Saturday, 22 November 2014

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்



    சிறியோரெல்லாம் சிறியரும் அல்லர் என்பது அதிவீரராம பாண்டியர் எழுதியுள்ள வெற்றிவேற்கை பாடல் வரியாகும். ஆனாலும் பல சமயங்களில் வளர்ந்த குழந்தைகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். சின்னப்பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்று ஒரு பழமொழி எங்கள் திருச்சி மாவட்டத்தில் உண்டு.

   குழந்தைகளை நம்பி ஒரு செயலை ஒப்படைக்கலாம் என்பதற்குச் சான்றாக சென்ற வாரம் குழந்தைகள் தினத்தன்று(நவம்பர் 14) நடந்தது. நினைத்தாலே இனிக்கும் நிகழ்வு அது.

   முதல் நாள் என் அறையில் சற்றே ஓய்வாக இந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தேன். "மே வி கம் இன் சார்" என்று கூறியபடி ஒன்பதாம் வகுப்பு மாணவியர் இருவர் வந்து ஒரு திட்டத்தைக் கூறி அனுமதி கேட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் விதைத்த விதை முளைக்கத் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியில் அனுமதி கொடுத்தேன்.

 அவர்கள் கேட்டவுடன் அனுமதி தந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.
     என் பள்ளிப் பருவ நிகழ்வுகளை இன்றும் என் மனைவி, மகள்களோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வேன். பாவம் இந்தக் காலத்துக் குழந்தைகள். எப்போது பார்த்தாலும் படிப்புதான். சொல்லிக்கொள்ளும் வகையில் பள்ளிப்பருவ நிகழ்வுகள் எதுவும் இருக்காது. என்னுடைய அணுகுமுறை சற்று வித்தியாசமானது. எனது மாணவர்களை கொஞ்சம் குறும்பு செய்யவும் அனுமதிப்பேன். வித்தியாசமாக ஏதேனும் செய்ய முன்வந்தால் அனுமதிப்பேன். பின்னாளில் அவர்கள் நினைத்து மகிழத்தக்கச் செயலாக அமையும் என்பதால் அனுமதித்தேன்.

    சென்ற ஆண்டு கொடுத்து மகிழ்வோம் என்ற திட்டத்தின்படி குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஆறாயிரம் ரூபாய் திரட்டிக்கொடுத்தனர். கரூர் வள்ளலார் கோட்டத்தினர் பள்ளிக்கு வந்து காலை வழிபாட்டுக்கூட்டத்தின்போது முதியோர் மதிய உணவுத்திட்டத்திற்காக அந்நிதியைப் பெற்றுச்சென்றனர். ஆண்டுதோறும் இது தொடர்கிறது.

   மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் அனைவரும் உற்சாகமாக பணியைத் தொடங்கினார்கள். தம் பெற்றோர்களை அசத்தித் தேவையான எல்லாவற்றையும் கொண்டுவந்து குவித்துவிட்டார்கள். அடுப்புக் கூட்டுவது, காய்கறிகளைக் கழுவி நறுக்குவது, அரிசியைக் கழுவி உலையில் போடுவது, மிக்சியில் மசாலா அரைப்பது, தயிர்ப்பச்சடிக்கு பெரிய வெங்காயத்தை உரித்து நறுக்குவது என வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்தார்கள். அவர்கள் செய்து பழகட்டும் என்று எண்ணி நான் ஆசிரியைகள் எவரையும் அங்கே அனுப்பவில்லை. அவ்வப்போது சென்று உற்சாகப்படுத்திவந்தேன்.

     சற்று தூரத்தில் ஆசிரியர்களுக்காக மாணவர்களும், மாணவர்களுக்காக ஆசிரியர்களும் மேடையில் ஆட்டம் ஆடி பட்டையைக் கிளப்பிக்கொணடிருந்தார்கள். அவை எதுவும் இவர்களுடைய கவனத்தைக் கவரவில்லை. கருமமே கண்ணாக இருந்தார்கள். சரியாக 11.30 மணிக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர்ப்பச்சடி, வடை,  மீல்மேக்கர் வருவல் எல்லாம் தயார். சுவைத்துப்பார்த்தேன்.,  படு சுவையாக இருந்தன. எல்லாவற்றையும் ஹாட்பேக்கில் போட்டு எடுத்துக்கொண்டு விரைந்தனர்.

    பள்ளியின் அருகில் உள்ள டிரினிட்டி ஹோம் எனப்படும் மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் இருபது பேர் கொண்ட காப்பகத்திற்குச் சென்று சூடாகப் பரிமாறினார்கள். அந்தக் குழந்தைகள் வயிறார உண்டதைக்கண்டு இந்தக் குழந்தைகள் மகிழ்ந்தார்கள். ஒரு மகத்தான செயலைச் செய்த மன நிறைவோடு தத்தம் வீட்டிலிருந்து கொண்டுவந்த தயிர் சாதத்தைப் சாப்பிட்டுவிட்டு  வழக்கம்போல் தம் பணிகளைத் தொடர்ந்தனர்.

     இரண்டாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்து விளம்பரம் தேடும் பெரிய மனிதர்களைவிட இருபது பேர்களுக்கு ஆரவாரமின்றி உணவளித்த இந்தச் சிறியவர்கள் பத்து மடங்கு மேலானவர்கள். மனிதநேயம் மிகுந்த எனது மாணவியரை மனதில் எண்ணி மகிழ்ந்தபடி நானும் பிற்பகல் பணிகளில் ஈடுபடலானேன்.

  சிறியோர் எல்லாம் சிறியோர் அல்லர். உண்மைதானே?

 பெரியவர்கள் வழி காட்டினால், சிறு பிள்ளைகள் இட்ட வெள்ளாமையும் வீடு வந்து சேரும்.


    

5 comments:

  1. ..//இரண்டாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்து விளம்பரம் தேடும் பெரிய மனிதர்களைவிட இருபது பேர்களுக்கு ஆரவாரமின்றி உணவளித்த இந்தச் சிறியவர்கள் பத்து மடங்கு மேலானவர்கள்.///
    உண்மைதான் நண்பரே
    தங்களின் தளத்திற்கு முதன் முறையாக வந்தேன்
    இனி தொடரவேன்
    நன்றி

    ReplyDelete
  2. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2014/11/blog-post_23.html

    ReplyDelete
  3. ``The roots of education are bitter, but the fruit is sweet``.
    -Aristotle










    ReplyDelete
  4. Most schools teach only good read, this reminds us schools should also teach good deeds

    ReplyDelete
  5. This articles is very excellent
    Dr.R.Lakshmanasingh
    Govt Arts College, Karur

    ReplyDelete