இன்று (ஜூன் 3)உலக மிதிவண்டி நாள். காலையில் இது குறித்த நினைவோடு எழுந்தேன். அதன் விளைவாக அமைந்ததே இப் பதிவு.
நான் எட்டாம்
வகுப்பில் படித்தபோது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். எங்கள் வீட்டில் இருந்த சைக்கிள் உயரமானது
ஆகையால் சின்ன சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கற்றுக் கொண்டேன். சைக்கிள் கற்றுக்கொண்டபோது விழுந்ததால் உடலில்
ஏற்பட்ட சிறுகாயம்,
பெருங்காயம் பல; முழங்காலில் இன்றும் அத் தழும்பு உள்ளது. எத்தனை காயம் பட்டாலும் சைக்கிள் ஓட்டுவதில்
ஆர்வம் குறையவில்லை.
கிராமத்திலிருந்து
ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஆண்டிமடம் என்னும் நகரில் இருந்த கழக உயர்நிலைப்
பள்ளிக்கு சைக்கிளில் சென்றுதான் படித்தேன்.
ஒரு கோடை விடுமுறையில்
தோட்டத்தில் கூடுதலாக விளைந்த மாங்காய்களை மூட்டையாக சைக்கிளில் கட்டிக்கொண்டு சிதம்பரம்
வரைக்கும் சென்று விற்று வந்த அனுபவமும் மறக்க முடியாதது.
அன்று தொடங்கிய
சைக்கிள் ஓட்டும் ஆர்வம் இன்று எழுபது வயதிலும் குறையவில்லை. 1975ஆம் ஆண்டு புதிதாய் வாங்கிய ரலே சைக்கிளில்தான்
இன்றும் என் பயணம் தொடர்கிறது.
மனைவியுடன் செல்ல மகிழுந்து; மற்றபடி நான் தனியே செல்வது இந்த சைக்கிளில்தான். இதனால் எரிபொருள் செலவு குறைகிறது. மேலும் உடல் நலமும் சீராக உள்ளது.
கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது மாணவர்களை அழைத்துக் கொண்டு நீண்டதூர சைக்கிள் பயணம் சென்றதுண்டு. 1995 ஆம் ஆண்டில் திருப்பூர் சென்று திருப்பூர் குமரனின் துணைவியார் இராமாயம்மாள் அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி வந்தது மறக்க முடியாத தருணம். 2004ஆம் ஆண்டில், கவுந்தப்பாடி அருகில் செந்தாம்பாளையம் என்னும் ஊரில் உள்ள மகாத்மா காந்தி கோவிலுக்கு சைக்கிள் பேரணியாகச் சென்றதை இந்து ஆங்கில நாளேடு சிறப்புச் செய்தியாக வெளியிட்டது.
அந்தப் பள்ளி
விடுதியில் தங்கிப் படித்த ஊட்டிப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்ட
தொண்டர்கள் உதவியுடன் கட்டாய
சைக்கிள் ஓட்டும் பயிற்சி முகாம் நடத்தியது இன்றும் என் நினைவில் நிற்கிறது.
1985இல் எனக்குத்
திருமணம் ஆன போது என்னிடத்தில் இருந்த ஒரே வாகனம் சைக்கிள்தான். அதில் பின்னால் என் மனைவி அமர, ஒய்யாரமாய் ஓட்டித் திரிந்த காலம் – அது ஒரு கனாக்காலம்!
குழந்தைகளுக்காக நான் எழுதிய சைக்கிள் பற்றிய
கவிதையும் என் மனத்தில் மின்னலாய்த் தோன்றியது.
இரண்டு சக்கர சைக்கிளில்
இருவர் சவாரி செய்யலாம்
மறந்து
யாரும் குறுக்கிட்டால்
மணியை அடித்துச் செல்லலாம்!
ஏழை
மக்கள் வாங்கவும்
ஏற்ற நல்ல வண்டியாம்
வாழைப்
பழங்கள் விற்பவர்
வாங்கி ஓட்டும் வண்டியாம்!
படிக்க
விரும்பும் மாணவர்
பள்ளி செல்லப் பயன்படும்
குடிக்க
தண்ணீர் எடுத்திட
குழாய் அடிக்கும் வந்திடும்!
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
கவிதையும், நினைவலைகளும் அருமை ஐயா.
ReplyDeleteநினைவலைகள் அருமை ஐயா. நானும் சைக்கிள் ஓட்டுவதையே அதிகம் விரும்புகிறேன். நெய்வேலி நகரில் இருந்தவரை நீண்ட தூர சைக்கிள் பயணங்கள் அமைந்தது. தலைநகர் சென்ற பிறகு சைக்கிள் பயணம் அரிதாகிவிட்டது.
ReplyDeleteமிகவும் ரசித்தேன் ஐயா...
ReplyDeleteநீங்கள் முன்பு உங்களின் சிறு வயது அனுபவங்களை எழுதிய போது சைக்கிள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது முதல் அனுபவம் எல்லாம் நீங்கள் எழுதிய நினைவும் வருகிறது ஐயா. அப்போதும் இது பற்றிச் சொல்லிய நினைவும் இருக்கிறது. அருமையான அனுபவங்கள்.
ReplyDeleteஎனக்கும் சைக்கிள் ஒட்டுவது மிகவும் பிடிக்கும். ஓட்டியதுண்டு. இப்போதும் ஓட்ட ஆசை. ஆனால் என் கால் எட்டும் அளவிற்குக் கிடைப்பது சிரமமாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு எழுதிய பாடலும் அருமை
கீதா