Saturday, 21 January 2023

எந்நாளோ என்னும் ஏக்கம்

     இன்று பலரும் போகிற போக்கில்சாதிகள் ஒழியட்டும் மதங்கள் தொலையட்டும்எனச் சொல்லிச் செல்வதைப் பார்க்கிறோம். சாதி மத வேற்றுமைகள் ஒழிந்தால்தான் ஒற்றுமை ஏற்படும் என்று சிலர் ஓயாமல் ஓலமிடுவதும் நம் காதில் விழுகிறது.

    இப்படிப் பேசுவது எளிது நடைமுறையில் இஃது அரிது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பரந்து விரிந்து கிடக்கும் பாரதத்தில் சாதிகள், மதங்கள், மொழிகள் போன்ற வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. காலம் காலமாக வேரூன்றிக் கிடப்பவையும் கூட. ‘சாதிகள் இல்லையடி பாப்பாஎனப் பாடிய பாரதியேஆயிரம் உண்டிங்கு சாதிஎன்பதை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறான். ‘குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்என்னும் நிலைப்பாட்டில் நிற்கிறான்.

        இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கியுள்ள உரிமை யாதெனின், நாம் எந்த மதத்தினராயும் இருக்கலாம், எந்த இனத்தவராயும் இருக்கலாம், எந்த மொழியைப் பேசுபவராயும் இருக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவராய் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். சைவ உணவு, அசைவ உணவு இவற்றில் எதையும் உண்ணலாம். ஆனால் மாற்று மதத்தாரை, மாற்று இனத்தாரை, மாற்று மொழியாரை, மாற்று உணவுப் பழக்கம் உடையாரை, மாற்றுக் கருத்து உடையாரை மட்டம்தட்டிப் பேசுவது அறிவுடையோர் செய்யும் செயல் ஆகாது. கடவுள் நம்பிக்கை உடையோரைச் சிலர் காட்டுமிரண்டி என எள்ளி நகையாடுவது ஒரு பண்பாடற்ற செயலாகும்.

   நாட்டில் மேற்காண் வேறுபாடுகள் இருப்பினும் நாம் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாய் வாழலாம் என்பதை மேடையேறிச் சொல்ல வேண்டும். இதை விடுத்துச் சாதிகளை ஒழிப்போம் மதங்களை ஒழிப்போம் என வெறிகொண்டு கூச்சலிடுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். முன் எப்போதும் இல்லாத அளவில் சாதிச் சங்கங்கள் தோன்றியதற்கு இந்த வெறித்தனமும் வெற்றுக் கூச்சல்களுமே காரணம். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஆகிவிட்டது.

 ஒருவர் மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று உடையவராய் இருத்தல் தவறன்று. ஆனால் மதவெறி, இனவெறி, மொழிவெறி உடையவராய் இருத்தல் மிகவும் தவறு.

    நமக்குத் தேவை சமயப்பொறை என்னும் சகிப்புத் தன்மை. இதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். பள்ளிகளில் இயங்கும் சாரணர் இயக்கத்தில் சர்வமத வழிபாடு(All Faith Prayer) என்று ஒன்று உண்டு. எல்லா மதங்களும் மதிக்கத் தக்கவை என்னும் உணர்வைப் பிள்ளைகளின் மனத்தில் பதிய வைக்கும் நல்ல உத்தியாக இது விளங்குகிறது.

    நமக்குத் தேவை சாதி மதம் மாறி நடக்கும் தவிர்க்க முடியாத திருமணங்களை ஏற்றுக் கொண்டு வாழ்த்தி மகிழும் மனப்பக்குவம். செம்புலப் பெயல் நீர் போல உள்ளம் கலந்த இணையரை வாழவிடும் மனவளம் பலருக்கும் இல்லையே.

   நமக்குத் தேவைமாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்என்னும் மனப்பாங்கு.

    ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியோம்’, ‘மண்ணிலே எல்லாரும் நல்ல வண்ணம் வாழ்கஎன்னும் உணர்வோடு மாற்றாரையும் மதித்து, மாற்றுக் கருத்தையும் மதித்து ஒற்றுமையாய் வாழும் நாள் எந்நாளோ?

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

2 comments:

  1. 'தான் உலகின் ஒரு உயிரினம்' என்பது மட்டுமே ஒவ்வொருவரின் எண்ணம் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  2. ஒருவர் மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று உடையவராய் இருத்தல் தவறன்று. ஆனால் மதவெறி, இனவெறி, மொழிவெறி உடையவராய் இருத்தல் மிகவும் தவறு.//

    ஆம் ஐயா. எந்தப் பற்றுமே வெறியாக மாறக் கூடாது. அத்தனைவரிகளும் அருமை

    கீதா

    ReplyDelete