பூமியை ஆளுவது ஒருபுறம் இருக்கட்டும். நம் சொந்த உறவுகளை ஆளுவதற்கே பொறுமை எனும் பண்பு மிகுதியும் தேவைப்படுகிறது. பொறுமை என்பதற்கு இணையான இன்னொரு சொல் சகிப்புத்தன்மை.
அன்பும் சகிப்புத்தன்மையும் நேர் விகிதத்தில் இருக்கும். ஒருவரிடத்தில் இன்னொருவர்
காட்டும் அன்பு அதிகமானால் சகிப்புத்தன்மையும் அதிகமாகும்; அன்பு குறைந்தால் சகிப்புத்தன்மையும்
குறையும். நம் வீட்டுக் குட்டிக் குழந்தை நம்மைக் கன்னத்தில் அடித்தால் சகித்துக் கொள்கிறோம்
அன்பின் காரணமாக. இரயிலில் பயணம் செய்யும்போது ஒரு குழந்தை நம்மிடத்தில் அப்படி நடந்து
கொண்டால், ‘வளர்ப்பு சரியில்லை’ என்று அதன் பெற்றோரிடத்தில் முகஞ்சுளிப்போம்.
நம் வீட்டுக் குழந்தையிடத்தில் சகிப்புத் தன்மையுடன் இருப்பது இயல்பு. ஆனால்
மற்ற குழந்தையிடத்தும் சகிப்புத்தன்மையோடு இருப்பதுதான் உயர்ந்த பண்பாகும்.
இப்போது நடைமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், ஒரு தாய் வயிற்றில் பிறந்த
மக்களிடத்தில் கூட இந்தச் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. கணவன் மனைவிக்கிடையே சகிப்புத்தன்மை
குறைந்து வருகிறது. பெற்றோர் பிள்ளைகளிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. பிறகு
தூரத்து உறவுகளைச் சொல்ல வேண்டுமா?
குற்றம் பார்த்தால் சுற்றமில்லை என்பது பழமொழி. இதை நாம் முற்றிலும் மறந்துவிட்டோம்.
இப்போது மாற்றவரின் குற்றங்களைக் கண்டு ஊதிப் பெரிதுபடுத்துகின்றோம். கடைசிவரையில்
பிடிவாதமாக இருந்துவிடுகிறோம்.
இன்றைக்கு உட்கார்ந்து இவற்றையெல்லாம் யோசிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
இன்று(நவம்பர் 16) உலக சகிப்புத்தன்மை நாளாம்! Tolerance is the way for reconciliation
என்பது இந்த நாளின் கோட்பாட்டு வாசகம்.
இது குறித்து நம் வள்ளுவர் என்ன சொல்கிறார்?
பொறுமை அல்லது சகிப்புத்தன்மை என்பது பேச்சுவழக்கு.
எழுத்து வழக்கில் பொறை எனப்படும். வள்ளுவர் பொறையுடைமை என ஒரு தனி அதிகாரத்தை அமைத்து
விரிவாகப் பேசுகிறார். இது இல்வாழ்க்கையில் இருப்போர்க்கு அவசியம் என்பதால் இல்லறவியலில்
அமைக்கிறார்.
உறவினரையோ நண்பரையோ நாம் ஏன் தள்ளி வைக்கிறோம்? ஒரு தீய செயலைச் செய்திருப்பார்
அல்லது ஒரு தீய சொல்லை உதிர்த்திருப்பார். எந்தச் சூழலில் அதைச் செய்திருப்பார் என
யோசிக்கமாட்டோம். இப்படி செய்துவிட்டாரே இப்படி சொல்லிவிட்டாரே என்று நாம் கொதித்தெழுவோம்.
“ஒருவர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்வது
நல்லது அதைவிட நல்லது அதை மறப்பது” என்று வள்ளுவர் சொல்கிறார்.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. (குறள் 152)
மேலும் சொல்கிறார்: “உண்ணா நோன்பு நோற்கும்
துறவியரைவிட, பிறர் கூறும் இன்னாச்சொல் பொறுப்பவர் மேலானவர்”
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். (குறள் 160)
சிந்திப்போம். பாரதி சொல்வானே ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று. பழையவற்றை மறந்து உறவையும் நட்பையும் புதுப்பிக்க ஆவன செய்வோம்.
முனைவர் அ.கோவிந்தராஜூ.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று
ReplyDeleteகோபமே பாவத்தின் தாய் தந்தை
தங்களது கூற்றுப்படி கடலினும் பேரதான பொறுமையை கடைபிடித்தல் சாலச்சிறந்தது .
நன்றி ஐயா
ஆகா... அருமை ஐயா...
ReplyDeleteFact sir. Patience is more important in our life.
ReplyDeleteஅருமையான கருத்துகள் கொண்ட பதிவு. அன்பு இருக்கும் இடத்தில் அதுவும் எதிர்பாரா அன்பு இருக்கும் இடத்தில் சகிப்புத்தன்மை கண்டிப்பாக இருக்கும்.
ReplyDeleteசில சமயங்களில் அந்தப் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் சீண்டிப் பார்க்கும் அளவு நிகழ்வுகள் எல்லையை மீறும் போது அதுவும் நியாயமற்றதாக நிகழும் போது கோபம் வரத்தான் செய்கிறது.
அதே பாரதி ரௌத்திரம் பழகு என்றும் சொல்லியிருக்கிறார் இல்லையா..
கீதா
அன்பும் சகிப்புத்தன்மையும் பாரபட்சம் நிறைந்தது எனபதே உண்மை.
ReplyDelete