அறிவும் ஆற்றலும் உடைய அன்பு மகள் புவனாவுக்கு,
நலம். நலமே சூழ்க. இப்போது நீ
வசிக்கும் நாட்டில் தாங்க முடியாத குளிர் என்று உன் மின்னஞ்சலில்
குறிப்பிட்டிருந்தாய். இப்போது பருவ நிலை எப்படி உள்ளது? கொடும் குளிரைத் தாக்குப்
பிடிக்கக்கூடிய ஆடைகளை அணிந்துகொள்.
இன்று உன் பிறந்த நாள். முதலில்
உனக்கு அம்மாவும் நானும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி
அடைகிறோம்.
உன் பள்ளிப் படிப்பு முடியும்வரை ஆண்டுதோறும் உன் பிறந்த நாளை நம் இல்லத்தில் கொண்டாடி எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கினாய். கல்லூரிக்குப் படிக்கச் சென்றபின் பணிச் சூழல் காரணமாக ஊருக்கு வரமுடியாத நிலையில் தொலைப்பேசியில் மட்டுமே எங்களால் வாழ்த்துக் கூற முடிந்தது.
உன் பள்ளிப் படிப்பு முடியும்வரை ஆண்டுதோறும் உன் பிறந்த நாளை நம் இல்லத்தில் கொண்டாடி எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கினாய். கல்லூரிக்குப் படிக்கச் சென்றபின் பணிச் சூழல் காரணமாக ஊருக்கு வரமுடியாத நிலையில் தொலைப்பேசியில் மட்டுமே எங்களால் வாழ்த்துக் கூற முடிந்தது.
சென்ற ஆண்டு நீ பணியாற்றிய பெங்களூரு
IBM நிறுவனத்தில், உன்
பிறந்தநாளுக்கு விடுப்புக் கிடைக்காததால் ஸ்கைப் மூலமாக வாழ்த்துகளைக் கூறினோம். ஆனால்
இந்த ஆண்டு கனடா நாட்டின் தலைநகராம் ஒட்டாவா நகரில் உன் பிறந்த நாளைக்
கொண்டாடுகிறாய். அதுவும் அங்கே உள்ள உலகப் புகழ் பெற்ற கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் உன்னுடன் MBA படிக்கும் பன்னாட்டு மாணாக்க மாணாக்கியருடன்
சேர்ந்து கொண்டாடுகிறாய்.
நேற்று நானும் அம்மாவும் நம் இல்ல
முற்றத்தில் அமர்ந்து, “சின்னப் பெண்ணுக்குச் சிறகு முளைத்து விட்டது. இனி எந்த
ஆண்டு எந்த நாட்டில் இருப்பாளோ” என்று பேசிக்கொண்டிருந்தோம்.
இந்திரா காந்தி மறைந்த நாளில் நீ
பிறந்தாய். சிக்கல்களைக் கண்டு அஞ்சாமல் அவற்றை ஏற்றுக் கொண்டு, எதிர்கொண்டு
அறிவின் துணையால் தீர்வு காணும் திறன் உடையவர் இந்திராகாந்தி. இந்தத் திறன்
உன்னிடத்தில் இருப்பதை அறிந்து வியந்திருக்கிறோம்.
நீ பிறந்த இதே நாளில்தான் சர்தார்
வல்லப பாய் பட்டேலும் பிறந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகி, எதிர்ப்புகளுக்கிடையே 565 ஸமஸ்தானங்களையும் ஒன்றிணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்கியதால்,
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்டார். அவரிடத்தில் இருந்த
செயலூக்கத்திறன் உன்னிடத்தும் இருக்க வேண்டும்.
அமெரிக்காவைக்
கண்டு பிடித்த கிறிஸ்டோபெர் கொலம்பஸ், நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர் மைக்கேல்
காலின்ஸ், உலக மகா கவிஞன் கீட்ஸ் – இவர்கள் பிறந்த நாளில்தான் நீயும்
பிறந்துள்ளாய். இவர்கள் அனைவரும் அவரவர் துறையில் இமாலய வெற்றி பெற்றவர்கள். உலக
வெற்றியாளர் பட்டியலில் நீயும் இடம்பெறுவாய் என்று என் உள்ளுணர்வு உரைக்கிறது.
நீ
தேர்ந்தெடுத்துள்ள படிப்பு MBA என்பதால் உன் நட்பு
வட்டம் பெருகும். அதில் நீ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மிகவும் விழிப்போடு
இருக்க வேண்டும். ஆராயாமல் ஒருவரிடத்து
நட்பு கொள்வதும் நம்பிக்கை வைப்பதும் பெரும் துன்பத்தைத் தரும் என்று திருவள்ளுவர்
எச்சரிக்கிறார். உன் நினைவுக்கு வருகிறதா அந்தக் குறள்?
நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
குறள் கருத்துக்கு மதிப்பளிக்கக் கூடிய பெண் ஆதலால் நீ என் கூற்றை ஏற்றுக்
கொள்வாய் என நம்புகிறேன்.
உன்
பிறந்த நாளை ஒட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வதற்காக அம்மா அழைக்கிறாள். எனவே
இந்த மடலை நிறைவு செய்கிறேன். கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஞானாலயா
வள்ளலார் கோட்டத்திற்குச் சென்று
வழக்கம்போல் உன் பிறந்த நாளையொட்டி, நூறு
ஏழை முதியவர்களின் ஒரு வேளை உணவுக்காக ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கிவிட்டு
வருகிறேன்.
வாழ்க வளமுடன்
வானளவு வாழ்த்துகளுடன்,
பாசமிகு அப்பா, அம்மா.
பின் குறிப்பு}
நீ இரண்டாவதோ மூன்றாவதோ படித்தபோது உன்னை ஒருநாள் வயல் வெளிகளைப் பார்ப்பதற்காக பாரியூர்
அழைத்துச் சென்றது நினைவிருக்கிறதா? அந்த ஒளிப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.
அண்ணனின் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteதங்களின் அன்பு மகள் புவனாவிற்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா