இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு உள்ளது? பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது!. ஆக உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை நாட்டில் எப்படி உள்ளது? வீட்டில் எப்படி உள்ளது? இந்த இழிநிலைக்கு யார் காரணம்?
ஓர் அறிவார்ந்த விவசாயி சேமித்து வைக்க வேண்டிய விதை நெல்லை அவித்து உண்பானா? அல்லது பின்னாளில் நெல்லாய் விளைந்து பசிநீக்கும் என்பதை உணராமல் நாற்றங்கால் நிலையிலேயே அந்த இளம் நாற்றுகளைப் பிடுங்கி எறிவானா? வயிற்றில் வளர்வது பெண்கரு என அறிந்தால் அதை அழிப்பதும் அல்லது பிறந்ததும் பெண் எனத் தெரிந்தால் அதனைக் கொலை செய்வதும் இன்றும் சமுதாயத்தில் நின்றபாடில்லை. இந்த இழிநிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?
படித்த ஆண்களும் பெண்மையின் அருமை தெரியாமல் திரிகிறார்கள்.
பெண்களே பெண்களைப் போற்றாத அறியாமையை என்னென்பது! பெண்களே பெண்களை இழிவுபடுத்தும் மூடநிலை உள்ளதே! பெண்ணே பெண் குழந்தையை
வெறுக்கின்றாளே! சில தாய்மார்கள் தம் ஆண் குழந்தையைப் போற்றியும் பெண் குழந்தையைத்
தூற்றியும் பேசுவார்கள். இதைத்தான் பாரதி, மாதர் தம்மையே இழிவு செய்யும் மடமை என்றான்.
மேலும்
அனைத்து நிலையிலும் சம உரிமையைத் தராத அரசியலமைப்புச் சட்டங்கள்
பெண்களுக்குத் தடைக்கற்களாக உள்ளன. இப்படிப் பலரும் பலவும் காரணமாகி, பெண்மை என்னும் பெருஞ்செல்வம் அழிந்து வருகிறதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.
பெண்ணுரிமைக்காக முதல் முதலாகக் குரல் கொடுத்த பாரதி, பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று கூவினான்.
மலைவாழை போன்ற கல்வி – அதை வாயார உண்ணுவாய் என் புதல்வி என்று பாடி, சிறுமியரைப் பள்ளிக்கு அனுப்பச் சொன்னார் பாரதிதாசன்.
பெண்ணின் பெருந்தக்க யா உள? என்று போற்றினார் திருவள்ளுவர்.
மங்கயராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
என்றார் கவிமணி தேசிக விநாயகம்.
மனைவி நல வேட்பு நாள்(ஆகஸ்ட் 30) ஒன்றை அறிவித்து மனைவியர்
பெருமையை அவர்தம் கணவர்க்கு உணர்த்தியவர்
வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பிறந்த ஊரைப் பிரிந்து, பெற்றோரைப் பிரிந்து, உடன்பிறந்தாரைப் பிரிந்து புகுந்த வீட்டில் பதியம் போடப்படும் அந்த இளஞ்செடியை புகுந்த வீட்டில் உள்ள அனைவரும் போற்றி வளர்க்க வேண்டும். குறிப்பாக மாமியார் தன்
மருமகளை மறுமகளாக நடத்த வேண்டும்.
பெண் என்பவள் தூய இன்ப ஊற்று! அன்பின் பெருக்கு! அவள்
பிறந்ததும் மழலை பேசி மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறாள். பின்னர்
கல்வியில் சிறந்து களிப்படையச் செய்கிறாள். திருமணத்திற்குப்
பிறகு
மனைவி என்னும் பொறுப்பேற்று மணிவிளக்காய்த் திகழ்கின்றாள். தொடர்ந்து, தாய் என்னும் நிலையில் தியாகத் திருவுருவாய் விளங்குகிறாள். பின்னர் வயது முதிர்ந்து பாட்டியாகி வழிகாட்டுகிறாள், வணங்குவோரையெல்லாம் வாழ்த்துகிறாள்! குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும் அனுபவப் புதையலாய்த் திகழ்கிறாள்.
எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்து; குடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்செல்வத்தைப் போற்றிக் கொண்டாடுவோம். இல்லையேல் ஒரு கட்டத்தில்
திண்டாடுவோம்.
Awesome sir..Thank you for your wonderful words. Everybody should understand the worthy of women..
ReplyDeleteஅருமை ஐயா.
ReplyDeleteஎல்லோரும் ஆண்பிள்ளை வேண்டி
அதற்கு ஆண்டவன் செவி சாய்த்து
பிறப்பதெல்லாம் ஆணாகவே இருந்துவிட்டால்......