Sunday 5 March 2023

முயன்று பெறுவதே முனைவர் பட்டம்

    முயன்று பெறுவதே முனைவர் பட்டம். ஆனால், இன்றைக்குப் பலரும் எந்த முயற்சியும் இன்றி ஆசையின் காரணமாகக் குறுக்கு வழியில் சென்று டாக்டர் பட்டம் ஒன்றை விலை கொடுத்து வாங்கித் தம் பெயருக்குமுன் போட்டுக் கொள்ளும் வியத்தகு போக்கு அதிகரித்து வருகிறது.

   வெளி நாடுகளில் போலியாக இயங்கும் சில பல்கலைக்கழகங்கள் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு சென்னையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடத்தி போலி டாக்டர் பட்டங்களை வழங்குவது வழக்கமான ஒன்றுதான். இதைத் தூக்கி விழுங்குவதுபோல்   அண்மையில் வந்தது ஓர் அதிர்ச்சி தரும் செய்தி.

 ஒரு படித்த இளைஞன் போலியாக  ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் பெயரில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, ஈரோடு மகேஷ் உள்ளிட்ட முப்பது பேர்களுக்கு போலி டாக்டர் பட்டங்களை, அவற்றையும் பணி நிறைவு பெற்ற நேர்மையான ஒரு நீதியரசர் கையால் வழங்கச் செய்துள்ளான். அந்த விழாவைச் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியுள்ளான் என்றால் அவன் எவ்வளவுபெரியஆளாக இருப்பான்! நீதியரசர், வேந்தர், துணைவேந்தர் என அனைவரையும் முட்டாளாக்கி விட்டானே!

   பல்கலைக்கழகங்களைத் தவிர தனியார் அமைப்புகள் டாக்டர் பட்டங்களை வழங்க முடியாது என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் பலர் உள்ளார்களே என்பதுதான் என் வருத்தம்.

   இது ஒரு புறம் இருக்க, இப்போது சில தொழில் நிறுவனங்களின் உரிமையாளராய் உள்ள பெரும் புள்ளிகள் பெயரளவில் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வராகப் பதிவு செய்துகொண்டு, வேறு ஒருவர் மூலம் தம் பெயரில் ஆய்வுக்கட்டுரை எழுதச் செய்து, தாம் எழுதியதுபோல் சமர்ப்பித்து முனைவர் பட்டம் வாங்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன. பெருந்தொகை பெற்றுக் கொண்டு பிறருக்கு ஆய்வுக் கட்டுரை எழுதுவோர்(Ghost Writers) இன்று பலராக உள்ளனர். இப்படி அறமற்ற வழியில் அதை வாங்கிப் பெயருக்குமுன்டாக்டர்என்று போட்டுக்கொள்ளும்போது அவர்களுடைய மனத்தில் குற்ற உணர்வு தோன்றாதா? அன்று “கல்வியை விலை போட்டு வாங்கவா முடியும்?” என்று கேட்டார் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் இன்று விலை கொடுத்து வாங்க முடியும் என்னும் அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டதே!

   முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் முனைவர் பட்டம் பெற பட்ட பாடுகள் என் நினைவில் தோன்றி மறைகின்றன. ஒரு பெரிய பள்ளியில் தலைமையாசியராய்ப் பணியாற்றிக்கொண்டு, நா.பா. எழுதிய நாவல்களை நாள்தோறும் இரவில் கண்விழித்துப் படித்துக் குறிப்பெடுத்து, வாரந்தோறும் ஆய்வு வழிகாட்டி முனைவர் இரா.கா.மாணிக்கம் அவர்களுடன் நெடுநேரம் உரையாடி, அவர் நெறிப்படுத்திய வண்ணம் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, பிழைகள் களைந்து, தட்டச்சு செய்து,  இருநூறு பக்கங்களில் உருவான ஆய்வேட்டை மூன்று படிகள் எடுத்து, ‘அப்பாடாஎன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிப்பதற்கு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.

     மூன்று தேர்வாளர்கள் அவற்றை மதிப்பீடு செய்ய ஓராண்டு ஆயிற்று. பின்னர் புறத் தேர்வாளர் ஒருவர் பொது வாய்மொழித் தேர்வு மூலம் ஆய்வேட்டிலிருந்து ஆளுக்கு ஆள் கேள்வி கேட்கச் செய்து அறிக்கை நல்க, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தந்த இறுதி மதிப்பீட்டை ஆய்ந்த ஆட்சிக்குழுவினர் பட்டம் வழங்கலாம் என ஒப்புதல் வழங், அம் முடிவை இந்து ஆங்கில நாளிதழில் வெளியிட ஆறுமாதங்கள் ஆயிற்று. அடுத்து ஓராண்டு சென்று 19.12.1996 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அன்றைய தமிழக ஆளுநர் டாக்டர் கிருஷ்ண காந்த் கைகளாலே முனைவர் பட்டம் பெற்றேன். என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய தருணம் அது.

 பட்டம் பெற்று இல்லம் திரும்பியதும் முனைவர் அ.கோவிந்தராஜூ என நூறு முறைகள் எழுதிப் பார்த்தேன். முனைப்புடன் படித்து முயன்று பெற்ற பட்டம் என்பதால் எங்கும் பெருமையுடன் குறிப்பிட்டேன். தொலைப்பேசியில் பேசும்போது கூட, ‘முனைவர் கோவிந்தராஜூ பேசுகிறேன்என மகிழ்ச்சிப் பொங்கக் கூறினேன்.
  இந்த மகிழ்ச்சியும் செருக்கும் பணம் கொடுத்து டாக்டர் பட்டம் வாங்குவோருக்கு ஒரு தினையளவு கூட கிடைக்காது.

    முயன்று ஆய்வு செய்தால் ஒருவர் எந்த வயதிலும், எந்தப் பணிச்சூழலிலும் டாக்டர் பட்டத்தை நேர்மையான வழியில் பெறலாம். குமரிஅனந்தன் தம் எண்பத்தைந்தாம் வயதில் ஆய்வேடு தந்து முனைவர் பட்டம் பெற்றாரே! கிடுக்கிப் பிடியானப் பணிகளுக்கிடையில் குற்றவியலில் ஆய்வு செய்து முறையாக முனைவர் பட்டம் பெற்றவர் செ.சைலேந்திரபாபு! ஆய்வுக் கட்டுரை எழுதிதான் முதுமுனைவர் என்னும் பட்டம் பெற்றார் வெ.இறையன்பு! அவ்வளவு ஏன்? நடிகர் சார்லி ‘தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றாரே!

    ஆம் முயன்று பெறுவதே முனைவர் பட்டம் முயலாமல் பெறுவது முட்டாள் பட்டம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

 

 

 

 

 

 

 

 

 

9 comments:

 1. கல்வி தரம் குறைந்து விட்டது... மிகவும் வருத்தமாக உள்ளது...

  ReplyDelete
 2. ஆம் ஐயா தரம் தாழ்ந்து விட்டது முனைவர் பட்டம்.

  தாங்கள் 30 நபர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இல்லை 40 நபர்கள்.
  "முனைவர்" திரு. வடிவேலு.

  வேடிக்கையாக இருக்கிறது.

  ReplyDelete
 3. This is happening not only in Arts and literature but in Science also. I remember one Zollogy professor from the Same Bharathisr University Govindarajulu was writing thesis with fake data and most of his students were part time scholars either working as lecturers I College. It was well known fact that doctorate work has no value to life or society from Indian universities unfortunately. All the good scientists or scholars are driven out of the country as they cannot get a decent job just because they don’t have ministers and MP’s recommendations are living abroad

  ReplyDelete
 4. தி.முருகையன்6 March 2023 at 11:38

  1990 க்கு முன்பு சிறிய கீற்று கொட்டகையில் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் என்ற பெயர் பலகை இருக்கும். மாணவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தேர்வுக்கு மட்டும் வருவார்கள். இது போன்ற நிகழ்வுதான் ஐயா இது. அன்று அப்படி பல ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இன்று முனைவர் பட்டம். பொய்மையை நோக்கி நாடு நகர்ந்துகொண்டுள்ளது வேதனை அளிக்கிறது ஐயா.

  ReplyDelete
 5. முயன்று பெறுவதே முனைவர் பட்டம். ஆனால், இன்றைக்குப் பலரும் எந்த முயற்சியும் இன்றி ஆசையின் காரணமாகக் குறுக்கு வழியில் சென்று டாக்டர் பட்டம் ஒன்றை விலை கொடுத்து வாங்கித் தம் பெயருக்குமுன் போட்டுக் கொள்ளும் வியத்தகு போக்கு அதிகரித்து வருகிறது.//

  ஐயா இது பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. நம் கல்வியின் தரம் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதன் முன்பும் என் நெருகினிய உறவினர் என்று இது பற்றி சொல்லியிருப்பேன் இங்கு கருத்தில்.

  கீதா

  ReplyDelete
 6. பட்டம் பெற்று இல்லம் திரும்பியதும் முனைவர் அ.கோவிந்தராஜூ என நூறு முறைகள் எழுதிப் பார்த்தேன். முனைப்புடன் படித்து முயன்று பெற்ற பட்டம் என்பதால் எங்கும் பெருமையுடன் குறிப்பிட்டேன். தொலைப்பேசியில் பேசும்போது கூட, ‘முனைவர் கோவிந்தராஜூ பேசுகிறேன்’ என மகிழ்ச்சிப் பொங்கக் கூறினேன்.//

  உங்களுக்குச் சாலப் பொருந்தும் ஐயா. உண்மையான பட்டம் நேர்மையாகப் பெற்ற பட்டம் உழைப்பின் வெற்றி.

  //இந்த மகிழ்ச்சியும் செருக்கும் பணம் கொடுத்து டாக்டர் பட்டம் வாங்குவோருக்கு ஒரு தினையளவு கூட கிடைக்காது.//

  கண்டிப்பாக இருக்காது ...நமக்கு ஆனால் அவர்கள் அப்படி இல்லையே ஐயா.....

  இப்போது பொறியியல் பட்டத்திலிருந்து பல பட்டங்கள் இப்படி ஆகிவிட்டன. உழைப்பிற்கு கௌரவம் இல்லாமல் போய்விட்டதாகவே நான் உணர்கிறேன்.

  கீதா

  ReplyDelete
 7. ஆம் திரு சைலேந்திரபாபு சொல்லியிருக்கிறார் தான் முனைவர் பட்டம் பெற்றது பற்றி.

  //ஆம் முயன்று பெறுவதே முனைவர் பட்டம் முயலாமல் பெறுவது முட்டாள் பட்டம்.//

  மிகவும் சரியே

  கீதா

  ReplyDelete
 8. முனைப்புடன் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன் முயன்று பெற்றால் தான் அது முனைவர்.தெளிவு வேண்டும்

  ReplyDelete