Saturday, 29 August 2015

சிந்தை கவர்ந்த சிவா

    கணினித் துறையில் ஒரு புரட்சி செய்ய, ஒரு கருப்பு நிலா மும்பை நகரில் 1963 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதியன்று உதித்தது. இணைய வரலாற்றில் இமெயில் என்னும் புதிய மின்னஞ்சல் முறையைக் கண்டுபிடித்து அமெரிக்க நாட்டின் அரசிடமிருந்து காப்புரிமையைப் பெறப்போகும் குழந்தை இது என தந்தை வெள்ளயப்ப அய்யா துரைக்கும் தெரியாது., தாயார் மீனாட்சி அய்யா துரைக்கும் தெரியாது.

    அய்யா துரை ஒரு வேதியியல் பொறியாளர்., மீனாட்சி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியலில் முது அறிவியல் பட்டம் பெற்றவர். இருவருக்கும் நெல்லை மாவட்டத்தில் முகவூர் என்னும் ஊர் பூர்வீகமாகும்.ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் பிழைப்புக்காக மும்பைக்குச் சென்றனர். அங்குதான் சிவாவும் தங்கை உமாவும் பிறந்தனர்.

  அங்கு உள்ளூர்ப் பள்ளியில் கணித  ஆசிரியையாகப் பணியாற்றினார் மீனாட்சி. ஒரு சிறிய வளர் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் பொறியாளராகப் பணியாற்றினார் அய்யாதுரை.

    “அமெரிக்கக் கனவோடு வலம் வந்த என் அப்பா, இளம் மனைவியான என் அம்மாவையும் இரு சின்னஞ்சிறு  குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கையிலிருந்த வெறும் 75 டாலர்களுடன் 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவின்  நியுஜெர்சியில் வந்து இறங்கினார்” என்று தன் வரலாற்றுக் குறிப்பைப் பதிவு செய்கிறார் டாக்டர் வி.ஏ.சிவா அய்யா துரை
.
   ஏழை எளியவர்கள் வாழ்ந்த பேட்டர்சன் என்னும் பகுதியில், நம் ஊர் மொழியில் சொல்வதென்றால் ஒரு சிறிய குப்பத்துப் பகுதியில் வசித்தனர். விரும்பியபடி வேலை கிடைக்கவில்லை. ஒரு சிறிய நிறுவனத்தில்  குறைந்த ஊதியத்தில் அய்யா துரை பொறியாளராகச் சேர்ந்தார். ஒரு நூற்பாலையில் தர ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார் மீனாட்சி. சிவா அதே பகுதியில் புகழ்பெற்று விளங்கிய லிவிங்ஸ்டன் பொதுப்பள்ளியில் அதாவது அரசுப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.

   மீனாட்சி அம்மையார் நூற்பாலையில் பணியாற்றினாலும் மாலை நேரத்தில் கணினி தொடர்பான படிப்பைப் படித்தார். ஒரு வெறியோடு கணினி ஆய்வில் ஈடுபட்டார். அதன் விளைவாக நியுயார்க் பல்கலைக்கழகத்தில் கணினிகளை நிர்வகிக்கும் வேலை கிடைத்தது. மகன் சிவாவையும் கணினித் துறையில் ஆர்வமுடன் ஈடுபடச் செய்தார். பொதுவாகப் படிப்பில் பின்தங்கியிருந்தாலும் பள்ளிப் பருவத்திலேயே கணினியில் கரை கண்டவராக இருந்தார் சிவா. எரியும் சுடராக இருந்த சிவாவுக்குத் தூண்டுகோலாக இருந்தார் தாய் மீனாட்சி. தான் பணியாற்றிய பல்கலைக் கழக கணினி மையத்தில் ஒரு கோடைவிடுமுறையில் நடைபெற்ற பயிற்சிவகுப்பில் சேர்த்துப் படிக்கச் செய்தார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. பயிற்சிக்குப் பிறகு மேலும் ஆர்வத்தோடு கணினி ஆய்வில் ஈடுபட்டார்.

  
Dr V A Siva Aiya Durai
Inventor of email

(photo from Google)
 தான் பயின்ற பள்ளியின் ஆசிரியர் மைக்கல்சன்.கடிதம் எழுதுவதற்குப் பதிலாக எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்ய முடியுமா என்பது குறித்து ஓர் ஒப்பளிப்பைத் தந்தார் சிவாவுக்கு. அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இரவு பகலாக உழைத்தார். தாய் மீனாட்சியும் ஆய்வில் துணை நின்றார். ஒரே அலுவலகத்தில் பணிபுரியும்  பலரும் கணினித் திரையில் படிக்கத் தக்க செய்திப்பரிமாற்றத்தை நிகழ்த்திக்காட்டி அனைவரையும் வியப்பபடையச் செய்தார். அதற்கு
E.M.A.I.L என்று பெயரும் சூட்டினார். பள்ளிச் சிறுவனின் அரிய கண்டுபிடிப்பு என்ற தலைப்புடன் வாஷிங்டன் போஸ்ட் என்னும் பத்திரிகை அரைப்பக்க அளவில் செய்தி வெளியிட்டது. இது நிகழ்ந்தது 1978 ஆம் ஆண்டு. அப்போது பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு புகழ் பெற்ற எம்.ஐ.ட்டி(Massachusetts Institute of Technology) நிறுவனத்தில் சேர்ந்து பிஎச்.டி உட்பட பொறியியல் துறையில்  நான்கு பட்டங்களைப் பெற்றார். இடையில் இமெயில் கண்டுபிடிப்புக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடினார்கள். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1982 ஆம் ஆண்டு அமெரிக்க காப்புரிமைச் சட்டத்தின்படி இமெயில் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற்றார்.

    வானொலியை உண்மையில் கண்டுபிடித்தவர் நம் நாட்டு விஞ்ஞானியான ஜெகதீஸ்  ஸந்திர போஸ். அவர் உரிய முறையில் காப்புரிமை பெறாத காரணத்தால் வானொலியை மார்க்கோனி என்பவர் கண்டுபிடித்ததாக அறிவியல் வரலாறு இன்றளவும் கூறுகிறது. வேம்புக்கும் மஞ்சளுக்கும் அமெரிக்கா உரிமை கொண்டாடியபோது நம்மாழ்வார் அவர்கள் போராடி வதாடி வழக்காடி  காப்புரிமையைப் பெற்றார். போராட்டக் குணம் கொண்ட சிவா அவர்களும் இறுதியில் உரிமையை நிலை நாட்டினார். அதன் காரணமாக தமிழர்களாகிய நாம் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறோம்.

  சிவா அய்யாதுரை அவர்கள் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் பெல்மாண்ட் நகரில் இரட்டைக் குடியுரிமைத்(பிறப்பினால் இந்தியக் குடிமகன், வசிப்பதால் அமெரிக்கக் குடிமகன்)  தகுதியுடன் வசித்து வருகிறார்.

    அமெரிக்க அஞ்சல் துறை உட்பட பல நிறுவனங்களில் ஆலோசகராக உள்ளார். சைட்டோ சால்வ்(Cyto solve) என்னும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.

  கணினி தொடர்பான நூல்களை எழுதியுள்ளார். யோகா, டென்னிஸ், கலை, கட்டடக்கலை, பயணம் போன்ற பொழுதாக்கப் பணிகளில் ஈடுபடுகின்றார். அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வத்தைப் பெண்கல்விக்காகப் பயன்படுத்துகிறார்.   இனோவேஷன் கோர்(Innovation Corps) என்னும் அமைப்பை நிறுவி பதின்ம வயது இளைஞர்களுக்கு கல்வி வழிகாட்டியாக விளங்குகிறார்.

       மின்சாரம் இல்லாத உலகை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதேபோல் இமெயில் என்னும் மின்னஞ்சல் வசதி  இல்லாத சூழலை நினைத்துப் பார்க்க முடியாது. மின்னஞ்சலைப் பார்க்கும் போதெல்லாம் சிவா அய்யா துரையை  நன்றியோடு நினைத்துக்கொள்ள வேண்டும்.

  இன்று ஆகஸ்ட் முப்பது. இமெயில் கண்டுபிடிப்பின் உரிமைக்கான முப்பத்து மூன்றாம் ஆண்டு நிறைவு தினம் ஆகும். நமக்கெல்லாம் பெருமை நல்கிய இணையத் தமிழன் சிவா அய்யாதுரை அவர்கள் இணையிலாத் தமிழைப் போல நிலைத்தப் புகழ் பெற்று வாழ்க வளர்க என வாழ்த்துவோம்.


நான் முதல்வராகப் பணியாற்றும் கரூர் லார்ட்ஸ் பார்க் பள்ளியின் அனைத்துக் கணினித் திரைகளிலும் முதலில் சிவா அய்யாதுரையின் படம் தோன்றும்படியாக ஏற்பாடு செய்துள்ளேன். என்னுடைய மடிக்கணினித் திரையிலும் சிவா அய்யாதுரை அவர்கள் புன்னகையுடன் காட்சி தருகிறார்.

  தகுதி வாய்ந்த இந்த இந்தியனுக்கு, இந்தியா தகுந்த அங்கீகாரத்தை இதுவரை வழங்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.


5 comments:

  1. தகுதி வாய்ந்த இந்த இந்தியனுக்கு, இந்தியா தகுந்த அங்கீகாரத்தை இதுவரை வழங்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
    உண்மை உண்மை

    ReplyDelete
  2. வேதனைப்பட வேண்டிய உண்மை தான் ஐயா...

    ReplyDelete
  3. மின்னஞ்சலின் நாயகனை நாடு பாரட்டவில்லை என்றாலும் அன்றாடம் நாம் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் போது கண்டிப்பாக நினைவில் நிற்பார் போற்றுதலுக்கும் பாரட்டுதலுக்கும் உரிய திரு.சிவா அய்யதுரை அவர்கள். அவர் வாழ்க! அவர் குலம் வாழ்க! வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  4. மின்னஞ்சலின் நாயகனை நாடு பாரட்டவில்லை என்றாலும் அன்றாடம் நாம் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் போது கண்டிப்பாக நினைவில் நிற்பார் போற்றுதலுக்கும் பாரட்டுதலுக்கும் உரிய திரு.சிவா அய்யதுரை அவர்கள். அவர் வாழ்க! அவர் குலம் வாழ்க! வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
  5. அன்பின் இனிய
    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
    நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete