Sunday, 30 July 2023

முன்னேர் ஆன முத்துலட்சுமி ரெட்டி

                         பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை 

   பெண் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாவம் எனப் பெற்றோர் கருதிய காலம் அது. பத்து வயது முடிவதற்குள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். பகலில் வக்கணையாய் சமைத்துப் போட்டுக் கணவனின் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதும், இரவில் அவன் விரும்பும் போதெல்லாம் காமப்பசியைத் தீர்ப்பதும், ஆண்டு தோறும் குழந்தை பெற்றுத் தருவதும் அவளது வேலை என்றிருந்த காலக்கட்டம் அது.

     இளம் வயதில் கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏற வேண்டும் அல்லது வெள்ளாடை உடுத்தி, மங்கல நிகழ்வு எதிலும் முகம் காட்டாமல் மூலையில் கிடந்து நோக வேண்டும்; பின் சாக வேண்டும்.

     இது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை  என்று எண்ண வேண்டா. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு நிலைதான் இது! சமுதாயத்தில், குறிப்பாக இந்துக்கள் சமுதாயத்தில், மேலும் குறிப்பாக பிராமணர் சமுதாயத்தில்தான் இந்த இழிநிலை வேரூன்றி இருந்தது.

     அந்தக் காலக்கட்டத்தில் பெண் சமுதாயம் அஞ்சி நடுங்கும் ஒரு வழக்கம் இருந்தது. மேல்தட்டு ஆண்களின்  காமநுகர்வுக்கு என்ற வகையில் கோவில்களில் பல இளம்பெண்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஒப்படைக்கப்பட்டனர். கடவுளுக்கே பொறுக்காத அடாவடித்தனமான செயல் அது. அதற்கு தேவதாசி முறை என்று திருப்பெயர் சூட்டியிருந்தது அன்றைய ஆணாதிக்கச் சமுதாயம்.

   இந்தப் பின்னணியில், புதுக்கோட்டையில் ஒரு பிராமணர் குடும்பத்தில் மூத்தப் பெண்ணாகப் பிறந்து கட்டுத் தளைகளை எல்லாம் உடைத்தெறிந்து தானே முயன்று படித்து நாட்டின் முதல் மருத்துவப் பட்டதாரியாக வலம் வந்தவர் முத்துலட்சுமி ரெட்டி.

முத்துலட்சுமி ரெட்டி
(courtesy: internet)

       அவர் ஒரு புரட்சிப் பெண்மணி. அவர்  செய்த புரட்சிகள் பற்பல. பத்து வயது ஆனவுடன் திருமண ஏற்பாடு நடந்தது. அதை முதலில் எதிர்த்து வெற்றிகண்டார். வயதுக்கு வந்ததும் பள்ளிக்கூடம் அனுப்ப மறுத்தனர் பெற்றோர். வீட்டிலிருந்தே படித்துத் தனித் தேர்வராகப் பொதுத்தேர்வு எழுதி மெட்ரிகுலேட் ஆனார்.

   அக்காலத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெண்களுக்கு அனுமதியில்லை. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த குறுநில மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டமான் முத்துலட்சுமியின் விண்ணப்பத்தை ஏற்றுப் புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர அனுமதி அளித்தார். உதவித் தொகையும் அளித்தார். அக்கல்லூரியின் முதல்வரே அதை எதிர்த்தார் என வரலாறு சொல்கிறது. அந்த முதல்வர் வேறு யாருமல்லர்; முத்துலட்சுமியின் அப்பா நாராயணசாமி ஐயர்தான்!      போனால் போகட்டும் என்று ஓராண்டு படித்தவுடன் ஆசிரியப் பயிற்சியில் சேரச் சொன்னார். ஆனால் மகளோ மருத்துவம் படிப்பதில் உறுதியாக இருந்தார்.

    இண்டர்மீடியட் படிப்பு முடிந்ததும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் படிக்க விண்ணப்பித்தார். வெள்ளைக்கார முதல்வர் விதிகளில் திருத்தம் செய்து அனுமதி அளித்தார். மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஒரே பெண் அவர்தான்! சிறந்த முறையில் படித்துத் தேறினார். இது நடந்த ஆண்டு 1912.

   சென்னையில் அவருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. என்றாலும் தன்னைப்போல  மற்றப் பெண்களும் முன்னேற ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிச் செயலில் இறங்கினார். சென்னை மயிலாப்பூரில் ஒளவையார் பெயரில் ‘ஒளவை ஹோம்’ என்னும் விடுதியோடு இணைந்த பள்ளியைத்  தொடங்கினார். ஆதரவற்றப் பெண்களுக்கென முதல் இல்லம் தொடங்கியவரே அவர்தான். அப்பள்ளியில் பயின்று பிறகு மருத்துவம் படித்த சிலரின் உதவியோடு அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையைத் தொடங்கினார்.  அங்கே தன்னுடன் பணியாற்றிய ஒத்த அறிவும் உணர்வும் கொண்ட டாக்டர் சுந்தர ரெட்டி என்னும் இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தெட்டு. அவர்கள் தொடங்கிய நிறுவனங்கள் அனைத்தும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி இன்றும் பயன் தருகின்றன.

      மூன்றாண்டுகள் அன்றைய மெட்ராஸ் இராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். நாட்டில் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆன பெண்மணி அவரே. அவ் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு பெண்கள் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டார். கவிக்குயில் சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.

    பெண்குழந்தைகளின் நலனை முன்னிட்டுத் குழந்தைத்திருமணத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைப் பலத்த எதிர்ப்புக்கிடையே போராடி நிறைவேற்றினார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 நாடு முழுவதும் மகளிர் மன்றங்களை நிறுவி அவர்தம் உரிமைக்காகப் போராடினார். வாக்குரிமை இல்லாமல் பெண்கள் இருப்பதை எண்ணிப் பெரிதும் வருந்தினார்.  புதுதில்லி சென்று நேரு அவர்களைச் சந்தித்து வாக்குவாதம் செய்து பெண்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுத் தந்தார்.

   இவரது புரட்சி மிகுந்த செயல்பாடுகளைக் கண்டு மகிழ்ந்த காந்தியடிகள் அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்துக்கு நான் சென்றபோது அக் கடித நகலைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

      என்னுடைய போராட்ட உணர்வுக்கு உரமாக அமைந்தவர்கள்  தமிழ்ப் பெண்கள் இருவர். அன்று தென் ஆப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மை; இன்று இந்தியாவில்  முத்துலட்சுமிஎன்று பதிவு செய்துள்ளார்.

   முத்துலட்சுமி ரெட்டி  எழுதியுள்ள My Experience as Legislator என்னும் நூலை இம் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும்  படிக்க வேண்டும். 1930ஆம் ஆண்டு வெளியான நூல் அது. https://archive.org/details/in.ernet.dli.2015.102742 என்னும் வலைக்கண்ணில் சொடுக்கித் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

 

(இன்று(30.7.23) முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள்)

   

   

 

5 comments:

  1. போற்றுதலுக்குரியவர்.
    நூலினைத் தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி ஐயா

    ReplyDelete
  2. தேவதாசி முறை பற்றி அவர் சட்டமன்றத்தில் பேசியது சிறப்பான சம்பவம்...

    ReplyDelete
  3. With all her revolutionary achievements, she had inter caste marriage too above all.
    Kudos ..

    ReplyDelete
  4. பெண்குழந்தைகளின் நலனை முன்னிட்டுத் குழந்தைத்திருமணத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைப் பலத்த எதிர்ப்புக்கிடையே போராடி நிறைவேற்றினார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.//

    மகத்தான சாதனை. முத்துலட்சுமி ரெட்டி பற்றி அறிந்திருக்கிறேன்.. இங்கும் தெரிந்து கொண்டேன்

    சாதனைப் பெண்மணி
    கீதா

    ReplyDelete