என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்ற மன நிலையில் சென்ற நான் நடந்த நிகழ்வுகளைக் கண்டு வியந்து போனேன். முகம்
தெரியாத பதிவர்களை ஒன்று சேர்ப்பது என்பது பகீரத முயற்சிதான்.
அம் முயற்சியில்
இமாலய வெற்றி அடைந்திருக்கிறார்கள் விழாக் குழுவினர்.
நிகழ்ச்சி நிரல் அருமை. இடையிடையே
தென்றலென தவழ்ந்து வந்த சுபாஷிணியின் பாடல்கள் அருமையிலும் அருமை. பக்க வாத்தியம்
உண்மையில் பக்கா வாத்தியமே.
தங்கம் மூர்த்தி அவர்களும் முத்து
நிலவன் அவர்களும் நகைச் சுவை உணர்வு
இழையோட இணைப்புரை வழங்கியது படு பிரமாதம்.
இளந் துணைவேந்தரின் இனிமையான உரையை
என்னென்பேன்! பேசிய அனைவரும் பொருத்தமாகப் பேசினார்கள். முனைவர் அருள்முருகனின்
பங்களிப்பு அசத்தலானது.
பதிவர் கையேடு என்பது மணிகளாம்
பதிவர்களை மாலையாக இணைக்கும் பொன்னிழை என விளங்குகிறது. இனி நம் பதிவுகளுக்குக்
கூடுதலான நோக்கர்கள் கிடைப்பார்கள்.
இத்தகைய சந்திப்புகளின் வெற்றிக்கு
அடிப்படை உணவும் உபசரிப்புமே ஆகும். மனதுக்குப் பிடித்த வகையில் இவை
பாராட்டும்படியாக அமைந்ததன.
மரக்கன்று நட்டு விழாவைத் தொடங்கியது
கலாம் அவர்ககளுக்குச் செலுத்தப்பட்ட உண்மையான அஞ்சலியாகும். பதிவர் அறிமுகம்,
பரிசளிப்பு, நூல் வெளியீடு, பதிவர் நூல் கண்காட்சி, ஓவியக் கவிதை பதாகைகள், ஒலி
ஒளி அமைப்பு எல்லாமே சிறப்பாக அமைந்தன.
அகவை முதிர்ந்த பதிவர்களை வணங்கி மகிழ்ந்தேன்; இளைய
பதிவர்களை வாழ்த்தி மகிழ்ந்தேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்னிடம் பயின்ற
தலை மாணாக்கர்களில் ஒருவரான ஓட்டுநர் பரமேஸ்வரனைச் சந்தித்து அளவளாவியதில் நான்
அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
எனது முன்னாள் மாணவர் பரமேஸ்வரனும் நானும் |
பிற்பகல் நிகழ்வில் முத்தாய்ப்பாக
விளங்கிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
அவர்களுடைய பேருரை திருக்குறள் போல அமைந்தது. அவர் பேச்சிலிருந்து ஒரு சொல்லைக்கூட
நீக்கவும் முடியாது; சேர்க்கவும் முடியாது.
பாவலர் முத்து நிலவன் அவர்களும்,
திண்டுக்கல் பொன்.தனபாலன் அவர்களும் இணைந்து, மற்றவர்களை இணைத்துச் செயல்பட்டதால்தான்
விழா வெற்றிகரமாக அமைந்தது.
என் பார்வையில் குறை ஒன்றும்
தென்படவில்லை. நான் வழங்கும் மதிப்பெண் 100/100.
ஆனால் சிலர் குறையாகக் குறிப்பிட்டுப் பேசியதை நான் இங்கு குறிப்பிட்டாக
வேண்டும். அவர்கள் சொன்னதாவது:
1. போட்டிக்கு வந்த
படைப்புகளை அவ்வப்போது வெளியிட்டது சரியில்லை. முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு
வெளியிட்டிருக்க வேண்டும்.
2.
விழாக் குழுவினர்
போட்டியில் பங்கேற்றதும், நடுவர்களாக செயல்பட்டதும் சரியன்று.
3. நன்கொடையாளர்களுக்கு
உடனுக்குடன் பற்றுச்சீட்டும் நன்றிக் கடிதமும் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டிருக்க
வேண்டும்.
பாரதி சொன்னதைப் போல எவரோ பேதையர் சிலர் உரைத்தார்
என இவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
இந்த விழா அமுதம் நிரம்பிய நிறை குடமாகத் திகழ்ந்தது எனலாம்.
விழாவின் வெற்றிக்குப் பாடுபட்ட அனைவரும் வாழ்க வளமுடன் என வாழ்த்துவதைத் தவிர அவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
தங்களை நேரில் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா
ReplyDeleteநன்றி
நன்றி ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி அய்யா 100/100 மதிப்பெண் கொடுத்தமைக்கு...அவர்கள் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு...போட்டியின் நடுவர்கள் யார் யார் என்பது நிலவன் அண்ணாக்கு மட்டுமே தெரியும்...நிதி பொறுப்பில் இருந்தாலும் போட்டிக்கு ஒரே ஒரு கவிதை எழுதிவிட்டதால் யாரிடமும் நடுவர்களைப்பற்றி கூறவில்லை என்பது சத்தியமான உண்மை...போட்டியில் புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு பரிசு கிடைத்ததும் இந்த பேச்சு வந்துவிடுமே என அண்ணா அச்சப்பட்டதும் உண்மை...துணைவேந்தரே அந்தக்கவிதையின் சிறப்பை பரிசு பெற்றுள்ளது என்பதை அறியாது பாராட்டிய போது தான் நாம் நேர்மையுடன் தான் நடத்தியுள்ளோம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என கூறினார்..
ReplyDeleteபோட்டியே வலைப்பதிவை அதிகமாக்க வேண்டும் என்ற நோக்கத்தால் தமிழ் இணைய்யக்கல்வி கழகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் வெளியிடச்சொன்னார்கள்..
நன்கொடையாளர்கள் அனைவரையும் வெளியிட வேண்டும் என்பதால் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...தனியே அவர்களுக்கு மின்னஞ்சலில் நன்றி கடிதம் அனுப்பிவிட்டார்கள்...சிலரது நன்கொடையில் பெயரின்றி எண்கள் மட்டுமே உள்ளது..அவர் அனுப்பிய மெயிலோ தேதி வித்தியாசப்படுகின்றது...அதனால் தான் தாமதமாகின்றது விரைவில் வரவு செலவு கணக்கு வெளியிடப்படும்...இன்று தான் சமையல் செலவு விபரம் வந்துள்ளது...நன்றி அய்யா..
மரியாதைக்குரியவர்களே,
ReplyDeleteவணக்கம். கோபி செட்டிபாளையம் வைரவிழா மேனிலைப்பள்ளியில் எனக்கு கல்வி புகட்டிய தமிழாசான் திருமிகு.இனியன்.அ.கோவிந்தராஜூ ஐயா அவர்களை 35ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திய புதுக்கோட்டை தமிழ் வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழா-2015 குழுவினருக்கு நன்றிங்க..
தமிழாசிரியரிடம் மாணவர்களுக்கு இருக்கும் நெருக்கம் மற்ற பாட ஆசிரியர்களுக்கு கிடைப்பதரிது. ஆசிரியர் மாணவர் பிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் நட்பு நல்ல எடுத்துக்காட்டு.
Delete"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...
ReplyDeleteஇணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்←
நன்றி...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
அய்யா வணக்கம். தங்களின் வயது முதிர்வையும் பொருட்படுத்தாது, விழாவிற் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும் பதிவிட்டு பாராட்டியமைக்கும் நன்றிகள். தங்கள் கருத்துகளை நான் மறுக்க விரும்பவில்லை. எல்லாவற்றையும் விழாக்குழுவில் ஆலோசித்தே முடிவெடுத்தோம். அனைத்துக்கும் காரணமுள்ளது. எமது நிதிக்குழுப் பொறுப்பாளர் மு.கீதா கொஞ்சம் சொல்லியிருக்கிறார். எஞ்சியவற்றுக்கு நான்தான் பொறுப்பு. சற்றே பொறுங்கள், அனைவர் பதிவுகளின் கருத்துகளையும் அறிந்து இறுதியாக - உறுதியாக உரிய பதிலைத் தரக் கடமைப்பட்டுள்ளேன். தங்களின் அன்புகலந்த கருத்துகளுக்கு நன்றியும் எங்கள் விழாக்குழுவின் சார்பான வணக்கங்களும் அய்யா. நன்றி வணக்கம்.
ReplyDelete• அலைபேசியை அடக்கு.
ReplyDeleteமுதல் வாசகமே திருவாசகமாய் ஒளிர்கிறது.
அனைத்திந்திய நடுவரசு ஊழியர்கள் பொதுச் செயலராகத் திகழ்ந்து காலத்துடன் ஐக்கியமானவர் தோழர் பிரம்மநாதன். அவர் தொலைபேசியே வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தவர். எல்லாமே எழுத்து மூலம்தான். அல்லது கோடம்பாக்கத்தில் இருக்கும் அவ வீட்டிற்குச் சென்றும் கலந்துரையாடலாம். அவரது வீட்டிற்குக் கதவே கிடையாது. கதவே இல்லை என்றால் பூட்டு எதற்கு. 80 வயதுக்குமேல் வாழ்ந்து மறைந்தபோது வந்த கூட்டம் எழுதிமாளாது. 30 நாட்கள் கைப்பேசியைப் பயன்படுத்தாமல் இருந்து பழகினால், நாம் தேவையற்ற உரையாடல்களுக்கு அதனைப் பயன்படுத்தியமை தெரியவரும்.மாற்றுச் சிந்தனைகள் நனிநன்று. தங்களது ஆத்திசூடியை மின்னஞ்சல் மூலம் அனுப்புவித்தால் பெரிதும் மகிழ்வேன். rssairam99@gmail.com. தங்களை அறிமுகப்படுத்திய கரந்தை ஜெயகுமாருக்கும் நன்றி.