இடம் பொருள் சூழல் அறிந்து பேச வேண்டும் என்று என் அம்மா சொல்லக்
கேட்டிருக்கிறேன். யா காவாராயினும் நா காக்க என்று என் பூட்டாதி பூட்டன் வள்ளுவர்
சொல்லக் கேட்டிருக்கிறேன். தீப்புண்ணைவிட நாப்புண் மோசமானது என அவர் மேலும்
சொன்னது என் நினைவுக்கு வருகிறது.
இவற்றை எல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்றுதானே கேட்கிறீர்கள்?
நேற்று மாலை நான், என் மனைவி, வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் என எல்லோரும்
பனிக் குழைவு அங்காடிக்குச் சென்றிருந்தோம். ஆறேழு ஆண்டுகளுக்கு முன் என்னிடம்
படித்த முன்னாள் மாணவி ஒருத்தி தன்
சகோதரனுடன் அங்கே வந்திருந்தாள். I hate all என்னும் வாசகம் அச்சிடப்பட்ட தொள தொளா பனியன் அணிந்திருந்தான்.
அவள் வணக்கம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாள். தன்
சகோதரனுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். ஆனால் அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவளுடைய படிப்பு,
பணி குறித்து விசாரித்தேன். பொறியியல் மற்றும் மேலாண்மையில் பட்டமும் பட்டயமும்
பெற்றிருப்பதாகச் சொன்னாள். அடுத்த வாரத்தில் திருமணம் எனச் சொன்னாள். உடனே என்
வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
உங்கள் முகவரியைச் சொல்லுங்கள் அழைப்பிதழ்
அனுப்புகிறேன் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை.
இங்கே தன் திருமணம் குறித்துச் சொல்லாமல்
இருந்திருக்கலாம். வாய்வழி அழைப்புக் கூட இல்லையே என்னும் வருத்தம் எனக்கு
ஏற்பட்டிருக்காது அல்லவா?
இரு நண்பர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின்
சந்திக்கிறார்கள். ஒருவர் தன் குடும்பத்தின் வறுமை நிலையைப் பட்டும் படாமலும் சொல்கிறார்.
இதைக் கேட்டவர் பேசாமல் இருந்திருக்கலாம் அல்லது விரைவில் எல்லாம் சரியாகும் என
ஊக்கமொழி சொல்லியிருக்காலாம். “ஆண்டவன் புண்ணியத்தில எனக்குப் பணக்கஷ்டமே
இல்லிங்க. எப்படி செலவு பண்றதிண்ணுதான் தெரியல” என்று சொல்கிறார். இந்தச் சூழலில் இவர்
இப்படிப் பேசியிருக்கலாமா?
“நீ ஸ்கூலுக்கு வர்ரது வேஸ்ட். சுட்டுப் போட்டாலும்
ஒனக்கு கணக்கு வராது” – இப்படி ஓர் ஆசிரியர் பேசினால் அந்த மாணவனின் மனம் என்ன
பாடுபடும்? இருபாலரும் படிக்கும் வகுப்பு என்றால் அவன் அவமானத்தால் கூனிக்
குறுகிப் போவான்.
உடல் நலம் குன்றியவரைப் பார்க்கப் போன ஒருவர்
சொல்கிறார்: “தம்பி, ஒங்கப்பா ஒடம்பு ரொம்ப மோசமா இருக்கே. மொகத்துல ஒருவிதமான
சவக்களை தெரியுதே. நீ குடுத்து வச்சது அவ்வளவுதான்” அந்தச் சூழலில் அவர் இப்படிப்
பேசியிருக்கலாமா?
பிள்ளைப் பேற்றுக்காக தாய் வீடு சென்றிருந்தவள், “
எப்படி இருக்கீங்க அத்தை? எனக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கு” என்று
தொலைப்பேசியில் சொல்கிறாள். அதைக் கேட்ட மாமியார் சொல்கிறார்: “பொட்டக் குழந்தைய
பெத்ததைப் பெருமையா சொல்றியா?”
இந்தப் பேச்சு வாள் வீச்சைவிட மோசமானது.
இது நடந்த நிகழ்வு. இயற்பியல் பொதுத்தேர்வு முடிந்து
இரண்டு மணிக்கு வருகிறான்.
“சென்ட்டம் வருமா?” அம்மாவின் குரல் ஓங்கி
ஒலிக்கிறது.
“இல்லமா. ஒரு மார்க் கேள்வி ஒண்ணுக்கு தப்பா எழுதிட்டேன்”
“நாக்க பிடிங்கிக்கிட்டு சாகலாம். போ. போய் சோத்தை
கொட்டிக்கோ”
மாலை நான்கு மணிக்கு தேநீருடன் அவன் அறைக்குச்
செல்கிறாள். மின் விசிறியில் நாக்கு வெளித் தாள்ளியபடி தூக்கில் தொங்குகிறான்
அருமை மகன். உணர்ச்சி வயப்பட்டு உதிர்த்த ஒரு சொல் அவனுடைய உயிரை வாங்கிவிட்டது.
உச்சக்கட்ட சோகம் என்னவென்றால் அந்த ஒரு மதிப்பெண் வினாவில்
அச்சுப்பிழை இருந்ததால் கருணை பதிப்பெண் வழங்கப்பட்டது. எனவே இறப்புக்குப் பின்
அவன் பெற்ற மதிப்பெண் இருநூறுக்கு இருநூறு!
இடம், பொருள், சூழல் பார்த்துப் பேசுவதுதான் தலையாயப்
பண்பாடு. அதுதான் சிறந்த நாகரிகம்.
பல இடங்களில் மௌனம் சிறந்த மொழி ஐயா...
ReplyDeleteமனிதனின் அங்கங்களில் உள்ள உறுப்புகள் சிலவற்றை இரண்டு என்ற எண்ணிக்கையில் படைத்த இறைவன் ஒன்று செயலிழந்தால் மற்றொன்றால் உயிர் வாழப் படைத்தார். ஆனால்,நாவினை மட்டும் ஒன்றை மட்டுமே உருவக்கியுள்ளார். இதனை அப்துல் ரகுமான் தனது “”ஆலாபனை”” கவிதைத் தொகுப்பில் நாவினை ஒற்றைச் சிறகு என்கிறார். ஆகவே உயர்வான சிந்தனைகளையும் உதிர்க்கலாம். கடுஞ்சொற்களையும் உதிர்க்கலாம். நாப்புண்களுக்கு மருந்து இல்லை என்பதை அறிந்து கடுஞ்சொற்களைத் தவிக்க வேண்டும்.
ReplyDeleteமனிதனின் அங்கங்களில் உள்ள உறுப்புகள் சிலவற்றை இரண்டு என்ற எண்ணிக்கையில் படைத்த இறைவன் ஒன்று செயலிழந்தால் மற்றொன்றால் உயிர் வாழப் படைத்தார். ஆனால்,நாவினை மட்டும் ஒன்றை மட்டுமே உருவக்கியுள்ளார். இதனை அப்துல் ரகுமான் தனது “”ஆலாபனை”” கவிதைத் தொகுப்பில் நாவினை ஒற்றைச் சிறகு என்கிறார். ஆகவே உயர்வான சிந்தனைகளையும் உதிர்க்கலாம். கடுஞ்சொற்களையும் உதிர்க்கலாம். நாப்புண்களுக்கு மருந்து இல்லை என்பதை அறிந்து கடுஞ்சொற்களைத் தவிக்க வேண்டும்.
ReplyDelete