறந்தவர்க்கு உய்வில்லை என்று வள்ளுவர் கூறுகிறார். ஆனால், இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடினால் செய்ந்நன்றி மறந்தார்க்கும் உய்வுண்டு என்று கூறப்படுகிறது!

   இருபத்து இரண்டு இடங்களில் நீராடி முடித்ததும் அப்படியே சென்று ஈரத்துணியுடன் நின்று இறைவனை வழிபட முடியாது. உடை மாற்றிய பிறகுதான் இறைவனை வழிபட அனுமதிப்பார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று உடைமாற்றிக்கொண்டு கோவிலுக்குச் சென்றோம். கூட்டம் இல்லாததால் நிம்மதியாக இறைவழிபாடு செய்தோம்.

      தூய்மையான இடமும் தூய்மையான மனமும் இறைவன் வாழும் இருப்பிடம் என்பதை அறியாதவர் பலராக உள்ள சூழலில், இங்கே கோவில் வளாகம் தூய்மையாகப் பராமரிக்கப்படுவது மனத்துக்கு நிறைவைத் தந்தது.

     இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்குக் கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் ஏனோ பயன்பாட்டில் இல்லை.

  இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட மூன்றாம் சுற்றுப்பாதை ஆகும். உலகிலேயே மிக நீளமான கோவில் சுற்றுப்பாதை என்ற பெருமையைப் பெற்றது. முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால்  கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1770 –ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச் சுற்றுப்பாதை கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது.

     இந்தக் கோவிலின் இறைவியின் பெயர் பர்வதவர்த்தினி என்பதாகும். பர்வதம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு மலை என்று பொருள். வர்த்தினி என்னும் சொல்லின் பொருள் அரசி. மலையரசி எனத் தமிழில் பெயர் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ்தான் இல்லை. என்று தணியுமோ நம் பிறமொழி மோகம்? என்று மாறுமோ இந்தப் பேரிழிவு?

     மாலையில் இராமேஸ்வரத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனுஷ்கோடிக்குச் சாலை வழியே சென்றோம். கடல்வழியே படகிலும் செல்லலாம். ஒரு காலத்தில் பெரிய நகரமாகத் திகழ்ந்த தனுஷ்கோடி 1964ஆம் ஆண்டு புயலில் சிக்கி முற்றிலும் அழிந்தது. இன்று நான்கைந்து மீனவக் குடும்பங்கள் மட்டும் உள்ளன. மின்சார வசதிகூட இல்லை. ஆனால் அகன்ற சாலை வசதி அருமையாக உள்ளது.

   தனுஷ்கோடி பார்க்க வேண்டிய இடம். இந்து மாக்கடலும் வங்கக் கடலும் ஒன்றுகூடும் இடம். அங்குள்ள தேசிய சின்னம் தாங்கிய தூணும், பழைய கலங்கரை விளக்கமும் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. கடலில் நூற்றுக் கணக்கில் படகுகள் காற்றில் அசைந்த வண்ணம் நிற்பதைக் காண்பதற்குக் கூடுதலாக இரண்டு கண்கள் வேண்டும்!

     மாலை ஆறு மணிக்குமேல் தனுஷ்கோடியில் யாரும் இருத்தல் கூடாது என்பது சட்டம். அந்தத் தீவு இரவு முழுவதும் கடலோரக் காவல்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும். நாங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டைப் பார்த்தோம். அந்த வீடு ஓர் அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. House of Kalam என்று பெயர்ப்பலகை வைத்துள்ளனர். The house where Kalam lived என்றிருக்க வேண்டும். அவருக்கென சொந்த வீடு கிடையாது. உள்ளே சென்று பார்த்தபோது அவர் எழுதிய கவிதை ஒன்று கண்ணில் பட்டது. என் மனத்தில் பதிந்த முதல் இரண்டு வரிகள் இவை:

   I have no house, space is my home

   Moon and stars is my kith and kin

   கலாம் அவர்கள் எனக்கு அளித்த தேசிய விருதும், அவருடன் நிகழ்த்திய உரையாடலும் மறக்க முடியாதவை. அதை என் மனம் அசைபோட, அனைவரும் மறுநாள் திருப்புல்லாணி, உத்தரகோசங்கை, மதுரை வழியாக திண்டுக்கல் வந்தடைந்தோம்.









 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

  

 

 

 

5 comments:

  1. பயணம் அருமை ஐயா...

    திண்டுக்கல் :- அழைத்திருக்கலாமே...

    ReplyDelete
  2. இதற்கு முன் இட்ட கருத்து வந்ததா என்று தெரியவில்லை.

    படங்களும் விவரங்களும் அருமை

    தனுஷ்கோடியைக் காணக் கோடிக்கண்கள் வேண்டும்! அத்தனை அழகான பகுதி. அதுவும் அந்த நுனிப் பகுதியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும்

    ஆம் கடலில் அலைகளே இருக்காது. குளம் போன்று தான் இருக்கும். நானும் வியந்ததுண்டு சிறு வயதில். அப்போது இலங்கையிலிருந்து தலைமன்னார் வந்து அங்கிருந்து கப்பலில் வந்து இராமேஸ்வரத்தில் இறங்குவது வழக்கம். அப்போதே தோன்றிய கேள்வி. பாட்டி இதற்குப் புராணக்கதை சொல்வார்.
    அதன் பின் அறிந்துகொண்டேன் புவியியல் காரணம் அறிவியல் காரணம். அது பாக் சலசந்தி தொடங்கும் இடம் Palk Bay பகுதி ஆழமற்ற பகுதி இலங்கையின் வடக்குப் பகுதிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பகுதி. அப்பகுதி ஆழமற்றது ஆனால் அதே சமயம் Palk Bay ன் தெற்குப் பகுதியான தனுஷ்கோடியில் அலைகள் இருக்கும். இராமேஸ்வரம் வடக்கும் பகுதி. இப்பகுதியில் ஆற்றின் கலப்பினால் வண்டல் மண் படிந்து நீர் ஆழமற்றதாக இருக்கும்,. இங்கு தண்ணீரில் உப்பின் சுவையும் குறைவாக இருக்குமாம். அது நான் நாவில் வைத்துப் பார்த்ததில்லை.

    அங்கு வீசும் காற்றின் தன்மையால் அலைகள் எழுவதில்லை ஆனால் அதே சமயம் இலங்கைப் பகுதியில் அலைகள் அடிக்கும். அதனாலேயே இராமேஸ்வரம் பகுதி கடலை பெண் கடல்! என்றும் தனுஷ்கோடிப் பகுதியில் உள்ள கடலை ஆண் கடல்! என்றும் சொல்வதுண்டு! (தெரியாமல் மாற்றிச் சொல்கிறார்களோ!!!!)

    இன்னும் விரிவாகச் சொல்லலாம். பெரிதாகிவிடும் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் ஐயா.

    கீதா

    ReplyDelete
  3. கீதா அம்மா உங்கள் பின்னூட்டம் இந்தப் பதிவிற்குக் கூடுதல் சிறப்பைத் தருகிறது. நன்றி.

    ReplyDelete
  4. இதனைப் படிக்கும்போதே அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது ஐயா😃

    ReplyDelete