Thursday, 30 October 2014

நலம். நலம் அறிய அவா


 அறிவும் ஆற்றலும் மிகுந்த என் அன்பு மகளுக்கு,

        வாழ்க வளமுடன். அம்மாவும் நானும் நலமாக உள்ளோம். இன்று உன் பிறந்த நாள். உனக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உன் அக்கா பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்து நீ பிறந்தாய். வலிக்கிறதே என்று உன் அம்மா சொன்னபோது மாலை நான்கு மணி இருக்கும். அடுத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவ மனையில் சேர்த்தேன். ஒரு பட்டியலைக் கொடுத்து உடனே வாங்கி வருமாறு மருத்துவர் கூற மருந்துக்கடையை நோக்கி விரைந்தேன். இருபது நிமிடங்களில் திரும்பினேன். பெண் குழந்தை பிறந்துள்ளாள் என்று செவிலி ஒருவர் மகிழ்ச்சியோடு கூறினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் நீ தொட்டிலில், அம்மா கட்டிலில்., உன் அக்காவும் நானும் நீ அழுவதையும் அசைவதையும் பார்த்தபடி மகிழ்ச்சியில் திளைத்தோம். கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமின்றி நீ சுகமாகப் பிறந்தாய். அம்மா கொடுத்து வைத்தவள். நானும் அப்படியே. சினிமாவில் வருவதுபோல் அறுவை அரங்கத்திற்கு அருகில் பதட்டத்தோடு நீ என்னைக் காக்க வைக்கவில்லை.

   காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழல்கின்றது! B.E  பட்டம் பெற்ற கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையிலும் சேர்ந்துவிட்டாய். இவள்(ன்) தந்தை என் நோற்றான் என்று வள்ளுவர் கூறுவாரே அப்படிப்பட்ட மகிழ்ச்சியில்தான் நான் உள்ளேன்.

   தொடர்ந்து படிக்கப்போவதாகச் சொன்னாய்., மகிழ்ச்சி. படிப்பு ஒன்றுதான் ஒரு பெண்ணுக்குத் தற்சார்பு(self reliance) நிலையை அளிக்கும். பாடநூல்களோடு மற்ற நல்ல நூல்களையும் படி. இது உன் வாழ்வின் பிற்பகுதியில் மறதி நோய்(Alzheimer’s disease) தாக்காமல் உன்னைக்காக்கும். நீ படிக்கும் பழக்கம் உடையவள். நீ பன்னிரண்டாவது படித்தபோது, மறுநாள் பொதுத்தேர்வே என்றாலும் இரவில்  ஆர்.கே.நாராயணன் நாவலில் பத்துப் பக்கமாவது படித்துவிட்டுதான்  உறங்கச் செல்வாய். வாழ்நாள் முழுவதும் படி. அதுவே உன் பொழுதாக்கமாக(hobby) அமையட்டும்.

     பெரிதினும் பெரிது கேள் என்பார் பாரதியார் தன் புதிய ஆத்திசூடியில். நீயும் பெரிய அளவில் சம்பாதிக்கத் திட்டமிடு. ஆனால் அறவழியில் சம்பாதிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்து. அறத்தான் வருவதே இன்பம் – இதுதான் வள்ளுவர் காட்டும் வழி.

   அடுத்து, நீ பலமுள்ளவள் என்று நினை., சொல்., செயல்படு. ஆணாதிக்கச் சதிகாரர் சிலர் பெண்களை weaker sex என்று முத்திரை குத்திவிட்டார்கள். உண்மையில் பெண்கள்தாம் சக்தி மிகுந்தவர்கள்.  இந்தச் சக்தி மட்டும் இல்லாவிட்டால் ஆண்கள் சிவனே என்று இருக்கவேண்டியதுதான். woman is no longer a weaker sex. In fact, man is the weaker sex.

     உனது நேரத்தில் ஒரு பகுதியை, உனது ஊதியத்தில் ஒரு பகுதியை சமுதாய மேம்பாட்டிற்காகச் செலவிடு. இயலாதவர்களுக்கு உதவி செய்து அவர்களையும் இணைத்துக்கொண்டு வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை(inclusive life)
  வாங்கரி மாத்தாயை நீ அறிவாய். உன்னைவிடச் சிறியவளான மலாலாவை நன்கு அறிவாய். பெண்ணால் சாதிக்க முடியும் என வாழ்ந்துகாட்டியவள் முன்னவள். உலகத்தைத் தன் பக்கம் பார்க்க வைத்துள்ளாள் பின்னவள். இவர்களைப் போல நீயும் சாதிக்க முடியும். உனது வாழ்க்கை பொருளுடையதாய்(wealth) இருந்தால் மட்டும் போதாது., பொருள்(meaning)  உடையதாயும்இருக்கவேண்டும்.

     நிறைவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உன் நாவைக் காத்துக்கொள். எதையும் யாரிடமும் பேசும் முன் சற்று யோசி. சக பயணிகளிடம், முன்பின் தெரியாதவர்களிடம் உன் சொந்த விவரங்களைக் கூறாதே. பேசிய  வார்த்தைகள் கொட்டிய பாலுக்குச் சமம். அதேபோல் வாக்கு வாதம் செய்வது நட்பையும் உறவையும் முறிக்கும். “பெரியவர்களிடம் குறை கண்டால் நான் மவுனமாய் இருந்து விடுவேன்” என்று தன் சத்திய சோதனை நூலில் குறிப்பிடுகிறார் காந்தியடிகள். நீயும் படித்திருப்பாயே. என் அன்பு மகளே! வள்ளுவர்  சொல்வதுபோல் கசடறக் கற்கவும் வேண்டும் கற்றபடி நிற்கவும் வேண்டும்.

    வளரும் பயிருக்குதான் நீர் பாய்ச்ச வேண்டும். அதுபோல உணரக்கூடியவர்களுக்குதான் அறிவுரை நல்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுவார்.(குறள் 718). நீ வளரும் பயிர் என்பதால் சிலவற்றை இம்மடலில் கூறினேன். அவற்றை எண்ணிப்பார்த்துக் கொள்ளுவனக் கொள்ளுக., தள்ளுவனத் தள்ளுக.

உணவும் உறக்கமும் அளவாய் இருக்கட்டும். உற்சாகம் அதிகமாய் இருக்கட்டும்.

என்றும் மாறாத அன்புடன்,
உன் அப்பா

பி.கு:

     நீ விரும்பிய வண்ணம், உன் பிறந்தநாளை முன்னிட்டு இயலாத நூறு முதியவர்களின் ஒருநாள் மதிய உணவிற்காக கரூர் ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில், நீ தந்த பணத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்தி, உரிய பற்றுச்சீட்டைப் பெற்று, கோப்பில் வைத்துள்ளேன்.

No comments:

Post a Comment