எங்காவது
ஒரு நீண்ட தூர கார்ப் பயணம் அதுவும் நானே காரோட்டும் பயணம் வாய்த்தால் நன்றாக
இருக்கும் என எண்ணினேன். வயது
கூடிக்கொண்டே போகிறது. வழக்கமாக செய்யும் சில செயல்களைத் தொடர்ந்து செய்ய முடியுமா
என நான் தற்சோதனை செய்து கொள்வதுண்டு. வயது காரணமாக ஒன்று இயலாது அல்லது கூடாது
எனத் தோன்றினால் அதை விட்டுவிடுவேன்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
என்னும் குறள் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒன்றிலிருந்து
நாம் விலகி இருக்கிறோமோ அந்த ஒன்றினால் நமக்குத் துன்பம் ஏற்படாது அல்லவா?
எத்தனை கிலோமீட்டர் அலுப்பில்லாமல்
சுறு சுறுப்பாக கவனமுடன் கார் ஓட்ட முடியம் என்ற சோதனையில் இறங்க எண்ணினேன்.
தனியாக கார் ஓட்டிச் செல்வது அவ்வளவாகப் பிடிக்காது. நண்பர்கள் சூழ கார் ஓட்டுவது
தனி இன்பந்தான். ஆனால் என் உற்ற நண்பர்கள் எல்லாம் வெளி ஊரில் வெளி மாநிலத்தில்
இருக்கிறார்களே.
எங்கு
சென்றாலும் மனைவியை அருகில் அமரச்செய்து கார் ஓட்டுவதை வழக்கப்படுத்திக் கொண்டேன். அப்படியே மீறி செல்ல எண்ணினாலும் என்
கார் புறப்படாது. சரி சரி அவளும் வருகிறாள் என்று சொன்னால் இறகு கட்டிப் பறக்கும்.
குறைந்தது
500 கி.மீ தூரம் ஓட்டிப் பார்க்க வேண்டும் என எண்ணியபடி முற்றத்தில்
அமர்ந்திருந்தேன். அஞ்சல்காரி சில உறைகளை வீசிச் சென்றாள். அவற்றில் ஒன்று என்
மனைவிப் பக்க உறவுமுறைத் திருமண அழைப்பிதழ். அதுவும் கடலூரில். சிதம்பரத்தில்
அவளுடைய அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு அப்படியே கடலூர் சென்று வரலாமே என்று
மனைவியிடம் பேசினேன். அவளும் மறுக்காமல் ஒத்துக் கொண்டாள்.
இணையதளத்தில் பார்த்து வழித்தடம், எரிவாயு நிரப்புமிடம், தூரம், வழியில்
பார்க்கத்தகுந்த சுற்றுலாத் தலங்கள் முதலியவற்றைக் குறித்துக் கொண்டேன்.
கரூர்-குளித்தலை-முசிறி-குணசீலம்-திருச்சி டோல்கேட்- இலால்குடி-அரியலூர்- ஜெயங்கொண்டம்-கங்கைகொண்டசோழபுரம்-மீன்சுருட்டி-காட்டுமன்னார்குடி-சிதம்பரம்-பி.முட்லூர்-கடலூர்
என்னும் வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்தேன். தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஓட்டி
சிதம்பரம் அடைந்தோம். நடுவில் மனைவி கொண்டு வந்திருந்த சுவையான காலைச் சிற்றுண்டியைச்
சாப்பிட ஜெயங்கொண்டத்தில் இருபது நிமிடம் நிறுத்தினேன்.
வரும்பொழுதும் அதே வழிதான். கங்கைகொண்ட சோழபுரத்தில் காரை நிறுத்தி ஆயிரம்
ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரகதீஸ்வரர் கோவிலுக்குச் சென்றோம். என் மனைவி முதல் முறையாக இக் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாள்.
நான் பலமுறை இத் தலத்திற்கு வந்திருந்தாலும் மனைவியுடன் வருவது முதல் தடவைதான்.
அவளுக்கு நானே வழிகாட்டியாக மாறினேன்.
இக் கோவில் கி.பி.1025 ஆம் ஆண்டு இராஜராஜ
சோழனின் மகன் இராஜேந்திர சோழனால் கட்டி முடிக்கப்பட்டது. நல்ல தமிழில் பெருவுடையார்
கோவில் என்று பெயர் சூட்டினான். வட இந்தியாவிற்குப் படை எடுத்துச் சென்று, வென்று,
கங்கையாற்று நீரை பொற்குடங்களில் நிரப்பிக் கொண்டுவந்து குடமுழுக்குச் செய்தான் பின்னாளில்
பிறமொழி ஆதிக்கம் அல்லது ஆர்வம் காரணமாக பிரகதீஸ்வரர் என்னும் வடமொழிப்பெயர் வந்து
சேர்ந்தது. இப்போது நம்முடைய ஆங்கில மோகம் காரணமாக நமது அடையாளங்களை இழந்து
வருகிறோமே அப்படித்தான்.
கி.பி.1012 இல் முடிசூடிய இராஜேந்திர சோழன் 1044
வரை ஆண்டான். பெரிய அளவில் கப்பல் படை வைத்திருந்த முதல் அரசனும் இவனே. பர்மா, இந்தோனேஷியா,
தாய்லாந்து, கம்போடியா என கடல்கடந்து ஆதிக்கம் செலுத்திய இவன் மும்முடிசோழன்,
பரகேசரி, கங்கைகோண்ட சோழன், கடாரம் கொண்டான் போன்ற அடைமொழிகளாலும்
அழைக்கப்பட்டான்.
.
அடிப்
பீடத்தையும் சேர்த்து 182 அடி உயரமுடையது இத் திருக்கோவிலின் கோபுரம். இந்த
இடத்திலிருந்து இரண்டு கி.மீ தள்ளி சாரப்பள்ளம் என்று ஓர் ஊர் இருக்கிறது.
அங்கிருந்து சாய்வாக சாரம் அமைத்துப் பெரிய பெரிய கற்தூண்களையும் கற்சிலைகளையும்
182 அடி உயரத்திற்கு ஏற்றியுள்ளனர்! இக் கோபுர நிழல் தரை மீது விழுவதில்லை என்பது
தனிச்சிறப்பாகும். தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் சிறப்பாகப்
பேணப்பட்டு வருகிறது. மேலும் இது உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று என்பதால்
யுனெஸ்கோவின் கண்காணிப்பிலும் இருந்து வருகிறது. சுற்றிலும் பரந்த புல்வெளிகள்,
மரங்கள் சூழ நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. ஆனால், சுற்றுலாப் பயணியரின் அறியாமையால்
சிற்சில இடங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் கிடக்கின்றன.
கங்கைகொண்ட சோழபுரம் பல நூற்றாண்டுகள் சோழர்களின் தலைநகரமாக இருந்துள்ளது.
ஆனால் இன்றைக்கு அதற்கான அடிச்சுவடுகள் ஏதும் காணப்படவில்லை. கங்கைகொண்ட சோழபுரம்
ஒரு குக்கிராமமாகக் காட்சியளிக்கிறது.
இப்படி இருப்பதால்தான் இது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அது அமைந்துள்ள பகுதி
நகரமயமாகி விட்டதால், இதைவிட சிறப்புமிக்கத் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் அதன்
தனியழகை மெல்ல இழந்து வருகிறது.
இராஜேந்திர
சோழன் பெருவுடையார் கோவிலைக் கட்டிய கையோடு, பன்னிரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள
பொன்னேரி என்னும் பெயரில் மிகப்பெரிய ஏரியை வெட்டினான். அது இப்போது விளை நிலமாகவும்
விலை நிலமாகவும் மாறிவிட்டன. வளமார்ந்த இப் பகுதி தற்போது வானம் பார்த்த வறண்ட
பூமியாகப் போய்விட்டது. கமுகும் தென்னையும் வளர்ந்த வயல்களில் இன்று காட்டுக்
கருவேல் செடிகள் காடுமண்டிக் கிடக்கின்றன.
ஏரி
அழிந்தாலும் எழில்கொஞ்சும் கோவில் அழியவில்லை. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எத்தனை இயற்கைப்
பேரழிவுகள்! எத்தனைப் படை எடுப்புகள்! எத்தனை ஆட்சி மாற்றங்கள்! அத்தனைக்கும் ஈடு
கொடுத்து அசையாமல் நிற்கும் கட்டுமானப் பொறியியல் அதிசயம் என்பதை வெளிநாட்டுச்
சுற்றுலாப் பயணியர் நம்பி வியந்து போகிறார்கள். ஆனால் நம்மவர்களுக்கு இதன்
சிறப்புகள் தெரியவில்லை.
தமிழராகப்
பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் கங்கைகொண்ட சோழபுரம்
பெருவுடையார் கோவிலாகும்.
உண்மைதான் ஐயா
ReplyDeleteநானும் பார்த்து மகிந்திருக்கிறேன்
பதிவைப் படிக்கும்போது தங்களுடன் பயணித்ததுபோல இருந்தது. கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பலமுறை சென்றுள்ளேன். கங்கைகொண்ட சோழபுரம் பார்க்கவேண்டியகோயில்களில் ஒன்று. இதே விமான அமைப்பில் உள்ள பிற கோயில்களாக கலை வல்லுநர்கள் கூறும் பிற கோயில்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில். வாய்ப்பிருப்பின் இந்த மூன்றில் பார்க்காததைப் பார்க்க வேண்டுகிறேன்.
ReplyDeleteVery beautiful writing sir. Hats off to you sir. I kindly request you to have many frequent trips like this in view of exploring facts.
ReplyDelete