Monday, 6 July 2015

எங்கெங்கு காணினும் எந்திரன்

      எல்லாம் இயந்திர மயமாகி வரும் காலம் இது. இதற்குக் காரணங்கள் பலவாக உள்ளன. இயந்திரங்களுக்கும், கணினிகளுக்கும், ரோபோக்களுக்கும் இரவு பகல் வேறுபாடு கிடையாது. அவை எப்பொழுதும் ஓய்வின்றி ஒரே மாதிரியாகச் செயல்படும் தன்மையுடையன. அவை இலஞ்சம் கேட்பதில்லை. ஊதிய உயர்வு, சங்கம் போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லை.


    Gated community என்று சொல்லக்கூடிய அடுக்குமனைகள் அமெரிக்காவில் அதிகமாக உள்ளன. அந்த வளாக வாயிலில் பெரிய இரும்பு கேட்டுகள் இருக்கின்றன. ஆனால் வாயில் காப்பாளர் இருக்கமாட்டார். வரும் வாகனங்களை சென்சார் மூலம் உணர்ந்து கொண்டு,  இரு பெரிய கேட்டுகளும் மெல்லப் பக்கவாட்டில் நகர்ந்து வழி விடுகின்றன. வாகனம் கடந்ததும் மீண்டும் தாமாக மூடிக் கொள்கின்றன. அதுவும் குடியிருப்போர் கார்களுக்கு மட்டுமே வழிவிடும். விருந்தினர் யாராவது காரில் வருவதாக இருந்தால் முன்னதாக வாயிலுக்குரிய இரகசிய எண்களைச் சொல்லிவிட வேண்டும். வாயில்முன் சற்று தூரத்தில் காரை நிறுத்தி, ஓட்டுநர் இருக்கையில் இருந்தவாறு இடது கையை வெளியில் நீட்டி, கைக்கெட்டும் நிலையில் உள்ள விசைப்பலகையில் அந்த இரகசிய எண்களை அழுத்தினால் வாயில் கதவுகள் திறக்கும். நடந்து செல்வோரும் பெரிய வாயிலை ஒட்டியுள்ள சிறிய வாயிலில் உள்ள ஒற்றைக் கதவை இரகசிய எண்ணை அழுத்தித் திறக்கலாம்.

    காலை நடைப் பயிற்சியின்போது ஒரு குடியிருப்பு வளாகத்தைக் கவனித்தேன். பெரிய வாயில் மட்டுமே இருந்தது. சிறிய வாயில் இல்லை. பெரிய வாயிலுக்கு இரகசிய எண்ணை அழுத்திச் செல்லும் வசதியும் இல்லை. விசாரித்ததில் தெரிந்தது அக் குடியிருப்பில் வசிப்போர் காரில் இருந்தபடியே ரிமோட் மூலம் கேட்டைத் திறக்கலாமாம்! நடந்து செல்வோர் அவ் வளாகத்திற்குள் செல்லவே முடியாது போலும். காரில்தான் செல்ல வேண்டுமோ?


  சரி இதுதான் இப்படி என்றால், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ஆள் யாரும் இல்லை. நாமே காரிலிருந்து இறங்கி வந்து, பெட்ரோல் தரும் இயந்திரத்தில் வேண்டும் அளவைப் பதிவுசெய்து, கிரடிட் கார்டை உரச வேண்டும். பிறகு நாமே டெலிவரி ஹோஸ் பைப்பை எடுத்து பெட்ரோலை நிரப்ப வேண்டும். அப்புறம் என்ன? உரிய இடத்தில் ஹோசை மாட்டிவிட்டுப் புறப்பட வேண்டியதுதான்.


    இதைவிட  மோசம் டோல் கேட்டுகள். கரூரிலிருந்து பெங்களூரு போவதற்குள் டோல் கேட்டு தொல்லை தாங்க முடியாது. பத்துக்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் நின்று சலிக்க வேண்டும். சில்லரைப் பிரச்சனை வேறு. இங்கே அமெரிக்காவில் டோல் கேட்டுகளில்  காசு வாங்கிப் போட்டுக்கொண்டு பில் கொடுக்க எந்த ஆளும் இல்லை. காரின் முன்புறம் ஓட்டுநரின் தலைக்குநேர் எதிரில் ஒரு சென்சார் இருக்கும். கார் டோல் கேட்டை நெருங்கும்போதே காரின் பதிவு எண், அதன் படம் ஆகியவற்றைப் பதிவு செய்து, தடுப்பானையும் உயர்த்தி நொடியில் வழிவிடும்  அந்த இயந்திரம். அடுத்த நிமிடம் நம் வங்கிக் கணக்கிலிருந்து அறுபது டாலர் கோவிந்தா என்ற செய்தி நம் அலைப்பேசிக்கு வந்துவிடும்!

     போக வேண்டிய இடம் வந்ததும் உரிய இடத்தில் காரை பார்க்கிங் செய்தார் மருமகன். அங்கும் காசு வசூலிக்க ஆள் இல்லை! அங்குள்ள இயந்திரத்தில் சில தகவல்களப் போட்டு, அதன் இடுப்பில் கிரடிட் கார்டை மெல்ல உரசியதும் மொபைல் ஒலித்தது. கார் எவ்வளவு நேரம் அங்கே நிற்கும் என்ற விவரத்தைச் சொன்னார்., வேலை முடிந்தது. இரண்டு மணி நேரம் மட்டுமே அங்கே காரை பார்க் செய்ய முடியும். அதற்கு மேல் ஒரு நிமிடம் ஆனாலும் போலீஸ் வாகனம் வந்து காரை இழுத்துச் சென்றுவிடும்.

     அருகிலிருந்த ஒரு பெரிய மாலுக்குப் போனால் அங்கும் நாம் வாங்கிய பொருள்களை எடை போடவோ பில் போடவோ யாரும் இல்லை. என் மகள் அவள் எடுத்தப் பொருள்களை ஒவ்வொன்றாக கணினிக்குக் காட்டினாள்., அது பொருள்கள் மீதிருந்த  பார்கோடை வாசித்தது. கிரடிட் கார்டை உரசினாள்., பில் எட்டிப் பார்த்தது., அதையும் பொருள்களையும் எடுத்துக் கொண்டாள்.

      அந்த மாலின் ஒரு பகுதியாய் இருந்த உணவகப் பிரிவிலும் ஆள் இல்லை. ஒரு ப்ளாஸ்டிக் தட்டை எடுத்து அங்கே சூடாக உள்ள உணவு வகைகளில் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். அருகிலுள்ள கணினியின் மடியில் வைத்து கிரடிட் கார்டை உரச வேண்டும். பிறகு தட்டை எடுத்துச் சென்று அருகில் கிடக்கும் மேஜை மீது வைத்துச் சாப்பிட வேண்டியதுதான்! நல்ல வேளை ஹோட்டல்களில் இம் முறை இல்லை.

   உண்டு முடித்துப் பூங்காவிற்குச் சென்றபோது “ அப்பா, இவை வாடகை சைக்கிள்கள். நீங்கள் எடுத்து ஓட்டலாம்” என்றாள் என் மகள். ஆனால் சைக்கிள்களின் உரிமையாளர் அங்கு இல்லை. அங்கும் ஒரு சின்ன இயந்திரம்., அதில் கிரடிட் கார்டை உரசியதும் ஒரு சைக்கிளின் பூட்டு திறந்து கொண்டது. ஒரு மணி நேரம் ஓட்டிவிட்டி முன் இருந்த இடத்தில் நிறுத்தினால் தானே பூட்டிக் கொள்ளும்! கிரடிட் கார்டு என்பது இங்குள்ள மனிதர்களுக்கு ஆறாவது விரலாகும்.


   இவை கிடக்கட்டும். இங்குள்ள A T M இயந்திரங்களுக்கும் பாதுகாவலர் யாரும் இருப்பதில்லை. அவ்வளவு ஏன்? பெரிய பெரிய மருத்துவ மனைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றிற்குக் கூட காப்பாளர் இல்லை. கண்ணுக்கு எளிதில் தெரியாத காமிராக்கள்தாம் காவல் காக்கின்றன.

    எல்லாம் சரி. மகப்பேறு காலத்தை எதிர்நோக்கியுள்ள ஒரு பெண் மகப்பேறு மருத்துவ மனைக்குச் சென்றால் அங்காவது ஆள்கள் இருப்பார்களா?

    இப்படி இயந்திரமயம் ஆதலில் நன்மைதானே என நினைக்கலாம். தீமைகளும் உண்டு. தானியங்கி கதவுகள், நகரும் படிகள், மின் தூக்கிகள் இவற்றில் சிக்கித் தவித்தோர் பலர். கிரடிட் கார்டை உரசும்போது உரிய தொகையைவிட அதிகமாக இழந்தோரும் சிலர்.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றார் கணியன் பூங்குன்றனார். அதே சமயம்  தீதும் நன்றும் பிற (அதாவது இயந்திரங்கள் போன்றவை) தர வரும் என்பதை இலை மறை காயாக உணர்த்திவிட்டார்.


    ஆக, வருங்காலத்தில் நாம் இயந்திரங்களின் பிடியில் சிக்கிக் கொள்வோம் என்பது மட்டும் உண்மை.

Dr A Govindaraju from USA

3 comments:

  1. அமெரிக்காவில் அனைத்துமே இய்ந்திர மயம்
    அனாலும் வேலையில்லா திண்டாட்டமும் தொடர்வதாகத்தானே தெரிகிறது
    இயந்திரங்களுக்குப் பதில் மனிதர்களைப் பயன்படுத்திக் கொண்டால்
    வேலையில்லா திண்டாட்டம் குறையும்
    நன்றி ஐயா

    ReplyDelete
  2. நம் நாட்டிற்கு இவைகள் வராமல் இருப்பதே நல்லது...

    ReplyDelete
  3. எந்திரங்களின் வருகையால் மனித உழைப்பு மங்கிவிட்டது. இனி எந்திரங்கள் இல்லை என்றால் வாழ இயலாது. பணம் என்ற சொல்லை மறந்து ரொம்ப நாளாகிவிட்டது. வீட்டில் உள்ளோர் வெளியில் செல்பவர்களிடம் கார்டை மறக்காமல் எடுத்துக்கொள் எனக் கூறுகின்றனர். அனைத்து அலுவலகங்களிலும் பணத்தைக் கைகளால் கையாளுவதில்லை. எப்படி மறைபொருளாக பணம் வங்கியின் வாயிலாகச் செல்கிறதோ? அதேபோல் பணமும் கண்ணுக்குப் புலப்படாமல் மாயப்பொருளாகப் பணம் (கார்டு வாயிலாகச் செலவு செய்யப்படுகிறது) மறைந்து விடுகிறது. அதை அமெரிக்கர்கள் பல ஆண்டுகளாகப் பின்பற்றுகின்றனர். நாம் சிறிது சிறிதாக அவர்களைப் பின்பற்றுகிறோம் என்றே கூறலாம்.

    ReplyDelete