Thursday, 6 July 2023

பைந்தமிழ் போற்றும் பண்டரிநாதன்

    சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் பண்டரிநாதன் ஈரோடு மாவட்டம் கோபிபாளையம் என்னும் சிற்றூரில் வேளாண் குடியில் பிறந்து, அங்கு சிறப்புடன் விளங்கும் தூய திரேசாள் தொடக்கப்பள்ளியில் பயின்றவர்; தொடர்ந்து கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில் என்னிடத்தில் தமிழ் படித்தார். பின்னர் எம்.சி.ஏ பட்டம் பெற்றார்.

    பள்ளியில் படித்த காலத்தில் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் காட்டிய பண்டரிநாதன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் தினமணியில் கட்டுரை எழுதும் அளவுக்குத் தன் மொழித்திறனை வளர்த்துக் கொண்டார். அதே தினமணி இதழில்  உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது, சீனாவில் பணிசெய்யும் வாய்ப்புக் கிடைத்தது. 2014ஆம் ஆண்டு சீனாவுக்குச் சென்றதும் முதல் வேலையாகச் சீன நாட்டின் பொது மொழியான மாண்டரின் மொழியைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார். இப்போது சீன வானொலியில் தமிழ் மணக்கும் நிகழ்ச்சிகளைத் தரமுடன் வழங்கி வருகிறார்.

      சீன வானொலியின் மற்றுமொரு அங்கமான ஜப்பானிய மொழிப்பிரிவில் பணியாற்றும் ஜப்பானிய இளம்பெண் சியே கோபாயாஷியுடன் நட்பு மலர்ந்தது. அது பின்னர் கனிந்து காதல் ஆனது. தத்தம் பெற்றோரின் இசைவுக்காகச் சிலகாலம் காத்திருந்தனர். காலம் கனிந்தது. பெற்றோர் முன்னிலையில் இவர்தம் திருமணம் அண்மையில் சீனாவில் எளிமையாக நடைபெற்றது.

     கணவரின் ஊரைப் பார்க்க விரும்பிய புதுமனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க இருவரும் சென்றவாரம் இந்தியா வந்தனர். ஊரில் நடந்த திருமண வரவேற்பில் உறவினர்கள் பங்கேற்று உற்சாகமாய் வாழ்த்தினர்.

 மணமக்கள் இருவரும் கோபிபாளையம் தூய திரேசாள் பள்ளிக்குச் சென்றனர். பள்ளியின் தலைமையாசிரியர் அரசு தாமசு மணமக்களை வரவேற்று ஒரு விழாவே நடத்தினார்.





   


சீன மொழியில் பேசிய மணப்பெண்ணின் பேச்சைப் பண்டரிநாதன் தமிழில் மொழிபெயர்த்தார். பண்டரிநாதன் சொன்ன ஒரு கதையை மணப்பெண் ஜப்பானிய மொழியில் நாடகமாக நடித்துக்காட்டி அசத்தினார். பள்ளி மாணவர்கள் தாமே தயாரித்த பூங்கொத்துகளை அளித்தனர். அரசு தாமசு சந்தன மாலைகளை அணிவித்து, வாழ்த்து மடலையும் அளித்தார். பண்டரிநாதன் தான் படித்த பள்ளியை நன்றி கூரும் வகையில் ரூ.30,000 மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினார். நிறைவாக பண்டரிநாதன் வழங்கிய ஏற்புரையில் என்னையும் குறிப்பிட்டு, நான் அந்தக் காலத்தில் விளக்கிய ஒரு திருக்குறளே (குறள் 913) தன்னை நெறி பிறழாமல் பாதுகாப்பதாகவும் சொன்னார். மொத்தத்தில் அது நினைவில் நிற்கும் விழாவாக அமைந்தது.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

என்று பாடிய செம்புலப்பெயல் நீராரின் சங்கப் பாடலுக்கு இலக்கணமாய்த் திகழும் இளம் மணமக்களை வாழ்த்துவோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

நன்றி: தகவல், படங்கள் அளித்த உதவிய அரசு தாமசு.

4 comments:

  1. மிகச்சிறப்பு. மகிழ்ச்சி. கடல் கடந்து சீனாவில் வாழ்ந்தாலும் கற்ற தமிழும் கற்பித்த ஆசிரியரும் மனதில் இடம் பிடித்தது தமிழுக்குக் கிடைத்த பெருமையா? அல்லது தமிழைக் கற்பித்தவருக்குக் கிடைத்த பெருமையா ?மொத்தத்தில் தமிழுக்கும் தமிழை மனதில் பதியச் செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள். திரு பண்டரிநாதன் அவர்களுக்கும் அவர்களது துணைவியார் திருமதி சியே கோபாயாஷி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கனியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற வரிகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோபி பாளையத்தில் பிறந்திருந்தாலும் ஜப்பான் பெண்ணைச் சீனாவில் வைத்து கரம் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் திரு. பண்டரிநாதன் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாது அவர் தம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தைச் செய்திருப்பது பெற்றோர்களுக்கே கிடைத்த பெருமையாக நான் கருதுகின்றேன்.
    வாழ்க மணமக்கள்
    வாழ்க வளமுடன்.
    முனைவர் ரா.லட்சுமணசிங் இணைப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை
    அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    கரூர் -639005

    ReplyDelete
  2. பெருமதிப்புக்குரிய வழிகாட்டிகளான ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையில் கிடைக்கப் பெற்றவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.  மாணாக்கர்களின் பொறுப்பின்மைகளை, சிறுபிள்ளைத்தனங்களை மன்னித்து , அவர்களை எதிர்காலத்தின் நற்குடிமக்கள் என்றே அணுகிய ஆசிரியர்கள் மனதில்  நினைவில் நீடிக்கிறார்கள்.

    இக்கணத்தில் என் மனது நம்பும் உண்மையில் நின்று இதை ஓங்கிச் சொல்வதற்கு பண்டரிநாதன் போலவே எனக்கும் எவ்விதத் தயக்கமுமில்லை, ‘நீங்கள் என் ஆசிரியர். உங்கள் ஆசிரியமனம் கைதொழத்தக்கது!’.

    எவ்வகையிலும் பிறன் மீது காழ்ப்பையோ கசப்பையோ வளர்க்காத, அந்த நல் உளநிலையையே தன்னைப் பின்தொடர்பவர்களுக்கும் சிந்தனைத் தொடர்ச்சியாய் வழங்குகிற உங்கள் ஆசிரியத்துவம் என்றும் எங்களுக்கான பெருவிளக்கு.

    முன்விசை மனிதர்களென சிலர் இங்கு நின்றமைவதற்கு  அவர்களின் உள்ளெழுகிற நேர்மை , அறம், ஒழுக்கம்  முக்கியக் காரணங்களாகின்றன.  அப்படிப்பட்ட ஓர் அறிவியக்கச்சூழலை எங்களுக்குப் பயிற்றுவித்து அழைத்துச்செல்லும் உங்கள் கனிவுமனத்திற்கு என்றென்றைக்குமான நன்றிகள்.

    தம்மின் தம்மக்கள் அறிவுடைமை,  பண்புடைமை கண்டு இன்புறும் உங்கள் ஆசிரிய உள்ளம் போற்றுதற்குரியது.

    யாதும் ஊரே
    யாவரும் கேளிர் என்று
    தன் நடத்தையால் காட்டும் பைந்தமிழ் இளவல் பண்டரிநாதன்,
    சியே கோபாயாஷி இணையருக்கு எம் வாழ்த்துகள்.

    கண்ணன் கரூர்.

    ReplyDelete
  3. பண்டரிநாதன்14 August 2023 at 16:28

    என் இனிய முன்னாள் தலைமை ஆசிரியருக்கு,
    உங்களின் இக்கட்டுரையை வாசித்தவுடனேயே அதற்கு பதில் எழுத வேண்டுமென ஆர்வம் கொண்டேன். ஆனால், விடுமுறையில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் முழுவதும் மறந்தே விட்டேன். தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பியபோதுதான் உங்களின் கட்டுரை நினைவுக்கு வந்தது. காலம் தாழ்த்தி பதில் அளிப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். 12ஆம் வகுப்பு பிரியா விடை நிகழ்வில் நீங்கள் கூறிய
    “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று”
    என்ற குறள் வாழ்வில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அப்போது கருதியிருக்கவில்லை. பள்ளிக்காலத்தில் இன்னும் கொஞ்சம் தங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் உறவாடி மேலும் கற்றிருக்கலாம் என இப்போது வருந்துகிறேன். உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி இக்கட்டுரை எழுதியது நான் செய்த பெறும் பேறாகவே கருதுகிறேன். மிக மிக நன்றி அய்யா.
    ஒருமுறை உங்களின் தமிழ் குறித்த ஒரு நிகழ்ச்சி, கொடைக்கானல் வானொலியில் ஒலிபரப்பானபோது கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். வணக்க வகுப்பில் கேட்ட அதே இனிமையான குரல், வானொலியில் காற்றலையில் தவழ்ந்து வருவதைக் கேட்பதற்கே ஆனந்தமாக இருந்தது. அதனை விட நீங்கள் கூறிய கருத்து (இப்போது மறந்து விட்டேன்) மிகவும் பயனாகவும் அற்புதமாகவும் இருந்தது. தங்களைப் போன்ற திறமைமிக்க வழிகாட்டிகளை ஊடகங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்போது நினைத்தேன். வலைப்பூ வழியாக உங்களை அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அய்யா, தொடர்ந்து உங்களிடம் இருந்து கற்க ஆசை கொள்கிறேன்.

    இப்படிக்கு
    அன்புள்ள மாணவன் பண்டரிநாதன்.

    ReplyDelete