31.10.2016
அன்பிற்கினிய அருமை மகள் புவனாவுக்கு,
இன்று உன் பிறந்தநாள். வாழ்க
வளமுடன் என நானும் அம்மாவும் நெஞ்சார வாழ்த்துகிறோம். இந்த ஆண்டும் மின்னஞ்சல் மூலமாகவே உனக்கு வாழ்த்தினைச் சொல்ல வேண்டிய
நிலை.
அடுத்த நாள் தேர்வுக்குப் படிக்க
வேண்டி இருப்பதால் உன் பிறந்த நாள் மற்றுமொரு வழக்கமான நாளே என நீ உன் அம்மாவிடம்
நேற்று தொலைபேசி மூலம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். காரியத்தில் கண்ணாக இருக்கிறாயே என்று எனக்குப்
பெருமையாக இருந்தது.
உன் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுகிறோம். வழக்கம்போல் இந்த ஆண்டும் உன் பிறந்த நாளில்
நூற்று இருபது ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்திற்காக கரூர்
ஞானாலயா வள்ளலார் கோட்டத்தில் ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தி உரிய
ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.
உன் அம்மா காலையிலேயே இனிப்புகளைத் தயார் செய்துவிட்டாள். சிறிது நேரத்தில்
சுந்தர காண்ட பாராயணத்தையும் தொடங்கிவிடுவாள். நானும் மடிக்கணினி முன் அமர்ந்து
விட்டேன் மடல் எழுத.
இது ஒருபக்கம் இருக்கட்டும்.
நீயும் நிவேதிதையும் இந்த அக்டோபர்
மாதத்தில் பிறந்தவர்கள். சுவாமி விவேகானந்தர் கண்டெடுத்த முத்துகளில் ஒருவர் இந்த
நிவேதிதை. மார்கரெட் எலிசெபத் நோபிள் என்னும்
இயற்பெயர் கொண்ட அப்பெண் அயர்லாந்து நாட்டில் 28.10.1867 அன்று பிறந்தார்.
சுவாமிஜியின் அன்புக்கட்டளையை ஏற்று
துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். நம் நாட்டின்
பெண்கல்விக்காகப் பெரிதும் பாடுபட்டு பெரும் வெற்றி கண்டார். 13.11.1898 அன்று
கல்கத்தாவில் ஒரு பெண்கள் பள்ளியை நிறுவினார். ஆனால் எந்தப் பெற்றோரும் தம் பெண்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. பெண்
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது பெருங்குற்றம் எனப் பெற்றோர்கள் உறுதியாக நினைத்தக்
காலக்கட்டம் அது. மனம் தளராத நிவேதிதை, வீடு வீடாகச் சென்று மணிக் கணக்கில் பேசி
ஒவ்வொரு குழந்தையாகச் சேர்த்தார். காலப்போக்கில் குழந்தைகள் பலரும் சேர்ந்தனர்.
ஒருமுறை பள்ளியின் விரிவாக்க
நிதிக்காக ஒரு பெரிய செல்வந்தரை நிவேதிதை அணுகியபோது அவர் கன்னத்தில் அறைந்து
விட்டாராம். சற்றும் அதிர்ச்சி அடையாமல் நிவேதிதை சொன்னார்: “எனக்குத் தர வேண்டியதைத் தந்து விட்டீர்கள்; என்
குழந்தைகளுக்குத் தர வேண்டியதைக்
கொடுங்கள்” கண்ணீர் மல்க ஒரு பெருந்தொகையை வழங்கினாராம் அந்தச் செல்வந்தர்!
அன்னை சாரதா தேவியார் திறந்து
வைத்த வரலாற்றுச் சிறப்புடையது அப் பள்ளி. நிவேதிதையின் நூற்று ஐம்பதாவது
பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் அவர் தொடங்கிய அந்தப் பள்ளியின் இன்றைய
நிலை என்ன என்பதை கூகுளில் ஆராய்ந்தேன். அப் பள்ளி ஆல்போல் தழைத்து அருகுபோல்
வேரூன்றி கல்கத்தா மாநகரில் இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது. ஒரு பெண்
நினைத்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு நிவேதிதை எடுத்துக்காட்டாக
வாழ்ந்தார்.
பின்னாளில் நம் பாரதியாருக்கே ஞான குருவாக
அமைந்தார் என்பது உனக்குத் தெரியுமா? கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற
பாரதியார் நிவேதிதையைச் சந்திக்கச் சென்றார். நம் பாரதி ஒரு பன்மொழிப் புலவர்.
எனவே இருவரும் ஆங்கிலத்தில் அளவளாவினர்.
“பாரதி! ஏன் தனியாக வந்துள்ள்ளீர்? உன் மனைவியை அழைத்துவரவில்லையா?”
“இல்லையம்மா. பொது நிகழ்வுகளுக்கு மனைவிமாரை அழைத்துச் செல்வது எங்களுக்கு
வழக்கமில்லை”
“பாரதி! நீ என்ன முட்டாளா? பெண் என்பவள் ஆணின் பாதி என உங்கள் மதம் சொல்வது
உங்களுக்குத் தெரியாதா?
“தெரியும் அம்மா”
“பின் ஏன் பெண்களை அடிமையாக நடத்துகிறீர்கள்?”
“தவறுதான் அம்மா.”
ஊர் திரும்பியதும் முதல் வேலையாக மனைவியை ஒரு ஒளிப்பட நிலையத்திற்கு
அழைத்துச் செல்கிறார். மனைவியை ஒரு நாற்காலியில் அமரச்சொல்லி அருகில் நின்று
கொண்டு ஒளிப்படம் எடுத்துக்கொள்கிறார். நிவேதிதையைச் சந்தித்தப் பின்னரே பெண்
விடுதலை குறித்துப் பாடத் தொடங்கினார் பாரதியார் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவது சிந்திக்கத்
தக்கதாகும்.
. பாரத மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும்
நிவேதிதை போல உயர்ந்த இலக்குடனும் அதை அடையும் மன உறுதியுடனும் வாழ வேண்டும். அந்த
மாதரசியின் வாழ்க்கை வரலாற்று நூலைப் படி.
பெண் விடுதலையைப் பற்றி உரக்கப்
பேசிய பாரதியார், அந்த விடுதலையே அவர்களுக்கு வினையாக அமைந்து விட்டால் என்ன
செய்வது என்று எண்ணுகின்றார். கடவுள்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று
பாடுகிறார்.
“பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்”
என்னும் பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. இந்திய மண்ணில் பிறந்த, இனி பிறக்கும்
ஒவ்வொரு பெண் குழந்தையும் தடம் மாறிப் போகாமல் கடவுள் காக்க வேண்டும் என நானும்
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நீ
நிறையப் படிப்பவள். ஆங்கில மொழி உன்வசப்பட்டதே இந்த நூல் வாசிக்கும் வழக்கத்தால்தான்.
தொடர்ந்து படி.
மீண்டும் வாழ்த்துகளைக் கூறி மடலை நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு,
வானளவு அன்புடன்,
அம்மாவும் அப்பாவும்.
தங்களின் அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் மகளுக்குக் கூறியது அனைத்தும் நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதே. உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteMany more happy returns to dear Bhuvani.
ReplyDelete"எனக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டீர்கள். என்குழந்தைகளுக்குகொடுக்க வேண்டியதைக் கொடுங்கள்" என்ற நிவேதிதாவின் கருணையைச் சொல்லி தம் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் தந்தையின் மாண்பு. வாழ்க வளமுடன்....! வாழ்க நலமுடன்....!
ReplyDeleteதலைசிறந்த கருத்துக்களுடன் ஆசிர்வதிக்கும் சிறந்த அப்பாக்களில் ஒருவர்.
ReplyDeleteஅன்பு நண்பர் அவர்களுக்கு
ReplyDeleteவணக்கம்.
நான் அன்போடு அழைக்கும் புவனாவிற்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
நேரு இந்திராவிற்கு கடிதம் எழுதுவதுபோல் உள்ளது. ஒரு உலக புகழ் பெற்ற அம்மையாரோடு புவனாவை ஒப்பிட்டு எழுதியுள்ள உங்கள் உளப்பாங்கு பாராட்டிற்குரியது.நீதிபதி மூ.புகழேந்தி
இப்படி அற்புதமானதொரு பிறந்தநாள் வாழ்த்து தந்தையிடமிருந்து பெறும் பேறு வாய்த்த புவனா....வாழ்க வளர்க.
ReplyDeleteஐயா, தாங்கள் தங்கள் மகளுக்கு எழுதிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெண்களைப் பெற்ற ஒவ்வொரு தகப்பனாருக்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது. தங்கள் மகள் பல பேறுகள்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாரதி ஒரு பன்மொழிப் புலவர்.just i know that matter sir
ReplyDeleteவீட்டில் பெண் மகவு பிறந்தால் மகாலட்சுமி பிறந்துள்ளாள் என்பர். ஆனாலும் ஒரு காலத்தில் பெண் குழந்தைகளைப் போற்றிப்பாதுகாக்கத் தவறியும் உள்ளனர். இராசாராம்மோகன்ராய், சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பெண்களைப்போற்றும் விதமாக நல்லசிந்தனைகளைச் சமுதாயத்திற்கு வழங்கியுள்ளனர். அவர்களின் பங்கு மகத்தானது. பெண்களை அடிமைப்படுத்தக் கூடாது. தன்னில் பாதியாக அவர்களை நினைக்க வேண்டும். பெண் உடல் பலத்தில் வேண்டுமானால் சற்று குறைந்திருக்கலாம். அதைக்கூட தற்போது கூற இயலாது, ஏனென்றால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்களில் பெண்களே அதிக அளவில் உள்ளனர். பாரதி கண்ட புதுமைப்பெண்கள் ஏராளமானவர்கள் தோன்றியுள்ளனர். அர்த்தநாரித் தத்துவத்தைப் புரிந்து கொண்டு ஆண் பெண் பாகுபாடின்றி போற்ற வேண்டும்.
ReplyDeleteஒரு தந்தையாக தங்கள் மகள் புவனாவிற்கு மிக அழகாக பிறந்தநாள் வாழ்த்தோடு நல்ல அறிவுரையையும் வழங்கியுள்ளீர்கள். புவனாவிற்கு எனது வாழ்த்துக்கள். வளம் பெறுக, நலம் பெறுக, வாழ்க பல்லாண்டு.
முனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர், அரசு கலைக் கல்லூர்(தன்னாட்சி), கரூர் - 5