நிகழ் காலத்தில் வாழுங்கள் என்று
சொன்னார் நம் நாட்டின் சுவாமி சச்சிதானந்தா அவர்கள். அவர் எழுதியுள்ளThe Golden Present என்னும் நூலை அவசியம்
படிக்க வேண்டும். அவர் சொன்னதை நாம் கேட்டோமா? இப்படி எல்லாம் ஆகிவிட்டதே என்று
அதையே நினைத்து இறந்த காலத்தில் வாழ்கிறோம் அல்லது கற்பனையாகக் கோட்டைக் கட்டி
எதிர்காலத்தில் வாழ்கிறோம்.
நிகழ் காலத்தில் வாழும்
நுணுக்கத்தை அறிந்தவர்கள் அமெரிக்கர்கள். அடுத்தத் தலைமுறைக்கு என்று சொத்து
சேர்க்கும் வழக்கம் இவர்களிடத்தில் இல்லை. உழைத்துச் சம்பாதிப்பது, நன்றாக செலவு
செய்வது, மகிழ்ச்சியாய் இருப்பது என்பதுதான் அவர்களுடைய எளிமையான சூத்திரம்.
வாரத்தில் ஐந்து நாள் நேர்மையாக,
கடுமையாக உழைப்பதும், சனி ஞாயிறுகளில் உறவும் நட்பும் சூழ கொண்டாடி மகிழ்வதும்
இவர்களுடைய வாழ்வியல் முறையாகும்.
A busiest man finds time for anything and everything என்னும் ஆங்கிலப்
பொன்மொழிக்கேற்ப இவர்கள் பல்வேறு பயனுள்ள செயல்களில் ஈடுபடுகிறார்கள். பொது
நூலகத்திற்கு மனைவி மக்களோடு செல்வதை இங்கு பார்க்கமுடியும். அவ்வாறே
உடற்பயிற்சிக் கூடத்திற்கும் செல்கிறார்கள். உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்துண்ண
அழைக்கும்போது மறுக்காமல் செல்கின்றனர். வார இறுதியில் ஐந்நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சுற்றுலாத்
தலங்களுக்குக் கூட குடும்பத்தோடு காரில் செல்கின்றனர்.
திருமண
நாள், பிறந்த நாள், சமயம் சார்ந்த பண்டிகைகள் என எல்லாவற்றையும் சேர்ந்து கொண்டாடி
மகிழ்கிறார்கள்.
இத்தகைய
வாழ்வியல் நடைமுறைகளை நம்மவரும் இங்கே பின்பற்றுகின்றனர். நாடு விட்டு நாடு வந்து
தனித்து இருந்தால் வாழ்வில் சோர்வு தட்டிவிடும். மேலும் உறவினர்களையும்
நண்பர்களையும் சந்தித்து அளவளாவும்போது ஏற்படும் உற்சாகமும் உவகையும் வேறு எவற்றிலும்
கிடைக்காது. இத்தகைய குடும்ப சந்திப்புகளின்போது குழந்தைகள் கூடி விளையாடும் அழகே
அழகு.
நான்
அமெரிக்கா வந்து இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில் பல்வேறு குடும்ப
சந்திப்புகளில் பங்கேற்று மகிழ்ந்ததை அசைப்போட்டுப் பார்க்கிறேன். உறவினர்களின்
உபசரிப்புகளில் மகிழ்ந்துபோன தருணங்கள் மட்டுமன்றி, நான் நெகிழ்ந்துபோன
தருணங்களும் இருந்தன. பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு ஏற்ப அசைவ உணவு
வகைகளைச் சமைத்திருந்தாலும் எங்களுக்குப் பிடித்த சுவை மிகுந்த சைவ உணவு வகைகள்
நிச்சயமாக இருக்கும்.
இந்தச்
சந்திப்புகளின் பல கூறுகள் பாராட்டும்படியாக உள்ளன. நமது பாரம்பரிய விருந்தோம்பல்
பண்பின் வெளிப்பாடுகள்தாம் இவை. சுழற்சி
முறையில் வெவ்வேறு இல்லங்களில் பெரும்பாலும் வார இறுதிகளில் நடைபெறுகின்றன. விருந்து நடைபெறும் இல்லங்களில்
ஆடவர்கள் வீட்டின் பின்புறத்தில் இளங்கோழிகளைப் பக்குவப்படுத்தி
(marinating) அளவான தீயில் வாட்டி எடுப்பதில் (Grilling) கில்லாடிகளாக
இருக்கிறார்கள். பெண்கள் யாரும் இப் பணியைச் செய்வது இல்லை!
விருந்துக்கு
வருவோர் சில சமயம் ஏதேனும் விசேடமான உணவைச் சமைத்துக் கொண்டுவருவதும் உண்டு. என்
மனைவி சாந்தி ஒப்பிட்டு எனப்படும் இனிப்பும், ஓமப்பொடி என்னும் காரமும் செய்வதில்
வல்லவள். அவளுக்கும் அவளது ஒப்பிட்டுக்கும் ஓமப்பொடிக்கும் ஒப்பற்ற வரவேற்பு
இருக்கும். என் மருமகனும் சமையற் கலையில்
வல்லவர். அவர் செய்யும் பெப்பர் சிக்கன் நொடியில் பறந்து போகும். அப்படி ஒரு சுவை!
விருந்து முடிந்து மீதமாகும் உணவு வகைகளை
வீணடிப்பதில்லை. மாறாக விரும்புவோர் வேண்டும் அளவு எடுத்துச் சென்று மறு நாள்
பயன்படுத்துவது இயல்பான நிகழ்வாக உள்ளது. எல்லோருடைய இல்லத்திலும் உறைகுளிர்ப்
பெட்டி
(Freezers) இருக்கும். அதில் வைத்து விட்டால் நான்கு
நாள்களுக்குக் கூட கெடாமல் இருக்கும். வேண்டியபோது எடுத்து சூடாக்கியில்(Oven) வைத்துச் சூடாக்கி சுவை குன்றாமல் சாப்பிடுவர்.
ஒரு
சந்திப்பு என்பது மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் நடக்கும். சேர்ந்து உண்பது
கொஞ்ச நேரம்தான் என்றாலும், மனம் விட்டுப்
பேசி மகிழ்வது, கூடி விளையாடுவது போன்றவை அதிக நேரம் நீடிக்கும். இத்தகைய
சந்திப்புகளின்போது அரிய நிகழ்வாக, இலை மறை காயாக,ஆண்மக்கள் சேர்ந்து அளவாக பியர்
அல்லது வொய்ன் அருந்துவதும் உண்டு. அமெரிக்கக் குடும்பங்களில் பெண்களும் சேர்ந்து
அருந்துவர். இதை ஆங்கிலத்தில்
social drinking என்று
குறிப்பிடுகிறார்கள்.
நம் சங்க இலக்கியத்தில் உண்டாட்டு
எனச் சொல்லப்படுவதை இவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள். போர் முடிந்து
விழுப்புண்களுடன் வீடு திரும்பும் வீர்ர்களுக்கு உண்டாட்டு நடத்துவது சங்க கால
வழக்கமாகும். உண்டாட்டு என்பது தனித் துறையாக அமைந்திருப்பது சிந்திக்கத்
தக்கதாகும். திருவள்ளுவர் தமது பாத்துண்டல் என்று
குறிப்பிடுவார். ஆனால், இந்த விஷயத்தில் யாரும் யாரையும் கட்டாயப்
படுத்தமாட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் காரணமாக எந்தச் சங்கடமும்
இல்லாமல் என்னால் மகிழ்ச்சியாகப் பங்கேற்க முடிந்தது. உணவு விஷயமும் இப்படிதான்.
என் மனைவி சுத்த சைவம். அசைவ உணவை சும்மா சிறிது சுவைத்துப் பார்க்கும்படிக் கூட
யாரும் சொன்னதில்லை. மற்றவரின் சுதந்திரத்தை அப்படி மதிக்கிறார்கள்!
நமது ஊரில்
படித்த இரண்டு தமிழர்கள் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வார்கள். ஆனால்
பணியிடங்களில் ஆங்கிலத்தில் அமெரிக்கர்களே வியக்கும் வண்ணம் பேசும் தமிழர்கள்
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தமிழில் மட்டும் பேசி அசத்துகிறார்கள். இல்லச்
சந்திப்புகளில் காதில் பாயும் தேனாக தமிழ் ஒங்கி ஒலிக்கிறது. இதற்காக இவர்கள்
அனைவரையும் வரிசையாக நிற்கச் செய்து அவர்கள் பாதம் பணிந்து வணங்கலாம் எனத்
தோன்றுகிறது.
சுருங்கச்
சொன்னால், இங்கே வாழும் நம்மவர்கள் உடையில் அமெரிக்கர்களாகவும் உணர்வில்
தமிழர்களாகவும் வாழ்கிறார்கள்.
உண்மையில் பாராட்டத் தக்கவர்கள்.
DR A GOVINDARAJU from USA.
இங்கே வாழும் நம்மவர்கள் உடையில் அமெரிக்கர்களாகவும் உணர்வில் தமிழர்களாகவும் வாழ்கிறார்கள்.
ReplyDeleteபடிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா
நன்றி
போற்றப்பட வேண்டியவர்கள் ஐயா...
ReplyDeleteகடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழன் தமிழன் தானே. அவனது உடைகள் மாறலாம். உள்ளங்கள் மாறாது. பிழைப்பை நாடிச் சென்றாலும் பண்பாட்டை மறவாத அவர்களது மொழிப்பற்று போற்றுதலுக்குரியது. வாழ்க உலகத் தமிழர்கள். ஓங்குக அவர்கள் புகழ்.
ReplyDeleteஇந்த நிமிடம் இனியது என்று
ReplyDeleteஇனிமையாக வாழச்சொல்கிறார்
இனியன் ஐயா...நன்றி.
இனிய கட்டுரை. அருமை. வெகு சிறப்பு.
Very informative.
ReplyDeleteVery informative.
ReplyDelete