நான் கடந்த 52 ஆண்டுகளாக
பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்றால் நம்புவீர்களா? ஒரு சிறிய கணக்கு.
எனக்கு இப்போது வயது 63. ஏழாம் வயது தொடக்கத்தில்தான் என்னைப் பள்ளியில்
சேர்த்தார்கள். நடுவில் ஐந்து ஆண்டுகள் கல்லூரிப் படிப்பு. 63-(6+5)=52.
இந்த 52 ஆண்டுகளில் என்னென்ன
கோலங்களில் பள்ளிக்கூடம் சென்றேன் என்பதைத் திரும்பிப் பார்க்கிறேன். மாணவனாக 12
ஆண்டுகள்., ஆய்வக உதவியாளராக 2 ஆண்டுகள்., ஆசிரியராக 16 ஆண்டுகள்., தலைமை
ஆசிரியராக 11 ஆண்டுகள்., முதல்வராக 11 ஆண்டுகள்.
இரண்டு மாவட்டங்களில் மூன்று
பள்ளிகளில் பள்ளிப் படிப்பு., ஐந்து மாவட்டங்களில் ஐந்து பள்ளிகளில் பணி.
இத்தனை அனுபவம் உள்ள நான்
அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூடத்தையாவது சென்று பார்க்காமல் பேசாமல் நாடு
திரும்பினால் எனது பயணம் முழுமை அடையாது என்பதை நன்றாக அறிவேன். மேலும் அமெரிக்கப்
பள்ளியைப் பற்றிப் பேசுவதாக நான் இப்போது பணியாற்றும் கரூர் லார்ட்ஸ் பார்க்
பள்ளியின் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உறுதி கூறி வந்தேன்.
டேலஸ் வந்தவுடன் ஒரு பள்ளிக்குச் செல்ல வேண்டும்
என்னும் ஆசையை என் மருமகனிடம் தெரிவித்தேன். மாமா சொல்லைத் தட்டாத மருமகன்தான்.
ஆனாலும் அவரால் ஏற்பாடு செய்யமுடியவில்லை. காரணம் நான் இங்கு வந்து இறங்கியபோது
பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்கிவிட்டது.
ஆனால் ஜூன் இரண்டாம் வாரத்தில்
நான் நியுயார்க் சென்றிருந்தபோது எனது ஆசை நிறைவேறியது. அங்கே ஜூன் மூன்றாம் வாரத்தில்தான்
கோடை விடுமுறை தொடங்குவதாக இருந்தது. அங்கே என் சகலையின் பேத்தி ஓர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில்
படிக்கிறாள். அந்தப் பள்ளியைப் பார்வையிடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
Two Principals with one mission |
George A.Jacson Elementary School என்பது அப்பள்ளியின்
பெயர். அரசுப் பள்ளிதான். Benny D’ Aquila என்னும் பெயருடைய
ஆண்மகன்தான் அப் பள்ளியின் முதல்வர். அடிப்படையில் அவர் ஒரு பொறியாளர். ஆனால் ஆர்வத்தின்
காரணமாக ஆங்கிலத்தில் முதுகலைப்படிப்பும் ஆசிரியப் பயிற்சியும் முடித்து
ஆசிரியரானவர்.
“என் மகள்
தியா இப்பள்ளியில் படிக்கிறாள். இவர் எனது மாமா, இந்தியாவில் பள்ளி முதல்வராக
உள்ளார்., இங்கே முதல்வரைச் சந்திக்க விரும்புகிறார். முடியுமா?” என்று பள்ளி
அலுவலக மேலாளரிடம் கேட்டார் பூவேந்திரன். “முயற்சி செய்கிறேன்” எனச் சொன்ன அந்தப்
பெண்மணி கையிலிருந்த சில கோப்புகளுடன் முதல்வர் அறைக்குள் நுழைந்தாள்.
A Government School |
நாங்கள்
வரவேற்புக் கூடத்தில் அமர்ந்தோம். என்னைப் பொருத்தவரையில் நான் யாரையும்
காக்கவைப்பதில்லை. உடனுக்குடன் அழைத்துப் பேசி அனுப்புவது என் வழக்கம். நம் ஊரில்
பெரிய அதிகாரிகள் சும்மா நாளேட்டைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால்
காத்திருப்பவரை உள்ளே அழைத்துப் பேசமாட்டார்கள்.
ஒருமுறை
பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைப்பதற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
டாக்டர் பொன்னவைக்கோ அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு வைக்கப்பட்டிருந்த
துண்டுச் சீட்டில் என் பெயர் மற்றும் விவரத்தை எழுதிக் கொடுத்தனுப்பினேன். அடுத்த
விநாடியே என்னை அழைத்து, உள்ளே இருந்த பதிவாளரிடம் பின்னர் பேசுவதாகச் சொல்லி
அனுப்பிவிட்டு, என்னிடம் பேசினார். பள்ளி விழாவில் பங்கேற்க ஒப்புதலும் தந்தார்.,
அவர் எழுதிய ஒரு நூலையும் தந்தார். இன்றுவரை எங்கள் நட்பு தொடர்கிறது. அண்மையில் சென்னை
வானதி பதிப்பகம் வெளியிட்ட, எனது கவிதைத்தேன் என்னும் நூலுக்கு அருமையான
அணிந்துரை அளித்தார்.
அணிந்துரை அளித்தார்.
இவர்
எப்படியோ என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்,
“ஹலோ, நீங்கள் இப்போதே முதல்வரைச் சந்திக்கலாம். உங்களுக்காக பதினைந்து
நிமிடம் நேரம் ஒதுக்கியுள்ளார்” என்றார் வெளியில் வந்த அப் பெண்மணி. வியப்பு மேலிட
மெல்ல கதவைத் திறந்து உள்ளே சென்றோம்.
அவருடைய இருக்கையிலிருந்து எழுந்து நின்று
கைகுலுக்கி வரவேற்றார். நல்ல விசாலமான அறை. சுவர்களைக் குழந்தைகள் வரைந்த
ஓவியங்கள் அலங்கரித்தன.
தொடர்ந்து இரு நாடுகளிலும் நிலவும் பள்ளி நடைமுறைகள்
குறித்துப் பேசினோம்.
புகழ்வாய்ந்த
இப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க கடும் போட்டி ஏதுமில்லை. காரணம் அரசுப்
பள்ளிகளில் உள்ளூர் குழந்தைகள் மட்டுமே சேர முடியும். சேர்க்கைக்கு வசிப்பிடச்
சான்று கட்டாயம் தேவை. பள்ளிப் பேருந்து மூன்று மைல் சுற்றளவில் மட்டும் இயங்கும்.
இதனால் எல்லா அரசுப் பள்ளிகளிலும் குறைந்தது முந்நூறு குழந்தைகள் படிக்கின்றன.
தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள்தாம் அதிகம். 87 விழுக்காடு குழந்தைகள் அரசுப்
பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் முற்றிலும் இலவசக் கல்விதான். பள்ளிப்
பேருந்துக்கும் கட்டணம் இல்லை. ஏழைக் குழந்தைகளுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில்
மதிய உணவு கிடைக்கும்., சில பள்ளிகளில் இலவசமாகவும் கிடைக்கிறது. சீருடை, பாடப்புத்தகம் –இவற்றுக்குக் கட்டணம்
உண்டு.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 71
விழுக்காட்டினர் பெண்களே. பள்ளிப் பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்களிலும்
பெரும்பான்மையினர் பெண்கள் என்பது வியப்புக்குரிய விஷயமாகும்.
lady driver of a school bus |
பரந்த விளையாட்டு
மைதானமும் தரமான விளையாட்டுக் கருவிகளும் ஒவ்வொரு பள்ளியிலும் உண்டு., ஏனோ
கிரிக்கெட் மட்டும் இல்லை. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றபோது, “உங்கள்
கிரிக்கெட்டை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு வந்தார்களோ என்னவோ!
play while you play |
ஒவ்வொரு
பள்ளியிலும் அன்னையர் குழுவும் பெற்றோர் ஆசிரியர் அமைப்பும் பெயரளவிற்கு இல்லாமல்
சிறப்பாகச் செயல்படுகின்றன.
பெற்றோர்களுக்கு
நிறைய உரிமைகள் தரப் படுகின்றன. அவர்கள் விரும்பினால் ஆசிரியர் பாடம் நடத்துவதை வகுப்பறையில்
அமர்ந்து பார்க்கலாம். ஆசிரியரின் கல்வித்தகுதியைச் சரிபார்க்கலாம்! பள்ளி
ஆவணங்களைப் பார்வையிடலாம்.
ஐந்து
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான Pre K.G வகுப்புகளைத் தனியார் நிறுவனங்கள் மட்டும் நடத்துகின்றன.
அங்கே கட்டணம் மிக மிக அதிகம்.
அரசுப்
பள்ளிகளில் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகள் மட்டும் சேர இயலும். Kinder Garten என்பது ஓராண்டு நுழைவு
நிலை வகுப்பாகும். பிறகு முதல் கிரேடு, இரண்டாம் கிரேடு எனத் தொடரும். இங்கும்
எட்டாம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க No Child Left Behind(NCLB) என்னும் சட்டம் உண்டு.
நம் நாட்டில் இருப்பது போல தொடர்ச்சியான முழு மதிப்பீட்டுத் திட்டம்
செயல்படுகிறது. ஆசிரியர்கள் கொடுக்கும் திட்டப் பணிகளை(Projects) மாணவர்களே செய்கின்றனர். இப்போதுள்ள ஐம்பது நட்சத்திர தேசியக் கொடியே ஒரு
மாணவனின் திட்டப் பணிதானாம்!
பாடத்திட்டம்,
பாடப் புத்தகம், தேர்வுத் திட்டம், வேலை நாள் போன்றவற்றை உருவாக்க கல்வி மாவட்ட அளவிலான அதிகார அமைப்பு உள்ளது.
அனுபவம் வாய்ந்த முதல்வர் குழு, கல்வி மாவட்டப் பள்ளிகள் கண்காணிப்பாளர் தலைமையில்
இவற்றைத் தயாரிக்கிறது. மாநிலம் தழுவிய
பாடப்புத்தகம், தேர்வுத் திட்டம் என எதுவுமில்லை.
சாதி, மதம், நாடு, மொழி, நிறம், பாலினம் என எந்த வேறுபாட்டுக்கும் இடமில்லாமல் Public School என அழைக்கப்படும் அரசுப் பள்ளிகள் தரமான கல்வியைக் கட்டணம் இல்லாமல் வழங்குகின்றன. இப் பள்ளிகளுடன் போட்டியிட முடியாமல் தனியார் பள்ளிகள் தவிக்கின்றன. அரசுப் பள்ளிக்கு நிகரான மாற்றுப் பள்ளி என்று தனியார் பள்ளியினர் விளம்பரம் கொடுப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.
நாங்கள்
விடைபெற்றுக்கொள்ளும் நேரம் நெருங்கியது.
அமெரிக்கநாட்டு அரசு தொடக்கப் பள்ளிகளின் தர வரிசைப் பட்டியலில் அவரது
பள்ளி முதலிடத்தில் இருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
“என் மனமார்ந்த வாழ்த்துகள். இது எப்படி
சாத்தியமாயிற்று?” என்று கேட்டேன்.
“எனக்கு
வாய்த்த நல்ல குழந்தைகள், நல்ல ஆசிரியர்கள், நல்ல பெற்றோர்கள்” எனச் சொல்லி
மகிழ்ச்சி பொங்க சிரித்தார்.
“மிகச் சரியாகச் சொன்னீர்கள்” என்று கூறி விடை
பெற்றேன்.
Dr A Govindaraju from USA
Dr A Govindaraju from USA
படிக்கப் படிக்கப் பெருமூச்சுதான் வருகிறது ஐயா
ReplyDeleteநன்றி
அனைத்தும் சிறப்பாக அமைந்தால் இனிமையே...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா...
Good Country, good school, good parents, good principal, good teachers and good students. So, good, good, good,,,,
ReplyDeleteGood Country, good school, good parents, good principal, good teachers and good students. So, good, good, good,,,,
ReplyDeleteஇன்றைய தினமணியில் 24.07.15
ReplyDeleteஇக்கட்டுரை வெளிவந்துள்ளது.
அருமை ஐயா. ......
Two Principals with one mission
ReplyDeleteto make others to listen
No doubt it is a wonderful lesson
Every article of you is a great fussion
For USA it is a good session.
your poetical expression is really commendable
Deleteyour poetical expression is really commendable
Deleteபடிக்க பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வளமான பின்னூட்டத்திற்கும் நன்றி
Delete