நந்த வனத்த்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
என்பது கடுவெளிச் சித்தர் எழுதிய தத்துவப் பாடல். இது ஒரு பழைய திரைப்
படத்தில் நகைச்சுவையாகப் பாடப்பட்டது.
ஆனால் நான் ஒரு சோக நிகழ்வுக்கு
முன்னுரையாக இந்த சித்தர் பாடலைக் குறிப்பிட வேண்டியதாய் ஆகி விட்டது.
இங்கே குயவன் என்பது இறைவன். தோண்டி
என்பது மானிடப் பிறவி. நாலாறு மாதமாய் அதாவது நான்கு கூட்டல் ஆறு ஆக பத்து மாதம் கழித்துப்
பிறக்கும் மானிடக் குழந்தை. இப்படி விரும்பிப் பெற்ற அரிய மனிதப் பிறவியை அதன்
அருமை பெருமை தெரியாமல் சிலர் கெடுத்துக் கொள்கிறார்களே!
மேலே சொன்னது தத்துவப் பொருள்.
இதன் மேலோட்டமானப் பொருள் ஒன்றும் உண்டு. ஒருவன் குயவனிடம் சென்று ஒரு பானை வேண்டுமெனக்
கேட்டான். “இப்ப இல்ல இனிமேல் செய்து சூளையில் வைத்துச் சுட்டுக் கொடுக்க
பத்துமாதம் ஆகும்” என்றார் அக் குயவர். அவனும் நடையாய் நடந்து பத்தாம் மாத
முடிவில் பானையை வாங்கி தலையில் வைத்தபடி வந்தான். வரும்போதே மகிழ்ச்சியில்
ஆடியவாறு வந்து அப் பானையைக் கீழே போட்டு உடைத்தானாம்.
சரி இருக்கட்டும் ஏதோ சோக
நிகழ்வு........
சொல்கிறேன். நேற்று காலை நடைப்பயிற்சியின் போது ஒரு நடுத்தர வயதுடைய ஆள்
மிகுதியாகக் குடித்துவிட்டு நிலைத் தடுமாறி சாய்க்கடை ஓரம் கிடந்தான். பார்க்கவே
பாவமாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரும் கண்ணில் படவில்லை. என்
அலைப்பேசியின் காமிராவில் ஒரு கிளிக் செய்துகொண்டு திரும்பிப் பார்க்காமல்
வீடுவந்து சேர்ந்தேன்.
அந்த ஆளை எங்கோ பார்த்துள்ளதாக
மனம் சொல்லியது. இரண்டு தெரு தள்ளி அந்த ஆளுடைய வீடு இருப்பதாக ஞாபகம். ஆனால் அந்த
ஆளிடம் ஒருமுறை கூட பேசியது கிடையாது. அவர் ஒரு கட்டட மேஸ்திரி என்பது மட்டும்
தெரியும். அந்தப் போட்டோவை பிரிண்ட் போட்டு அந்த ஆளிடம் காட்ட வேண்டும், அந்த
அலங்கோலத்தைப் பார்த்தப் பிறகாவது குடிப்பதை விட்டுவிடக் கூடும் என்ற நப்பாசை
எனக்கு.
“இந்த ஐடியா நல்லாயிருக்கே” என்கிறீர்களா?
இந்த யோசனையை எனக்குச் சொன்னவரே திருவள்ளுவர்தான்
கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
. ஒருவன் தெளிவாக இருக்கும்போது,
வேறு ஒருவன் குடித்துவிட்டுச் சாலையோர சாய்க்கடையில் காலை கிளப்பிக் கொண்டு ஆடை விலகி மயங்கிக் கிடக்கும் அலங்கோலக் காட்சியைக்
கண்டால் மது அருந்துவதால் ஏற்படும் அசிங்கத்ததை உணர்ந்து திருந்த மாட்டானா என்பது
குறளின் பொருள்.
தான் சாய்க்கடையில் கிடக்கும்
போட்டோவைப் பார்த்தால் அவன் திருந்திவிடுவான் என்ற எண்ணத்தில் அந்த போட்டோவை சட்டைப்
பையில் வைத்துக் கொண்டேன்.
இன்று காலையில் அந்த ஆள் வசித்த தெருப்பக்கம்
நடந்தேன். அந்த ஆளின் அடையாளங்களைச் சொல்லி ஒருவரிடம் விசாரித்தேன்.
“அந்த ஆளா?
குடிச்சி குடிச்சியே செத்துப்போயிட்டான் சார்”
“எப்ப செத்தாரு?”
“நேத்து
சாய்ங்காலம்”
“நேத்து காலையிலே
பார்த்தேனே!”
சட்டென்று
சுதாரித்துக் கொண்டேன்.
“எங்கேயோ
குடிச்சிட்டு மயங்கிக் கிடந்த ஆளை கவர்மெண்டு ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. பல்ஸ்
கொறவா இருந்ததாம். கொஞ்ச நேரத்தில மண்டையைப் போட்டிட்டாராம். அவங்க சொந்த ஊருக்கு
எடுத்துப் பூட்டாங்க. தோ பூட்டிக் கிடக்குதே அதான் அவுரு வூடு. நீங்க தெரிஞ்சவரா?”
தலையை மட்டும் ஆட்டிவிட்டு எதை எதையோ
நினைத்தபடி நடையை எட்டிப் போட்டேன்.
சற்றே மனம் கனத்துவிட்டது.
ReplyDeleteகுடித்துக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட மனிதனைத் திருத்திவிடலாம் என்ற தங்கள் எண்ணத்தை உயர்வாகக் கருதுகிறேன். கள் உண்ணாதே என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அய்யன் வள்ளுவன் சொல்லிச்சென்றதையும் சுட்டியுள்ளீர்கள். இருந்தும் என்ன பயன் தெருவுக்குத் தெரு “டாஸ்மாக்” கடைகள். அரிதான பிறப்பு அதிலும் அங்கக்குறைகள் இல்லாப் பிறப்பு. மதியை மயக்கும் மதுவை “Toxin" எனக்குறிப்பிடுவர். மெல்லக் கொல்லும் விசம் என்பதே அதன் பொருள். மதுவினால் மதி இழந்து, மனைவியை இழந்து, மக்களை இழந்து இறுதியில் மானமிழந்து அவர் யார்? என வினவும் போது மனிதன் என்ற பெயர் நீங்கி அவ்ன் ஒரு குடிகாரன் என்ற பெயருடன் மரிக்கின்றான். இத்தகைய குடி தேவையா? சிந்திப்போம் செயல்படுவோம் மதுவின் தீமையை எடுத்துரைப்போம்.
ReplyDeleteகுடித்துக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட மனிதனைத் திருத்திவிடலாம் என்ற தங்கள் எண்ணத்தை உயர்வாகக் கருதுகிறேன். கள் உண்ணாதே என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அய்யன் வள்ளுவன் சொல்லிச்சென்றதையும் சுட்டியுள்ளீர்கள். இருந்தும் என்ன பயன் தெருவுக்குத் தெரு “டாஸ்மாக்” கடைகள். அரிதான பிறப்பு அதிலும் அங்கக்குறைகள் இல்லாப் பிறப்பு. மதியை மயக்கும் மதுவை “Toxin" எனக்குறிப்பிடுவர். மெல்லக் கொல்லும் விசம் என்பதே அதன் பொருள். மதுவினால் மதி இழந்து, மனைவியை இழந்து, மக்களை இழந்து இறுதியில் மானமிழந்து அவர் யார்? என வினவும் போது மனிதன் என்ற பெயர் நீங்கி அவ்ன் ஒரு குடிகாரன் என்ற பெயருடன் மரிக்கின்றான். இத்தகைய குடி தேவையா? சிந்திப்போம் செயல்படுவோம் மதுவின் தீமையை எடுத்துரைப்போம்.
ReplyDeleteA fine experience. Judge M.Pughazhendi
ReplyDeleteஐயா,
ReplyDeleteஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டுமெனில் கோடிகள் பல செலவு செய்து விளம்பரம் செய்யவேண்டும் என்பது பழைய காலம். ஆனால் இன்று சில லட்சங்களை ஒரு திரைப்பட கதானாயகனிடம் கொடுத்தால் போதும். அப்பொருள் அதிவிரைவில் மக்களிடம் சென்றுவிடும். அது போலவே சாராயக்கலாச்சாரமும். குடிப்பதற்கு காரணம் சொல்லும் மனநிலை என்று மாறுகிறதோ அன்றே இது தீரும். குடிப்பழக்கம் இல்லாதவனைத் தீண்டத்தகாதவனாகப் பார்க்கும் நிலை வந்து விட்டது. உங்கள் பதிவு இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.