Monday, 17 October 2016

சோத்துக்குள்ள இருக்குதடா சொக்கலிங்கம்

   'அரைச் சாண் வயித்துக்காகதான் பாடா' படுகிறோம் என்று உழைக்கும் மக்கள் உரக்கச் சொல்வது நம் செவிகளில் விழத்தான் செய்கிறது. நம் நாட்டில் பத்துப் பேர்களில் மூன்று பேர் இரவு உணவு இல்லாமல் உறங்கச் செல்கின்றனர் என்பது கசப்பான உண்மையாகும்.
 இளமையில் வறுமை கொடியது என்பார் ஒளவைப்பாட்டி. ஆனால் முதுமையில் வறுமை என்பது கொடுமையிலும் கொடுமையாகும். யாராவது ஒருவாய் சோறு தரமாட்டார்களா என ஏங்கித் தவிக்கும் முதியவர்கள்தாம் எத்தனைப் பேர்?

    மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று- உணவு, உடை, உறையுள். இந்த வரிசையில் உணவு முதலிடத்தில் இருப்பதே அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. உணவால் ஆவது உடம்பு; உடம்பால் ஆவது உயிர். இதை நானாகச் சொல்லவில்லை. நம் பூட்டாதி பூட்டன் திருமூலர் சொல்லுகிறார்:

      “உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே”
      “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்”

உணவைத் தெய்வமாக வழிபடுபவர்கள் நாம். உணவை அன்னபூரணியாக, அன்ன லட்சுமியாகப் பார்க்கிறோம்.
  “ஆத்துக்குள்ள இறங்கி அரகரா என்றாலும்
   சோத்துக்குள்ள இருக்குதடா சொக்கலிங்கம்”

என்று பாடினார் ஒரு புலவர். சென்ற ஆண்டு சென்னையைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தின்போது வெள்ளநீர் சூழ வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கையில் கிடைத்த ஒரு சோற்றுப் பொட்டலம் கடவுளாகவே தெரிந்தது.

    சோறு கிடைக்காமல் வருந்துவோர் ஒரு பக்கம்.  அந்தச் சோற்றை வீணடிப்போர் ஒரு பக்கம். விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் உணவை வீணாக்கும் மூடத்தனம் தொடர்கிறது.

    திருமண விருந்துகளில் இலையில் மீதம் வைக்கும் உணவுகளைப் பார்க்கும்போது மனம் பதைத்து நிற்பேன். யாருக்கும் பயன்படாமல் உணவை குப்பைத் தொட்டியில் போடுவது எவ்வளவு பெரிய பாவம்!

   ஆங்கிலத்தில் உணவு உண்பது தொடர்பாக ஒரு  பொன்மொழி உண்டு. அது எனக்கு மிகவும் பிடித்த பொன்மொழியாகும். அதை வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன். Take what you eat and eat what you take என்பதே அப் பொன்மொழி. பிடித்ததை மட்டும் கேட்டு வாங்க வேண்டும். அப்படி வாங்கியதை முழுமையாக உண்டுவிட வேண்டும்.

 நண்பர் சிலர் என் இல்லத்திற்கு வரும்போது என் இல்லத்தரசி வழங்கும் தின்பண்டங்களில் பாதியைத் தட்டில் விட்டுச்செல்வதைப் பார்த்து வருந்தியிருக்கிறேன். இனிப்பும் காரமும் என்ன விலை விற்கிறது? அவற்றை வீணடிக்கலாமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

  பள்ளி, கல்லூரி விடுதிகளில் விரயமாகும் உணவு ஏராளம் ஏராளம். காலை உணவு முடிந்ததும் போய்ப்பார்த்தல் கைகழுவும் சாலவத்தில் கிடக்கும் இட்டலிகள் எத்தனை எத்தனை! ஆனால் அதே ஊரில் ஓர் ஏழைக்  குழந்தை ஒரே ஒரு  இட்டலிக்காக ஏங்கித் தவிக்கும்.

  வயிற்றுக்குத் தேவையானதைச் சாப்பிட வேண்டும். மனம் விரும்புவதை எல்லாம் சாப்பிடக்கூடாது. பசிக்காகப் புசிக்க வேண்டும்; சுவைக்காக மேலும் மேலும் சாப்பிடக் கூடாது. இந்த உலகில் உண்ணாமல் இறந்தவர்களைவிட அளவுக்கு அதிகமாக உண்டு இறந்தவர்களே  அதிகம். எனவேதான் பாரதி சொன்னான்:
“வயிற்றுக்குச் சோறிட வேண்டும்- இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்”

  பாரதி ஆசைக்கும் ஆடம்பரத்துக்கும் சோறு போடச் சொல்லவில்லை; வயிற்றுப் பசிக்குச் சோறிடச் சொன்னான். நமக்கு உறைக்கவில்லையே. நம்முடைய திருமண விருந்துகள் எளிமையாக இருக்க வேண்டும். அது நமது செல்வச் செழிப்பின் அடையாளமாக இருக்கக் கூடாது.

 பீட்சா, பர்கர் போன்ற பன்னாட்டு உணவு வகைகளுக்கு அடிமையாகி பாரம்பரிய உணவு வகைகளை ஒதுக்கிவிட்டோம். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன? பற்பல நோய்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துவிட்டோம்.

  எப்படி ண்ண வேண்டும் எவ்வளவு உண்ண வேண்டும் என்பது பற்றி வள்ளுவர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். குறைந்த அளவு உணவு உண்பவனுக்கு இன்பம்; வயிறு முட்ட உண்பவனுக்கு நோய்தான் வரும். இப்படி போனால் வராது என்று மூக்குப்பிடிக்க உண்பவனுக்கு ஒரு செல்லப்பெயரைச் சூட்டுகிறார். திருவாளர் இரையான் என்று சொல்லி வயிறு குலுங்கச் சிரிக்கின்றார் வள்ளுவர். அளவோடு உண்டால் அது உணவு; அளவுக்கு அதிகமானால் அது இரை!

    இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்

என்ன அருமையான குறள்!

   இன்று(16.10.16) உலக உணவு நாள். இந்த நல்ல நாளில் பின்வரும் உறுதிமொழிகளை ஏற்று நாளும் கடைப்பிடிப்போம்.

1.       என் மண்ணில் விளைந்த பருப்பு, தானியங்களால் ஆன எளிய உணவுகளை மட்டும் உண்பேன்; மைதா உணவு, பீட்சா, பர்கர் போன்றவற்றைத் தொடமாட்டேன்.

2.       பசிக்கு மட்டும் அளவோடு உண்பேன்; ஆசைக்காக உண்ணமாட்டேன்.

3.       உணவே உயிர் என்பதை உணர்ந்து அதை வீணாக்க மாட்டேன்.

4.       சாலையோர உணவகங்களில் விற்கப்படும் துரித உணவுகளை உண்ணமாட்டேன்.


5.       உணவை உண்ணத் தொடங்கும் முன் உணவளித்த இறைவன், உணவுக்கான மூலப்பொருள்களை விளைவித்த விவசாயி, விற்பனை செய்த வணிகர், சுவையாக சமைத்தோர் அனைவரையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்து நன்றி சொல்லி உண்ணத் தொடங்குவேன். 

4 comments:

  1. வயது பாரபட்சமின்றி அனைவரும் கடைபிடிக்கவேண்டியது. நன்று.

    ReplyDelete
  2. அய்யா, இம்மண்ணில் வாழும் மனிதர்களுக்கு எளிமையாக உணவு கிடைத்து விடுகிறது. அதற்கு காரணம் தங்களுக்குத் தெரியும். அதேசமயம் தங்கள் கட்டுரையின் நோக்கத்தைப் பற்றி சில செய்திகள் உங்கள் பார்வைக்கு. அய்யன் திருவள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் மிக நேர்த்தியாக உணவின் தேவைகளை, உணவு உண்ணும் அளவை, உணவை எங்ஙனம் உட்கொள்ளவேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழிலை மட்டுமே மையப்படுத்துகிறார். மனிதன் உண்ணுவதை விளைவிப்பது விவசாயி மட்டுமே. விவசாயி சேற்றில் காலை வைத்தால் தான் மனிதன் சோற்றில் கை வைக்கமுடியும். எந்த வகையில் பொருளீட்டீனாலும் அப்பொருளினால் வாங்கப்பட்ட உணவுப்பொருளைத்தான் உட்கொள்ளமுடியும் மாறாக பணத்தையோ, தங்கத்தையோ, வெள்ளியையோ உணவாக உட்கொள்ளமுடியாது. அடுத்து உணவுப்பதார்த்தங்களை அதன் மதிப்பறிந்து உண்ணவேண்டும். தேவையான அளவில் பெற்று இலையில் மீதமில்லாமல் உண்ண வேண்டும். இலையில் இட்ட பிறகு அய்யய்யோ நான் இதை உண்ணமாட்டேன் அதை உண்ணமாட்டேன் எனக் கூறுபவர்களைக் கண்டாலே கோபம் வரும். தங்களைப் போல நானும் இலையில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சிறிதும் வைக்காமல் உண்ணுவேன். நாகரிகம் கருதி இலையில் எந்த உண்ணும் பொருட்களையும் மீதம் வைக்க மாட்டேன். உண்ணும் பொருட்களை ஏதேனும் ஒரு விலை கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் அதை உற்பத்தி செய்வது தான் கடினம். இதனை அனைவரும் உணர வேண்டும். நீரும் நிலமும் மனிதனை வாழவைக்கும் தெய்வங்கள். ஆகையால் தான் நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களை வணங்கினர். வள்ளுவரின் மற்றுமொரு கருத்தை இங்கு கூறுகிறேன் ”நீரின்றி அமையாது உலகு” எனவும் கூறுகிறார். எனவே, வாழும் மனிதர்கள் இனியாவது உணவின் முக்கியத்துவம் அறியவேண்டும். நீரைப் பாதுகாக்கும் வழியைப் பின்பற்றுவோம். நிலத்தை மாசுபடாமல் பாதுகாப்போம். ”நுனிக்கொம்பேறி அடிமரத்தை வெட்டியதைப் போல” செயல்படாமல் உணவு உற்பத்தியில் அவரவர் இயன்ற அளவு முயற்சித்து உற்பத்தியைப் பெருக்குவோம்.
    டாக்டர்.ரா.லட்சுமணசிங்,
    பேராசிரியர்,
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கரூர்- 5

    ReplyDelete
  3. நண்பர் அவர்களுக்கு வணக்கம். உணவு விவகாரத்தில் தங்கள் கருத்து அவசியம் கடைபிடிக்க வேண்டியதே. இன்றைய சூழ்நிலையில் தங்களின் முதல் மற்றும் நான்காம் கருத்தைக் கடைபிடிப்பது சற்று கடினமென நினைக்கிறேன். எவ்வாறிருப்பினும் உணவு நாசமாவது அனுமதிக்கத்தக்கதல்ல. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  4. ஐயா,
    இன்றைய உலகம் நாகரிகம் என்னும் பெயரில் உணவை உதைத்து தள்ளும் போக்கில் செல்கிறது. சோற்றுக்காக தொழுதுண்டு வாழும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை தெளிவாக உணர்தியுள்ளீர்கள்.

    ReplyDelete