காதில் வந்து விழுந்த ஒரு செய்தியை நம்பவும் முடியவில்லை; நம்பாமலும்
இருக்க முடியவில்லை.
சுவாசிக்கும் மூச்சுக்காற்று
கெட்டு விட்டதால் மூச்சு முட்டுகிறதாம். அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று
நாள்கள் விடுமுறையாம். காற்றில் கலந்த தூசு மற்றும் உலோகத் துகள்களைப் போக்க
ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளிக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளாராம். இந்தக்
கூத்தெல்லாம் எங்கே நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? வேறு எங்கே? நம் நாட்டின்
தலைநகரான புது தில்லியில்தான்!
இன்னும் சில ஆண்டுகளில் மூச்சுக்காற்று
வியாபாரம் சூடு பிடிக்கப் போவது உறுதி. எங்குப்
பார்த்தாலும் இப்போது குடி தண்ணீர் குடுவைகள் விற்கப்படுவது போல ஆக்சிஜன் குடுவைகள் விற்கப்படும். மூக்கில்
பொருத்தப்படும் வென்ட்டிலேட்டர்களும் பெட்டிக் கடைகளில் விற்கப்படும். இரண்டையும்
வாங்கி முகத்தில் மூக்கில் பொருத்திக்கொண்டு
திரிய வேண்டியதுதான்.. பார்த்தால் இராமாயணத்தில் வரும் அனுமாருக்கும் நமக்கும்
பெரிய வித்தியாசம் இருக்காது.
பூமி தோன்றி கோடிக்கணக்கான
ஆண்டுகள் ஆகின்றன. இப்போது மட்டும் ஏன்
இந்த அவலநிலை ஏற்பட்டது?. இந்த மண்ணை, நீரை, காற்றை யார் கெடுத்தது?
நான் கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில்
தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோது. ஒரு
கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். மாணவர் ஆசிரியர் படைப்புகள் காட்சிக்கு
வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்திருந்தேன். காட்சிப்பொருள்கள்
செலவில்லாமலும் அதேசமயத்தில்சொல்லவிரும்பும் கருத்து பார்வையாளருக்கு எளிதில்
புரியும் வகையிலும் இருக்க வேண்டும் என காலை இறைவணக்கக் கூட்டத்தில் தெரிவித்தேன்.
மாவட்ட ஆட்சியர் கண்காட்சியைத்
திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே வந்தார். அந்த எட்டாம் வகுப்பு மாணவன்
ஆட்சியரிடம், “ஐயா, வணக்கம். அங்கே பாருங்கள்” என்றான்.
அது ஒரு சிறிய அறை.
“ஐயா, அந்த அறைக்குள் மெல்ல
செல்லுங்கள். இடதுபக்கம் திரும்பினால் ஒரு திரைச்சீலை தொங்கும். அதை விலக்கிப்
பாருங்கள். நமது பூமியைக் கெடுக்கும் ஒரு பயங்கர விலங்கை நீங்கள் அங்கே
பார்க்கலாம்” என்றான் அந்த மாணவன்.
மாவட்ட ஆட்சியர் வியப்பு மேலிட மெதுவாக
உள்ளே நுழைந்தார். கூடவே நானும் சென்றேன். நான் திரைச்சீலையை ஒருபக்கமாக
இழுத்தேன். அந்தப் பயங்கர விலங்கைக் காணும் ஆர்வத்தில் ஆட்சியர் ஆவலோடு எட்டிப் பார்த்தார்.
அசடு வழிய வெளியில் வந்தார்; நானுந்தான். அந்த மாணவனை அழைத்துக் கைகுலுக்கினார். “எக்சலண்ட்
எக்சிஹிபிட்” என்று கூறி ஒரு பேனாவைப் பரிசளித்தார். அவருடன் வந்த தாசில்தார்
உள்ளிட்ட பலரும் உள்ளே சென்று பார்த்துவிட்டு கிலோ கணக்கில் அசடு வழிய சிரித்தபடி
வெளியே வந்தனர்.
திரைக்குப் பின்னால் ஓர் ஆளுயர
நிலைக் கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. திரையை விலக்கிப் பார்த்தபோது அவரவர் உருவம் கண்ணாடியில் தெரிந்தது. ஆக
பூமியைக் கெடுக்கும் பயங்கர மிருகங்கள் மனிதர்களே என்பதை நன்கு உணர்த்திவிட்டான்
அந்த மாணவன்.
வாகனப் பெருக்கத்தால் காற்றுக்
கெட்டுவிட்டது. பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரும்புகையால் காற்று
மாசடைந்துவிட்டது. வயல்களில் கிடக்கும் வேளாண் கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துவதாலும்
குன்றெனக் குவிந்து கிடக்கும் நகராட்சிக் குப்பைகள் கொளுத்தப்படுவதாலும் உருவாகும் டையாக்சின் என்னும் நச்சு வாயு
காற்றில் கலக்கிறது.
அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்
ஃபிரிட்ஜ், ஏ.சி முதலியவற்றால் தீமை தரும் பசுங்குடில் வாயுக்கள் பலவும் காற்றில்
கலக்கின்றன. திறந்த வெளியில் கிடக்கும் மனிதக் கழிவுகளும் காற்றை
மாசுபடுத்துகின்றன.
மின் தகனக் கூடங்களை நாடாமல்
திறந்த வெளி எரி மேடைகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று சீர்கெட்டுப்
போகிறது.
இப்படி வரிந்து கட்டிக்கொண்டு
காற்றைக் கெடுப்பன மனித விலங்குகள்தாம். பிறகு “குத்துதே குடையுதே” என்று
ஓலமிடுவதும் அவைதாம்.
“காற்றுத் தேவனை வணங்குவோம்.
அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது.
நாற்றம் இருத்தலாகாது.
அழுகின பண்டங்கள் போடலாகாது.
எவ்விதமான அசுத்தமும் கூடாது.”
என்பது மகாகவி பாரதியாரின் அறிவுரை.
ஐயகோ! இதுவும் காற்றோடு காற்றாய் போய்விட்டதே!
முனைவர் அ.கோவிந்தராஜூ,
மனநல ஆலோசகர், கரூர்.
நல்ல பதிவு..
ReplyDeleteExcellent posting, sir. All the educational institutions must take steps to plant trees. Prof.Pandiaraj
ReplyDeleteஅனைத்துமே நாமே உண்டாக்கிகொள்வது ஐயா.
ReplyDeleteசுடும் உண்மை..
ReplyDeleteகாற்றுக்கும் வந்ததடா கேடு
ReplyDeleteஇதற்கு நாம் வைப்போம் கெடு
ஒரே தீர்வு மரம் நடு
இல்லையேல் ஆகும் நாடு சுடுகாடு.
அருமை ஐயா...
ReplyDeleteமனிதன் தன்னை அறியவில்லை; அதுதான் உண்மை. நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteமனிதன் தன்னை அறியவில்லை; அதுதான் உண்மை. நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteநல்ல கருத்துள்ள கட்டுரை. பாரதியின் காற்றுத்தேவனை இதுவரை யாரும் நினைவுபடுத்தியதில்லை. நன்றி.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
பஞ்சபூதங்களின் வடிவில் இப்பூமிப்பந்தில் மனித இனம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் ஒருவகையில் முன்னேற்றம் இன்னொருவகையில் இயற்கை அழிவிற்கு அறிவியலே காரணமாகிறது. ”கொடுத்தவனே பறித்துக்கொண்டானடி” என்ற பாடல் அடியைப் போன்று மெல்ல மெல்ல இயற்கை நம் கண் முன் அழிந்து கொண்டுவருகிறது. வாகனப்பெருக்கம் ஒரு முக்கியக் காரணம். அதில் வெளியேறும் வாயுக்களால் காற்று மாசடைகிறது. பெருவழிச்சாலைகளில் நீர்முள்ளித்(அரளி) தாவரங்களைச் சாலையின் மையத்தில் வைத்துப் பராமரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இச்செடிகள் அழகுக்கு அல்ல மாறாக காற்று மாசுக்களை அகற்றும் அரும்பணியைச் செய்துவருகிறது.மத்திய மாநில அரசுகள் சாலையின் நடுவில் இச்செடிகளை நட்டுப்பராமரிப்பதற்கு முன், இதை முதலில் கரூர் பகுதியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் சாலையின் மையத்தில் நட்டுப் பராமரித்தவர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தாளாளர் மதிப்புக்குரிய ’’வள்ளுவர் சீர் பரவுவார்’’ திரு.செங்குட்டுவன் அவர்கள். ஆகவே வேம்பு, புங்கன் போல இச்செடிகளும் அரும்பணியைச்செய்து வருகிறது. கவிஞர் வைரமுத்து தனது கவிதையில்காற்று மாசடைந்து விட்டது என்பதைச் சுட்ட, மனிதன் சுவாசிக்க எஃகினால் ஆன நுரையீரல் வேண்டும் என்பார். கண் கெட்ட பின்பு தான் சூரிய நமஸ்காரம் என்பது மனிதர்களின் பண்புகளில் ஒன்று. அதனால் இனியாவது மழையைப் பெறும் வழி, நீரைப் பாதுக்காக்கும் வழி, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து மண் வளத்தைப் பாதுகாக்கும் வழி, வாகனப்பயன்பாட்டைக் குறைத்து காற்றை மாசுபடுத்தாமல் இருக்கும் வழி என அனைத்து வழிகளையும் பின்பற்றி இயற்கையைப் பாதுகாத்து இயற்கையோடு இணைந்து வாழ்வோம். தன் வாழ் நாளில் ஒரு மரத்தையாவது நட்டுப் பராமரிப்போம். அய்யா பூமியின் எதிர்காலத்தைக் கட்டுரை ஆக்கியுள்ளார். விழித்துக்கொள்வோம்.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
கரூர் - 5