Wednesday, 6 July 2022

அவன் ஒரு கள்வன்

   “உன்னைத் திருமணம் செய்து கொள்ள காலம் தாழ்த்தும் உன் காதலன் ஒரு கள்வனா?” என்று வியப்புடன் கேட்டாள் தோழி.

  “ஆம். அவன் கள்வனே. ஒரு நாள் மலை வீழருவி அருகில் நாங்கள் தனித்திருந்த போது என் ஐம்புல இன்பம் அனைத்தையும் ஒருசேர களவாடிக் கொண்டானே! களவில் இன்பம் நுகர்ந்தவன் கள்வன்தானே?” என்று தலைவி ஆவேசம் வந்தவள்போல் சொன்னாள்.

   “கண்டதும் காதலோ?” தோழி கேட்டாள்.

இல்லையடி இல்லை. பலமுறை அயலார்க்குத் தெரியாமல் சந்தித்து அளவளவிய பின்னரே எங்கள் காதலை உறுதிப்படுத்தினோம்.”

 “சரி. திருமணத்திற்கு முன்னர் உன்னை அவனுக்குத் தர எப்படிச் சம்மதித்தாய்?”

  “திருமணம் நடந்தபின்தான் சம்மதித்தேன்.”

என்ன! திருமணம் நடந்ததா?”

ஆம். காட்டுப் பூக்களைக் கொய்து மாலைகள் ஆக்கி மாலை மாற்றிக் கொண்டோம். பொருள் ஈட்ட வெளியூர் செல்வதாகவும், ஊர் திரும்பியவுடன் ஊரறிய என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி வாக்கு தந்தான்.”

“இது பற்றி உன் தாயிடம் சொன்னாயா?”

“இல்லை.”

“அந்தத் திருமணத்திற்கு சாட்சி உண்டா?”

“இருந்திருந்தால் அவரைத் தேடிப்பிடித்து சாட்சிக்கு முன்னால் நிறுத்தி நறுக்கென்று கேட்டிருப்பேனே.”

“நீங்கள் திருமணம் செய்துகொண்ட போது தினைப்புனம் காப்போர், தேனெடுப்போர் என எவருமே அந்தப் பக்கம் கண்ணில் படவில்லையா?”

“இல்லை. அப்போது அந்தப் பக்கம் யாருமே வரவில்லை. நாங்கள் மாலை மாற்றிக்கொண்டபோது அருகிலிருந்த ஒரு நீரோடையின் கரையில் தினைத்தாள் போன்ற மெல்லிய நீண்ட கால்களையுடைய ஒரு நாரை மட்டும் உட்கார்ந்து கொண்டு ஆரல் மீனைப் பிடிக்க ஆவலாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது. அது எங்களைப் பார்க்கவில்லை. எனவே அதை ஒரு சாட்சியாக அழைக்க முடியாது.

   யாருமில்லாத இடத்தில் கள்வனாய் வந்து என் நலம் முழுவதையும் கவர்ந்தான். அவன் அப்போது கூறிய உறுதி மொழியை மறந்து என்னைக் காண வராவிட்டால் நான் என்ன செய்வேனடி தோழி?”

      இப்படி ஓர் அழகான உணர்வு மயமான காட்சி சங்க காலத்தில் அரங்கேறியது. அதை நம் கபிலர் அருமையாகப் பதிவு செய்துள்ளார். குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள நேரிசை ஆசிரியப்பா இது:

 

யாரும் இல்லை; தானே கள்வன்/

தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ/

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால/

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்/

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே./ (குறு 25)

 

 

இன்று படித்தேன்; பகிர்ந்தேன்

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்

 

5 comments:

  1. பாடல் விளக்கம் நன்று ஐயா. பாடல் வாசிக்கும் போதே பொருள் புரிகின்றது ஓரளவு. அதை நீங்கள் விளக்கமாகச் சொல்லும் போது அழகு சேர்க்கிறது.

    எனக்கு அடிக்கடித் தோன்றும் ஓர் எண்ணம். இப்படி குறுந்தொகையில் வாசிக்கும் போது ரசிக்கிறோம். தலைவன் தலைவி தோழி என்கிறோம். ஆனால் இப்போதும் இப்படி நிகழ்கிறதுதானே (காலம் காலமாய்!!) திரைப்படத்திலோ, நமக்குத் தெரிந்த மக்களிடையேயோ...ஆனால் ரசிப்பதில்லையே ஏனோ? கல்யாணத்திற்கு முன் உறவு, பரத்தை என்பதெல்லாம்.... என்பது இப்போது பரவலாகவே நடப்பதை நம்மால் ஏற்க முடிவதில்லையே..சமூகம் கெட்டுவிட்டது என்கிறோமே....ஆனால் சங்ககாலத்தில் இருந்திருப்பதால்தானே பாடல்கள்.

    கீதா

    ReplyDelete
  2. பாடலும் அருமை, அதை தமிழாசிரியராக நீங்கள் விளக்கியிருப்பதும் அருமை, பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் வகுப்பில் இருந்தது போன்று தோன்றியது.

    துளசிதரன்

    ReplyDelete
  3. விளக்கமுடன் சொன்னது அழகு ஐயா.
    - கில்லர்ஜி

    ReplyDelete